

கோயம்புத்தூரைச் சேர்ந்த மரத்தான் ஓட்டப்பந்தய வீரரும், சைக்கிள் ஓட்டுநருமான ஜி டி விஷ்ணு ராம், 99 நகரங்களை 99 மணிநேரத்தில் காரில் கடக்கும் சாதனை முயற்சியில் வெற்றி அடைந்துள்ளார். சென்னை-கொல்கத்தா-டெல்லி-மும்பை-சென்னை இடையிலான 5950 கிலோமீட்டர் தூர கார் பயணத்தை அவர் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி, ஜூன் 6ஆம் தேதி நிறைவு செய்தார். 103 மணிநேரத்தில் அதைக் கடந்ததே சாதனையாக இருக்கும் நிலையில், அதை 82 மணிநேரத்தில் கடந்து நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர் அவர் சைக்கிள் ஒட்டுவதில் ஒரு சாதனை நிகழ்த்தி இருந்தார். கடந்த மார்ச் 26 அன்று இரவு 7.23 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து தனது சைக்கிளில் புறப்பட்ட அவர், இடைநில்லாது சவாரி செய்து நான்கு மணி நேரம், 28 நிமிடங்கள், 19 வினாடிகளில் சேலத்தை அடைந்தார். அவர் பயணித்த தூரம் 161 கிலோமீட்டர். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றின் படி, தற்போது சைக்கிள் ஓட்டுவதில் 100 மைல்களை வேகமாகக் கடந்து சென்றவர் அவரே.
இலக்குகள்
1990களில் கல்லூரி நாட்களில் 95 கிலோ எடையுடன் அவர் இருந்தார். அப்போது தடகளப் பயிற்சியாளர்களுடன் மரத்தான் ஓட்டப் பயிற்சியைத் தொடங்கியபோது, காவல்துறை இயக்குநர் ஜெனரல் சி சைலேந்திர பாபுவின் உடற்பயிற்சி அவருக்கு உத்வேகம் அளித்தது. அந்த உத்வேகமே அவரை இன்று சைக்கிள் ஒட்டுவதிலும், நீண்ட தொலைவு கார் பயணங்களிலும் சாதனை படைக்க வைத்துள்ளது.
லாக்டவுனின் போது உடற்பயிற்சி கூடங்களும், நீச்சல்குளங்களும் மூடப்பட்டன. ஆரோக்கியத்திற்கு திடீரென்று முன்னுரிமை அளிக்கப்பட்டபோது, மக்கள் உடற்பயிற்சி நடவடிக்கையாகச் சைக்கிள் ஓட்டுவதைத் தொடங்கினார்கள். காரணம், சைக்கிள் ஒட்டுவது அந்த அளவுக்கு ஆரோக்கியமானதாகவும் வேடிக்கையானதாகவும் அனைத்து வயதினருக்கும் ஏதுவானதாகவும் இருந்தது. கரோனா காலகட்டத்தில் இவருடைய சைக்கிள் பயணம் இளைஞர்களை உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய ஊக்குவிப்பதாக இருந்தது.
விளையாட்டுகளில் குழந்தைகள்
கிரிக்கெட், டென்னிஸ் மட்டுமின்றி, பாலின வேறுபாடின்றி, விளையாட்டுகளில் குழந்தைகளைப் பெற்றோர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். “சைக்கிள் ஓட்டுதல், வாள்வீச்சு, தடகளம், பந்தயம், தற்காப்புக் கலைகள் என உடற்பயிற்சிகளில் பல உள்ளன. குழந்தைகள் எட்டு வயதிலிருந்தே விளையாட்டைப் பயிற்சி செய்யவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும் ஊக்குவிக்க வேண்டும். சரியான பயிற்சியுடன், அவர்கள் ஜூனியர் பிரிவுகளில் (15 வயதுக்குட்பட்டவர்கள்) எளிதில் தகுதி பெறலாம், இது மாநிலத்தையும் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும், ”என்று விஷ்ணு கூறுகிறார். அதன் காரணமாகவே தன்னுடைய கார் பயணத்தினூடே பல்வேறு இடங்களில் மேரி கோம், மிதாலி ராஜ், பிவி சிந்து உட்படப் பெண்களின் வெற்றிக் கதைகளைக் குழந்தைகளிடையே பகிர்ந்து, அவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு
இந்த ஆண்டு பிப்ரவரியில், கோயம்புத்தூர்-பாலக்காடு குதிரை சுரங்கப்பாதை வழியாக கோயம்புத்தூரிலிருந்து திருச்சூருக்கு 100 கிலோமீட்டர் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்தவர் விஷ்ணு. அவர் தனது சைக்கிளில் படங்களை ஏந்தி, கோவிட்-19 தடுப்பூசிக்காகப் பிரச்சாரம் செய்தார். முன்களப் பணியாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக பெங்களூரு-ஹைதராபாத்-நாக்பூர்-பெங்களூருவிலிருந்து 24 மணிநேர கார் பயணமும் அவர் மேற்கொண்டு உள்ளார். குழந்தைகளின் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோவையிலிருந்து கன்னியாகுமரி வரை 23 மணி நேரம் 53 நிமிடங்களில் 623 கிலோமீட்டர் தூரம் மிக நீண்ட சைக்கிள் பயணத்தையும் அவர் மேற்கொண்டு இருக்கிறார்.
”41 வயதில், சைக்கிளில் பயணித்து சாதனை அடையத் தகுதியுடனும், நம்பிக்கையுடனும், ஆரோக்கியத்துடனும் நானே இருக்கும்போது, இன்றைய இளைஞர்களைத் தடுப்பது எது?” என்று விஷ்ணு கேட்கிறார். இருப்பினும், இத்தகைய சவாரிகள் எளிதானவை அல்ல; பாதுகாப்பான சாலைகள், சைக்கிள் ஓட்டுதல் உள்கட்டமைப்பு போன்றவை நம் நாட்டில் இன்னும் மேம்பட வேண்டி உள்ளது. கொள்கை அளவில், நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு முறை சாலை அமைக்கப்படும்போதும் ஒரு சைக்கிள் பாதையையும் சேர்த்து அமைக்க வேண்டும். அதுவே பெண்களும், குழந்தைகளும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பாதுகாப்பான முறையில் சவாரி செய்யும் சூழலை ஏற்படுத்தித் தரும்.