

கணிதம் அறிவியலின் உன்னதம்;. ஓர் அழகான படிப்பும்கூட.. மூளையைச் சுறுசுறுப்பாக்கும் திறன் அதற்கு உண்டு. இருப்பினும், கணிதம் என்றாலே கடினம் என்று எண்ணும் போக்கே பலரிடம் உள்ளது. கணிதம் மீது இருக்கும் பயம் காரணமாக, அதன் பக்கம் எட்டிப்பார்க்காத சிலரும் இருக்கின்றனர். கணிதத்தின் அடிப்படை புரிந்துவிட்டால் அதை விட எளிமையான பாடம் எதுவும் கிடையாது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கணிதம் தொடர்பான புரிதலை அதிகரித்து, அச்சத்தைக் களையும் விதமாக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்( ஐ.ஐ.டி) இணையதள வழியாக புதிய பயிற்சித் திட்டத்தைத் தொடங்க இருக்கிறது.
'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் ' என்பது அந்தப் பயிற்சி திட்டத்தின் பெயர். கணிதம் மூலம் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தப் பாடத் திட்டத்தைச் சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. 10 லட்சம் மாணவர்களுக்கு பயன் அளிப்பதை இலக்காக கொண்டிருக்கும் இந்தப் பயிற்சி நாட்டிலேயே முதன்முறையாக நடத்தப்படுகிறது.
'அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்'
இது குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் "இந்தியாவிலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இது வரவிருக்கும் நாட்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்தப் பாடத்திட்டத்தின் பலன்களை நாம் காண முடியும். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இது பெருமளவில் பயன் அளிக்கும். ஒரு பிரச்சினையை அறிவியல்பூர்வமாக அணுகி அதற்குத் தீர்வு காண வைப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம். 'அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்' என்பது இன்று நம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்று. இந்தப் பாடத்திட்டத்தில் அதைக் கணிதம் வாயிலாகச் சொல்லித் தரவிருக்கிறோம். கணிதத்தின் கண்டறியப்பட்ட, அறியப்படாத உண்மைகளைத் தர்க்கரீதியாகவும், விரிவாகவும் ஆர்வத்துடன் கண்டுபிடிப்பதன் மூலம் அத்தகைய சிந்தனை இதில் வளர்த்தெடுக்கப்படுகிறது” என்றார்.
ஆர்வம் அவசியம்
மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஆரியப்பட்டா கணித அறிவியல் நிறுவனரும் இயக்குநருமான பேராசிரியர் சடகோபன் ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முப்பது வருடங்களாக இந்தத் துறையில் பணியாற்றி வருபவர் இவர். இது குறித்து அவர் கூறுகையில் "கணிதத்தை வெறும் பாடமாக இல்லாமல், ஆர்வத்துடன் அணுகினால், நம் அறிவும் அதற்கேற்றாற்போல் மேம்படும். தர்க்கரீதியாகவும் பகுப்பாய்வு பகுத்தறிவுடனும் பாடத்தைப் புரிந்துகொண்டு ஒழுங்கோடும் ஆர்வத்தோடும் கணிதத்தைக் கற்றுக் கொண்டால், நமது சிந்தனையும் விரிவடையும். திறன்களை மேம்படுத்துவதும், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகிற்கு திறம்பட பங்களிப்பை வழங்குவதற்கு கணிதம் மிகவும் அவசியம். இந்தப் பாடத்திட்டத்தின் அடிப்படை நோக்கமும் இதுவே" என்றார்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம். நான்கு நிலைகளாக நடைபெற உள்ள இந்தப் பாடத்திட்டம் மாணவர்கள், பயிற்றுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கும்.
பாடத்திட்டத்தின் முதலாவது வகுப்பு ஜூலை 1, 2022 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு 24 ஜூன் 2022 அன்று நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பங்களைப் பதிவுசெய்யலாம்- https://www.pravartak.org.in/out-of-box-thinking.html
இதற்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது. பயிற்சி முடிந்து தேர்வின்போது மட்டும் ஒரு சிறு தொகை சான்றிதழுக்காக வசூலிக்கப்படும். இறுதித் தேர்வு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டும் நடத்தப்படும்.
பதிவு செய்ய : https://www.pravartak.org.in/out-of-box-thinking.html
விண்ணப்பப் பதிவு நிறைவடையும் நாள்: ஜூன் 24, 2022
பயிற்சி தொடங்கும் நாள்: ஜூலை 1, 2022