

வெற்றிக்கான போராட்டத்தில் ‘தடையறத் தாக்க’ படத்தின் மூலம் நட்சத்திரமாக உயர்ந்தவர் அருண் விஜய். அதன் பிறகு ‘என்னை அறிந்தால்..’ , ‘குற்றம் 23’ ‘தடம்’, ‘மாஃபியா: சேப்டர் 1’ என வரிசையாக வெற்றிகளை ருசித்தவர், தற்போது, ஹரி இயக்கத்தில் ‘யானை’யாக வந்திருக்கிறார். வரும் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
படம் ரிலீஸ் ஆகும் முன்பே திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது?
ஓடிடி வந்துவிட்டாலும் ஒரு நடிகருக்கு திரையரங்கில் கிடைக்கும் கைத்தட்டல்கள்தான் வைட்டமின். ஒரு கதாபாத்திரத்துக்காக எவ்வளவு அடிபட்டு ரத்தம் சிந்தினாலும் அதையெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆக்கிவிடுவது ரசிகர்களின் பாராட்டுதான். கோவை, திருப்பூர். ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி என்று சுமார் 15 திரையரங்குகளுக்கு இயக்குநருடன் சென்றேன்.
‘யானை’ டிரைலர் திரையிட்டதும் ரசிகர்களைச் சந்தித்தோம். த்ரில்லர் வகை, சீரியஸ் கதாபாத்திரம் என்று சமீப ஆண்டுகளில் நடித்துக்கொண்டிருந்த என்னை இப்படியொரு படத்தில் பார்த்ததும் ரசிகர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தார்கள். ரசிகர்களுடன் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களையும் சந்தித்தேன்.
திருப்பூரின் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான ஸ்ரீசக்தி சினிமாஸில் கடந்த 51 ஆண்டுகளாக பணிபுரியும் ஒரு அம்மாவைச் சந்தித்தேன். கட்டிப் பிடித்துக்கொண்டார். எத்தனை பெரிய அர்ப்பணிப்பு அவருடையது. அவரிடம் ஆசியும் வாழ்த்துகளும் பெற்றதை மறக்க முடியாது. இவரைப் போன்று திரையரங்க கலாச்சாரத்தை வாழ வைப்பவர்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
இயக்குநர் ஹரி உங்களது மைத்துனர். நீங்கள் அவரது இயக்கத்தில் நடிக்க ஏன் இவ்வளவு காலம் ஆனது?
அவர் நட்சத்திரங்களுக்கு கதை எழுதிப் பழக்கப்பட்டவர். ஏ, பி. சி என ‘ஆல் கிளாஸ்’ ஆடியன்ஸுக்கு படமெடுப்பவர். சூர்யா, விக்ரம், விஷால் என்று வரிசையாகப் படங்களை ஒப்புக்கொண்டு அவர் பிஸியாக இருந்தார். அதனால் நான் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதற்கிடையில் எனக்கும் வரிசையாக வெற்றிகள் அமைந்ததால் இப்போது அவர் எழுதும் கதையை நான் தாங்குவேன் என்கிற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
எனக்காக அவர் எழுதிய கதையும் கதாபாத்திரமும் என்னை வேறொரு அருண் விஜயாக மாற்றிப் போட்டிருக்கின்றன. இதில் ரவி என்கிற கதாபாத்திரம் எனக்கு. வேட்டியை மடித்துக் கட்டாமல் படம் முழுவதும் வருகிறேன். ஆக்ஷனிலும் உணர்வுபூர்வ நடிப்பிலும் என்னை வேறு மாதிரி வார்த்துவிட்டார். அவரும் தன்னுடைய பாணியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்காக நிறைய ரத்தம் சிந்தினேன். அதில் மூன்றரை நிமிடம் கொண்ட சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி ஒன்றும் இருக்கிறது. எங்கள் வீட்டின் மாப்பிள்ளை என்னை இயக்கியதால் மட்டுமல்ல; கதையாலும் நடிப்பாலும் பிரம்மாண்டத்தாலும் ‘யானை’ எனக்கு ஸ்பெஷலான படம்.
‘டாக்டர் ஸ்டிரேஞ்ச்', ‘விக்ரம்’ போல உங்களுக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த ‘விக்டர்’ கதாபாத்திரத்தைக் கொண்டு தனியொரு திரைப்படத்தில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?
கௌதம் மேனன் சாரே அந்த ஐடியாவைக் கூறினார். அவர் நிறைய படங்களை முடித்துவிட்டு வரவேண்டியிருக்கிறது. ‘விக்டர்’ நிச்சயம் தனியாக வேறொரு களத்தில் வருவான் என்கிற நம்பிக்கை இருக்கிறது.