Published : 10 May 2016 11:44 AM
Last Updated : 10 May 2016 11:44 AM

வேலை வேண்டுமா?- ரூ.1 லட்சம் சம்பளத்தில் அரசு வங்கி வேலை

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 17 ஆயிரத்தும் மேற்பட்ட எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது வங்கி அதிகாரி (Probationary Officer) பணியில் 2,200 காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப முடிவுசெய்துள்ளது. வங்கி அதிகாரி பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு ஆகிய நிலைகள் உள்ளன. இரண்டுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும்.

என்ன கேட்பார்கள்?

முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், ரீசனிங் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். அடுத்த கட்டத் தேர்வான மெயின் தேர்வில் கொடுக்கப்பட்ட பதில்களிலிருந்து ஒரு பதிலைத் தேர்வுசெய்யும் (Objective Type) வடிவிலான கேள்விகளும், விரிவாக விடையளிக்கும் வகையிலான (Descriptive Type) வினாக்களும் இடம்பெற்றிருக்கும். இதில் ரீசனிங் மற்றும் கணினி அறிவு, டேட்டா அனாலசிஸ், பொருளாதாரம், வங்கி நிர்வாகம், ஆங்கில மொழி அறிவு ஆகிய 4 பகுதிகளில் இருந்து 200 கேள்விகளும், ஆங்கிலத்தில் விரிவான விடையளிக்கும் வினாக்களும் கேட்கப்படும்.

எங்கே, எப்படி?

முதல்நிலைத் தேர்வு ஜூலை 2 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மெயின் தேர்வானது ஜூலை 31-ம் தேதி தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். இத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட்டை ஆன்லைனில்தான் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும். தகுதியுள்ள பட்டதாரிகள் மே 24-ம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தைப் (www.sbi.co.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினருக்குத் தேர்வுக்காக இலவச முன்தயாரிப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது இதுகுறித்துக் குறிப்பிட வேண்டும்.

வங்கி அதிகாரி பணிக்கு தொடக்கநிலையில் மாதச் சம்பளம் ரூ.1 லட்சத்துக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடியாக அதிகாரி பணியில் சேருபவர்கள் பதவி உயர்வு மூலம் படிப்படியாக உயர்நிலை பணிகளுக்குச் செல்ல முடியும். வெளிநாடுகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் பணிபுரியும் வாய்ப்பும் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x