Last Updated : 03 Jun, 2022 01:04 PM

 

Published : 03 Jun 2022 01:04 PM
Last Updated : 03 Jun 2022 01:04 PM

3 ஜூன், உலக சைக்கிள் தினம்: புதுக்கோட்டை சைக்கிள் புரட்சி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் தலைமையில் நடைபெற்ற ‘பெண்கள் சைக்கிள் புரட்சி’ குறித்து, அறிவொளி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணம்மா தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

அறிவொளி இயக்கம் ஆரம்பிப்பதற்கான கூட்டம். அறிவியல் இயக்கம் சார்பாக சித்ரா, மாணிக்கத்தாய் இருவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். கூட்டத்தில் கல்லாதவர் எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டது. அதில் படிக்காதவர்களாகப் பெண்களே அதிகமாக இருந்தனர். ஆனால், அறிவொளியில் வேலை செய்வதற்கு அரசாங்கத்திலிருந்து ஒரு பெண்கூட வரவில்லை. பெண்களுக்குக் கற்றுக்கொடுக்க, பெண்கள்தான் அதிகமாக வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத். உடனே, ‘பெண்களால் ஒழுங்காகச் செய்ய முடியாது’ என்றார்கள் அங்கிருந்தவர்கள்.

புதுக்கோட்டை பெண்கள் சைக்கிள் பேரணி

“கடைசியில் உட்கார்ந்திருக்கிற மூணு பேரும் பேசாம இருக்கீங்களே… பெண்களால் முடியாதுன்னு சொல்றாங்க. முடியும்னு பதில் கொடுக்க வேண்டாமா?’’ என்று கேட்டார் மாவட்ட ஆட்சியர். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “அறிவொளியில் வேலை செய்ய மொபிலிட்டி முக்கியம். சித்ராவுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும். இவரைப் போன்ற பெண்களைக் கூப்பிட்டால் நல்லது” என்றேன்.

உடனே மாவட்ட ஆட்சியர், “சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களைத் தேட வேண்டாம். எல்லோருக்கும் சைக்கிள் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒரு வாரத்தில் கற்றுக்கொண்டு, அறிவொளியில் வேலை செய்ய வர வேண்டும்” என்றார்.

மாணிக்கத்தாய், கண்ணம்மா

இப்படித்தான் புதுக்கோட்டையில் பெண்கள் சைக்கிள் கற்றுக்கொள்ள விதை ஊன்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இவர் வந்ததிலிருந்தே பெண்களுக்கான 'மொபிலிட்டி' விஷயத்தில் மிகவும் அக்கறை எடுத்திருந்தார். திட்டங்களைச் செயல்படுத்த வருகிறவர்கள், மனு கொண்டு வருகிறவர்கள், அரசாங்க உதவி கேட்டு வருகிற பெண்களிடமெல்லாம் சைக்கிள் கற்றுக்கொண்டு வந்தால் செய்து தருகிறேன் என்று சொல்வார். பலரும் சைக்கிள் கற்றுக்கொண்டு வந்து, உதவி பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

அந்த யோசனையைத்தான் அறிவொளியிலும் செயல்படுத்தினார். முதல் வேலையாகப் பெண்களைத் திரட்டி, சைக்கிள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தோம். சைக்கிள் கற்றுக்கொள்வதற்காகவே பெண்கள் படிப்பதற்கும் முன்வந்தனர். ‘பெண்கள் சைக்கிள் ஓட்டினால் மழை வராது’ என்றெல்லாம் சொல்லி ஆண்கள் திட்டினார்கள், கிண்டல் செய்தார்கள்.

ஷீலா ராணி சுங்கத் ஐ.ஏ.எஸ்.

பெண்கள் எல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் சொன்னார்கள். உடனே கவிஞர் முத்துநிலவனை அழைத்து, ‘பெண்களை சைக்கிள் ஓட்ட வரச் சொல்லி ஒரு பாட்டு எழுதுங்க. அந்தப் பாட்டு, பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகணும். எல்லோரும் பாடணும்’ என்றார் மாவட்ட ஆட்சியர். அப்படித்தான் ‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி’ பாடல் உருவானது. மிகப் பெரிய அளவில் பிரபலமானது. பெண்கள் வயலில் நாற்று நட்டுக்கொண்டே இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பார்கள்.

கண்ணம்மா

ஒரு கிராமத்துக்கு மாவட்ட ஆட்சியர் சென்றபோது, 60 வயது ராதாமணி அம்மா போர்வெல் போட்டுக் கொடுக்கச் சொன்னார். சைக்கிள் ஓட்டிக் காட்டினால் செய்து தருகிறேன் என்றார். ஒரே வாரத்தில் சைக்கிள் கற்றுக்கொண்டார். அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் போர்வெல் போட்டுக் கொடுத்ததோடு, அந்த அம்மாவிடம் கிராமத்துப் பெண்களுக்கு சைக்கிள் கற்றுக் கொடுக்கவும் சொன்னார்.

மூன்றே மாதங்களில் ஒரு லட்சம் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள். சைக்கிள் கற்றுக்கொண்டதால் சமுதாயத் தடை விலகியது. ‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டோம் அண்ணாச்சி… வாழ்க்கை சக்கரத்தைச் சுத்திவிட்டோம் அண்ணாச்சி...’ என்ற பாடலும் பிரபலமானது.

புதுக்கோட்டை ‘சைக்கிள் புரட்சி’ கர்நாடக மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் 2016ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருக்கிறது.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x