Last Updated : 08 May, 2016 02:31 PM

 

Published : 08 May 2016 02:31 PM
Last Updated : 08 May 2016 02:31 PM

ஈஷா குப்தா@இந்திய சாலைகள்: காட்டு நிலத்தில் கல்வியின் ஒளி பரவட்டும்!

(இந்தியா, பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் சவால்கள் மிகுந்த இந்திய‌ச் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் தனி ஒருத்தியாக வலம் வருகிறார் ஈஷா குப்தா. 37 வயதான ஈஷா குப்தாவின் மோட்டார் சைக்கிள் அனுபவங்கள் தொடர்கின்றன.)

“மனிதனைப் போல இயற்கை அத்தனை வேகமாய் முதுமை அடைவதில்லை. பருவ காலங்களின் சுழற்சியில் ஆண்டுதோறும் வசந்தம் வருகிறது” என்றார் சீனப் புரட்சியாளர் மாவோ. ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நுழைகையில் மரம், மலை, வளம் என இயற்கை யாவும் முதுமை அடைவதைக் கண்கூடாகப் பார்த்தேன். மத்திய, மாநில அரசுகள், பெருநிறுவன அடையாள அட்டைகளோடு வலம் வரும் மனிதர்கள் இயற்கையை அட்டைப்பூச்சி போல உறிஞ்சி கொண்டிருக்கின்றனர்.

கள்ளு, ஹாடியா, மவ்வா, மது!

பிஹாரின் பாகல்பூரில் இருந்து இந்தியாவின் கிழக்கு திசையில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள் புகுந்தேன். 2000-ம் ஆண்டு உருவான ஜார்க்கண்ட், வயதில் என்னைவிட இளைய மாநிலம். இந்தியில் ஜார்க்கண்ட் என்றால் ‘காட்டு நிலம்’. பெயருக்கு ஏற்றவாறு மாநிலம் முழுக்க மலையும், மரமும், அடர் வனமும் பரந்து விரிந்திருக்கின்றன. இங்குள்ள 24 மாவட்டங்களில் 22-ல் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஜார்க்கண்டில் கல்விப் பணியில் ஈடுபட்டிருந்ததால் எனக்குப் பெரிதாக பயமில்லை.

அதிகாலை வேளையில் ஜிக்கி நகரில் இருந்து மஹகாமா நோக்கிப் பறக்கையில் சாலை புதுப்பிப்புப் பணிகளின் காரணமாகக் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டேன். 25 கி.மீ. தூரத்தைக் கடக்க சுமார் இரண்டரை மணி நேரம் ஆனது. இந்தச் சாலையின் ஓரத்திலே பெரியவர்களும், சிறியவர்களும் பெரிய பானைகளில் கள்ளு, ஹாடியா, மவ்வா உள்ளிட்ட உள்ளூர் மது வகைகளை வைத்து விற்றுக்கொண்டிருந்தனர். கோடைக் காலம் என்பதால் பனை, தென்னை மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கள்ளை நிறையப் பேர் விரும்பிக் குடித்தனர். இதே போல பூ, பழங்களை ஊறவைத்துத் தயாரிக்கப்பட்ட மவ்வா, சென்னை சுண்ட‌க்கஞ்சி போல இருக்கும் ஹாடியா ஆகியவற்றை இளைஞர்கள் குடித்துக்கொண்டிருந்தனர். பிஹாரில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் அங்கிருந்து வந்து நிறையப் பேர் குடிப்பதால் எல்லையில் மது விற்பனை செம ஜோராக நடப்பதாகச் சொல்கிறார்கள்.

