

ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருக்கும். ஆனால், அவை வேறுபட்டவையாக இருக்கும். சிலருக்கு வித்தியாசமானவையாக இருக்கும். அப்படிப்பட்ட இளைஞர்தான் டோக்கோ-சான்.
‘சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும்’, ‘தொழிலதிபர் ஆக வேண்டும்’ என இளைஞர்கள் என்னவெல்லாம் ஆசைப்படுவார்கள்? ஆனால், இந்த டோக்கோ ஒரு நாய் ஆக ஆசைப்பட்டுள்ளார். சிறு வயதுக் கதைகளில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கிளி உடம்பில் புகுந்த அரக்கனின் கதையைக் கேட்டிருப்போம். புராணக் கதைகளில் இந்துக் கடவுளர்கள் பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார்கள். அப்படியாகத்தான் ஒரு நாய் உடம்பில் புகுந்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார் டோக்கோ. தனக்குப் பிடித்த, தான் மிகவும் நேசிக்கும் கோலீ என்னும் இன நாயாக மாற இவர் விருப்பப்பட்டுள்ளார்.
இதற்காக இவர், சென்னட் என்கிற நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த நிறுவனம் திரைப்படத் துறைக்கும் விளம்பரத் துறைக்கும் ஒப்பனை மாதிரிகளைச் செய்துதரும் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனத்தார் டோக்கோவின் ஆசையை நிறைவேற்றும் சவாலை ஏற்றுக்கொண்டனர்.
இதற்காக அந்த நிறுவனத்தினர் கோலீ இன நாயின் உடல் அமைப்பை மாதிரியாகக் கொண்டு வடிவமைப்புகளைத் தொடங்கியுள்ளனர். ஆனால், அந்த முயற்சி எளிதாக இருக்கவில்லை. இந்த ஒப்பனை வடிவமைப்புக்காக அந்நிறுவனத்தார் 40 நாட்கள் எடுத்துக்கொண்டனர்.
இதில் டோக்கோவுக்கு முழுத் திருப்தி. தன் விருப்பமான கோலீயாக உருண்டு புரண்டுள்ளார். நாய் வேடம் அணிந்த வீடியோவைத் தனது யூடியூப் அலைவரிசையில் பகிர்ந்துள்ளார். சென்னட் நிறுவனம் இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இரண்டும் சமூக ஊடகத்தில் வைரலாகின.
கோடிக்கும் மேலான பார்வைகளைப் பெற்றுவிட்டன. இந்த ஒப்பனை வடிவமைப்புக்காக சென்னட் நிறுவனம் இந்திய ரூபாயில் 12 லட்சம் கட்டணமாக வாங்கியுள்ளது. ஜப்பானிலும் இது பெரிய தொகைதான். தனது கனவுக்காக டோக்கோவும் துணிந்து செலவு செய்திருக்கிறார். இன்னும் அவருக்குப் பல ஒப்பனைக் கனவுகள் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இனி என்னவெல்லாம் அவதாரம் எடுக்கப் போகிறாரோ?