

உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியாதான். உலக பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 22 சதவீதம்.
இந்தியாவுக்கு அடுத்த இடத்தில்தான் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரேசில் போன்ற நாடுகள் வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் இந்திய பால்வளத் துறையின் வளர்ச்சி 6 முதல் 7 சதவீதம் வரை அதிகரித்துவருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2021-22ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா பால் உற்பத்தியில் 22 கோடி மெட்ரிக் டன் என்கிற நிலையை அடைந்திருக்கிறது.
அந்த அளவுக்குப் பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறது. மனித வாழ்க்கையில் பால் பிரிக்கவே முடியாத அத்தியாவசிய உணவுப் பொருள். பால் மட்டுமல்ல, பாலில் இருந்து தயாரிக்கப்படும் இதர உணவுப் பொருள்களும் தினசரி உணவில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. எனவே, உலகில் எந்தத் துறையில் வேண்டுமானாலும் வீழ்ச்சி ஏற்படலாம். பால் வளத் துறையில் மட்டும் வீழ்ச்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை. பால் வளத் துறையில் பணியாற்றும் வகையில் ஏராளமான படிப்புகள் உள்ளன. அவற்றைப் படிப்பதன் மூலம் நல்ல பணி வாய்ப்புகளையும் பெற முடியும்.
என்னென்ன படிக்கலாம்?
டெய்ரி தொழில்நுட்பம் தொடர்பாகப் பல படிப்புகள் வழங்கப்படுகின்றன. டெய்ரி தொழில்நுட்பம் என்பது அறிவியலும் பொறியியலும் கலந்த படிப்பு. பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை இதில் படிக்கலாம். இந்தப் படிப்பு உணவுத் தொழில்நுட்பத்தையும் பிராசஸிங் துறையையும் உள்ளடக்கியே இருக்கும். அதாவது பிராசஸிங், பேக்கேஜிங், விநியோகம், போக்குவரத்து, உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து எனப் பல பிரிவுகளையும் உள்ளடக்கிய படிப்புதான் டெய்ரி தொழில்நுட்பம்.
டெய்ரி தொழில்நுட்பப் படிப்புகள் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ போன்ற பிரிவுகளிலும் இந்தியாவில் வழங்கப்படுகின்றன. பி.டெக், பி.எஸ்சி., எம்.டெக்., எம்.எஸ்சி., பிரிவுகளில் இப்படிப்புகள் உள்ளன. பொதுவாக டெய்ரி தொழில்நுட்பம், பால் பதப்படுத்துதல், பால் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான படிப்பு தனித்துவமானது. ஏனெனில், குறிப்பிட்ட தயாரிப்புப் பொருட்கள், அவற்றின் ப்ராசஸிங் தொடர்பான அம்சங்களையும் சேர்த்தே இப்படிப்பு வழங்குகிறது. இதைப் படிப்பதன் மூலம் டெய்ரி தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், பால் மற்றும் பால் பொருட்களின் வளர்சிதை மாற்றம், சவ்வுத் தொழில்நுட்பம், ஆரோக்கியமான உணவு வகைகளின் நன்மைகள் போன்றவற்றை அறிய முடியும்.
என்னென்ன படிப்புகள்?
இந்தியாவில் சில கல்லூரிகள் பால் பண்ணை, கால்நடை தொடர்பான படிப்புகளையும் வழங்கி வருகின்றன. இவை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளாக வழங்கப் பட்டுவருகின்றன. டெய்ரி தொழில்நுட்பம், டெய்ரி வேதியியல், டெய்ரி நுண்ணுயிரியல், டெய்ரி பொறியியல், விரிவாக்கப்பட்ட டெய்ரி கல்வி, உணவுத் தொழில்நுட்பம், மரபணு மற்றும் இனப்பெருக்கம், விலங்கு உயிரி தொழில்நுட்பம், பால் உற்பத்தி, பால் உற்பத்தி மற்றும் மேலாண்மை போன்ற பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தகுதி
இளங்கலைப் படிப்புகளில் சேர விரும்புவோர் 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.டெக்., பி.எஸ்சி., படிப்புகளில் சேர கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வும் உண்டு. முதுகலைப் படிப்பில் சேர இளங்கலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி வாய்ப்புகள்
பால் வளத் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. பால் பண்ணைகள், பால் உற்பத்தி நிறுவனங்கள், பால்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பால் சாதன உற்பத்தி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணிக்குச் சேரலாம். பொதுவாகப் பால் தொழில்நுட்பவியலாளர், நுண்ணுயிரியலாளர், ஊட்டச்சத்து நிபுணர், பால்பண்ணை அலுவலர், பால்பண்ணை கண்காணிப்பாளர், தரக் கட்டுப்பாடு அலுவலர், பால் சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு மேலாளர், பால் உணவுப் பொருள் மேம்பாட்டு மேலாளர், பால் வர்த்தக மேலாளர் என ஏராளமான பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
சவால்
பால் என்பது ஒவ்வொருவரும் பருகும் ஓர் ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருள். எனவே, பாலும், பாலிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் தரமான முறையிலும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட வேண்டும். உற்பத்தியில் இந்த இரண்டையும் உறுதி செய்வதுதான் இத்துறையில் உள்ள மிகப் பெரிய சவால். எனவே, பணி வாய்ப்பு பெறுவோர் தரமான பாலையும் பால் பொருட்களையும் வாடிக்கையாளருக்கு வழங்குவது இந்தப் பணியின் முக்கியப் பொறுப்பு என்பதால், மிகவும் கவனமாகப் பணியாற்ற வேண்டிய பொறுப்பு இத்துறையில் உள்ளவர்களுக்கு உண்டு.
| எங்கே படிக்கலாம்? பால் வளம் தொடர்புடைய படிப்புகள் முன்புபோல அல்லாமல், இப்போது இந்தியா முழுவதும் பல கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன. தென்னிந்தியாவில் பெங்களூரு பால் அறிவியல் கல்லூரி, திருப்பதி பால் தொழில்நுட்பக் கல்லூரி, காக்கிநாடா பைடா பால் மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சூர் பால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருவனந்தபுரம் பால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பதி ஸ்ரீவெங்டேஸ்வரா கால்நடை கல்லூரி, வயநாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரி, இடுக்கி பால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றில் பால் வளம் தொடர்பான படிப்புகளைப் படிக்கலாம். |