மஹகாமாவைக் கடந்து டியோகர் நோக்கிச் செல்கையில் மீண்டும் மோசமான சாலை. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஆங்காங்கே சிறு சிறு ஆறுகளும், ஓடைகளும் பாய்கின்றன. தார் வாசத்தை அறியாத நெடுஞ்சாலையில் மைக்கியை ஓட்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. மதிய உணவு நேரத்தைக் கடந்து தடதடத்துக் கொண்டிருந்ததால் கடும் பசி வாட்டியது. வழிநெடுகத் தேடியும் ஒரு சாலையோர ஹோட்டலும் கிடைக்கவில்லை. கடுமையான வெயிலில் 30 கி.மீ. பயணித்த பிறகு ஒரு தாபா சிக்கியது. அங்கு ஏற்கெனவே அனைத்தும் தீர்ந்துவிட்டாலும், புரோட்டா மாஸ்டர் பாபுலால் என் மீது கருணை காட்டினார். சூடாக மூன்று ஆலூ பரோட்டா, சாலட், மசாலா டீ, இரண்டு விதமான சட்னி என ருசியாகப் பரிமாறினார். பாபுலால் மாஸ்டரின் கைமணம் டியோகர் நகரில் அன்றிரவு உறங்கும்வரை நெஞ்சில் இருந்தது.

இயற்கையே கடவுள்!

‘கடவுளின் வீடு’ எனக் கொண்டாட‌ப்படும் டியோகரில் இருந்து பெட்லா நோக்கிப் பறந்தேன். பெரிய கட்டிடங்கள், வீடுக‌ளின் சுவர்களில் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி கையில் ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு விற்றுக்கொண்டிருந்தார். கிராமச் சாலைகளில் காட்டுத் தேனையும், கருமிளகையும், பீடி இலைகளையும், மூங்கிலில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களையும் விற்கப் பழங்குடிகள் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தனர்.

பெட்லா வனப்பகுதியில் புலி, யானை, கரடி உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இங்குள்ள பழங்குடிகள் கையில் கூர்மையான மூங்கில் வில் அம்பை வைத்திருக்கின்றன‌ர். செரோ மன்னரின் சிதிலமடைந்த கோட்டையையும், பெட்லா அருவியையும் காண நிறைய சுற்றுலாவாசிகள் இங்கு வருகின்றனர். இங்கு சாலையோரத்தில் உள்ள ‘ஷாலா’ என்ற பெண் தெய்வத்துக்குப் பழங்குடியின பெண்கள் விளக்கேற்றி, வினோத ஒலி எழுப்பியவாறு பூஜை செய்தனர்.

“இங்குள்ள மலை, மரம், மண், பாறை, காற்று என எல்லாவற்றிலும் எங்கள் பெண் தெய்வம் ஷாலா நிறைந்திருக்கிறாள். எங்கள் கூட்டுக்குள், எங்கள் பிள்ளைகளின் கனவுக்குள் வெடி வைக்கலாமா? தொழிற்சாலைகள் கட்டலாமா? கனிம வளங்களை வெட்டலாமா? இதில்தான் ஷாலா இருக்கிறாள். இதை விட்டு நாங்கள் எங்கே போக முடியும்? இதைப் பாதுகாக்க ஷாலா கொடுத்த தற்காப்பு ஆயுதமான‌ வில்-அம்பை இங்குள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் வைத்திருப்போம். ஆபத்து என்றால் அம்பைப் பயன்படுத்துவோம். ஆனால் உயிரே போனாலும் தவறான நோக்கங்களுக்காக அம்பைப் பயன்படுத்த மாட்டோம்” என ஒரு முதியவர் சொன்னதைக் கேட்கையில் உடல் சிலிர்த்தது.

சுரங்கத்தில் உறங்கும் கொடூரம்

பெட்லாவில் இருந்து பரக்கார் நதியையும், மிக மோசமான சாலையும் கடந்து ஹசாரிபாக்கில் நுழைந்தேன். ‘ஆயிரம் தோட்டங்கள்’ எனப் பெயர்கொண்ட இந்த ஊரில் நம்பிக்கை தரும் நிறைய நண்பர்களைச் சந்தித்தேன். பெண்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும், இந்தியாவைப் பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்காகவும் நீளும் எனது பயணத்தை விளக்கினேன். சென்னையில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா எனப் பாதி இந்தியாவைத் தனியொருத்தியாக பயணித்திருப்பதைச் சொன்ன போது அங்கிருந்த பெண்கள் மிரண்டனர். ‘இதே தன்னம்பிக்கையுடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும்’ என என்னை வாழ்த்தினர். முத்தம், அரவ‌ணைப்பு, வாழ்த்து அட்டை, பூங்கொத்து, சாமி கயிறு, திருநீறு என என் மீது அவர்களின் அன்பைப் பொழிந்தனர்.

“வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் ஜார்கண்ட் பெண்களுக்கு எதிரான வன்முறையில் முன்னிலை வகிக்கிறது. இந்தச் சிறிய மாநிலத்தில் மட்டும் 183 நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கின்றன.

சுரங்கத் தொழிலாளிகள் கடும் பனியிலும், வெப்பத்திலும் உயிரைப் பணயம் வைத்து கனிம வளங்களை வெட்டி எடுகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் கயிற்றில் தொங்கியபடி வேலை செய்கிறார்கள். தொழிலாளர்களின் உழைப்பில் அரசும், பெருநிறுவனங்களும் ஜொலிக்கின்றன. ஆனால் தொழிலாளர்களின் வாழ்க்கை வறுமையில் அல்லாடுகிறது. இதுவரை நடந்த சுரங்க விபத்துகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பலியாகியிருக்கின்றனர். இது தொடர்பான தெளிவான விவரமோ, விரிவான நடவடிக்கையோகூட எடுக்கப்படவில்லை” என கவிஞர் ஹாஜி பாலா சொன்னபோது கண்ணீர் துளிர்த்தது.

இந்திய அரசே இரக்கம் காட்டு!

முகம் தெரியாத எளிய மனிதர்களின் சொல்லப்படாத ஏராளமான கதைகளோடு அன்று காலை பெரும் வலியோடு விடிந்தது. ஹசாரிபாக்கில் இருந்து ஜார்கண்டின் தலைநகரான ராஞ்சி நோக்கிப் பறந்தேன். வழிநெடுக சைக்கிள், இழுவை வண்டி, ரிக்‌ஷா ஆகியவற்றில் நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை இளைஞர்கள் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் ஆகிய நகரங்களில் பொக்காரோ ஸ்டீல் ஆலை, டாடா ஸ்டீல் பிளான்ட், ஜாம்ஷெட்பூர் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நான் பயணித்த பெரும்பாலான சாலைகள் படுமோசமானவை. பல ஊர்களுக்கு இரவு ஏழு மணிக்கு மேல் பேருந்துகள் இல்லை. இரவு நேரத்தில் அரசுப் பேருந்துகள் அதிகாரபூர்வமாகவே வெளிமாநிலங்களுக்கு செல்வதில்லை. டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் காடுகளில் ஓடுகின்றன. பல ஊர்களில் தொடக்கப்பள்ளிகூட இல்லை. ஒரு சில இடங்களில் பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், கண்ணி வெடிக்குப் பயந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் ஏறக்குறைய 50 சதவீதம் பேர் படிப்பறிவற்றவர்களாக இருக்கிறார்கள். முக்கிய நகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் மருத்துவமனை இருந்தாலும் போதிய மருத்துவர்கள் இல்லை. 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களுக்கு இன்னும் மின்சாரம் போகவில்லை. பழங்குடிகளின் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இன்னும் இருண்ட கண்டங்களாகவே இருக்கின்றன.

இந்தக் காட்டு நிலம் முழுக்க மக்களிடம் ஏதோ இனம் புரியாத அச்சத்தையும், ஒருவிதப் பதற்றத்தையும் பார்க்க முடிந்தது. இத்தனை குறைகள் நிறைந்த தேசத்தைச் சூறையாட எண்ணற்ற கண்டெய்னர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாரைசாரையாக சென்றுக்கொண்டே இருக்கின்றன.

ராஞ்சியில் இருந்து அடுத்த மாநிலத்தை நோக்கி நகர்கையில் எல்லையில், ‘ஏ தேசமே! கையை அசைத்து உன்னிடமிருந்து விடைபெறுகிறேன். கவலையும் துயரமும் உன் முகத்தில் காணச் சகியேன்’ என்ற மாவோவின் கவிதை மனதில் அடித்தது. இந்திய தேசமே, ஜார்க்கண்ட் மக்கள் மீது இரக்கம் காட்டு!

(பயணம் தொட‌ரும்)

தொகுப்பு: இரா.வினோத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x