

ஒருசிலருக்கு ஒரே முயற்சியில் வெற்றி வசப்படும். இன்னும் பலருக்கோ கஜினி முகமதுபோல தொடர்ந்து முயற்சி செய்தாக வேண்டியிருக்கும். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த எஸ். சதிஷ்குமார் இதில் இரண்டாம் ரகம். ஐந்து முறை ஐஏஎஸ் தேர்வில் தோல்வியடைந்து, ஆறாவது முயற்சியில் வெற்றி முத்திரையைப் பதித்திருக்கிறார் சதிஷ். இவர் ஒரு விவசாயி மகன்!
அண்மையில் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் சதிஷ்குமார் அகில இந்திய அளவில் 607-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றி விடாமுயற்சிக்குக் கிடைத்தது என்று அவர் நிச்சயம் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். அதுவும் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
கஜினி முயற்சி
ஒருசிலர் ஓரிரு முறை முயற்சி செய்துவிட்டு, வெற்றி கிடைக்கவில்லையென்றால் அதிலிருந்து விலகி, எது கிடைக்கிறதோ அதில் சமரசம் செய்துகொள்வர்கள்.
ஆனால், சதிஷ்குமார் வேற மாதிரி! அவருக்கு இந்திய உணவுக் கழகத்தில் வேலை கிடைத்த பிறகும்கூட ஐஏஎஸ் கனவுக்காக வேலையை உதறி தள்ளினார். ஐந்து முறை ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைந்தபோதும் குடும்பத்தினர் சோக கீதம் பாடாமல் உத்வேகம் அளித்தனர்.
அந்த ஊக்கத்தோடு ஆறாவது முறையாக முயற்சி செய்தவருக்கு வெற்றி வசமாகியிருக்கிறது. சரி, எப்படி சாதித்தார் சதிஷ்குமார்? “உண்மையில் மற்ற தேர்வுகளைப் போல ஐஏஎஸ் தேர்வு சுலபமானது அல்ல. மிகவும் கடினமானது.
ஐஏஎஸ் தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சின்ன வயதிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த கல்வி, குடும்பப் பின்னணி, பயிற்சி ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அது.
சிறு வயதிலிருந்தே ஐஏஎஸ் கனவோடு நான் வளர்ந்தேன். ஆனால் பிளஸ் 2 வரை தமிழ் வழிக் கல்வியில்தான் படித்தேன். அதன் பிறகு கோயம்புத்தூரில் பிடெக் பயோடெக்னாலஜி படிக்கும்போதுதான் ஆங்கிலத்தில் படிக்கத் தொடங்கினேன். சென்னைக்கு வந்து ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்தேன்.
முதல் இரண்டு முறை முதல் நிலை தேர்வான பிரிலிம்ஸிலேயே தோல்வியைத் தழுவினேன். மூன்று மற்றும் நான்காவது முறை மெயின் தேர்வு வரை முன்னேறினேன். ஐந்தாவது முறை நேர்காணல் வரை முன்னேறியும் இறுதியில் தவறவிட்டேன். ஆறாவது முறைதான் மூன்று நிலைகளிலும் வெற்றியைப் பதிக்க முடிந்தது.
ஆறாவது முறை வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மையத்தில் மாதிரி நேர்காணல் நடத்தித் தொடர்ந்து பயிற்சி அளித்தார்கள். நேர்காணலில் வெற்றி பெற அது பெரும் உதவியாக இருந்தது” என்று தனது தொடர் முயற்சியை எடுத்துரைக்கிறார் சதிஷ்.
இன்னும் முடியல…
சதிஷ்குமார் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா சுப்பிரமணிக்கு உதவியாக அவ்வப்போது இவரும் விவசாயம் செய்திருக்கிறார். தற்போது இவர் பெற்றுள்ள தரவரிசைப் பட்டியலின்படி ஐபிஎஸ் பணி கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியானால் ஐஏஎஸ் கனவு அவளோதானா எனக் கேட்டால், “அதை எப்படி விடுவது?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறார். “ஐபிஎஸ் பயிற்சியில் இருந்தபடி ஐஏஎஸ் தேர்வை மறுபடியும் எழுதுவேன். ஐஏஎஸ் ஆவேன்” என்று உறுதியாகச் சொல்கிறார்.
முடியும் வரை முயற்சி!