Last Updated : 01 Jun, 2022 04:55 PM

 

Published : 01 Jun 2022 04:55 PM
Last Updated : 01 Jun 2022 04:55 PM

மாற்றுத்திறனாளி: நேற்று ஆசிரியர், இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரி!

சமீபத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 48ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார் 29 வயது மாற்றுத்திறனாளியான ஆயுஷி. “பார்வையின்றிப் பிறந்தாலும் தன் வாழ்நாளில், அது ஒரு குறையாக இருந்ததில்லை” என்கிறார் அவர்.

டெல்லி அரசுப் பள்ளியில் உயர்நிலை மாணவர்களுக்கு வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஆயுஷி, கற்றுக் கொடுப்பதை வேலையாகப் பார்க்காமல் ஆத்மார்த்தமாகச் செய்துவருகிறார். படிக்கும்போது, பார்வை இல்லாததால் வாழ்க்கைப் பாதுகாப்புக்கு ஒரு வேலை என்பதே நோக்கமாக இருந்தது. 2016ஆம் ஆண்டுதான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் எண்ணம் வந்தது. ஆயுஷியின் தாயும் தந்தையும் அவர் விருப்பத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தார்கள். ஆயுஷியின் தாய் தான் பார்த்துவந்த வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, மகளின் லட்சியத்துக்குத் துணையாக நின்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்காக ஆயுஷி தான் பார்த்துவந்த ஆசிரியர் பணியை விடவில்லை. ஐந்தாவது முயற்சியில் 48ஆவது இடத்தைப் பிடித்துவிட்டார்! முதல் 50 இடங்களுக்குள் இந்த முறை தான் வந்துவிடுவேன் என்று உறுதியாக நம்பினார் ஆயுஷி. 48வது இடம் கிடைத்ததில் அவர் மட்டுமல்ல, அவர் பெற்றோர், கணவர், அவரிடம் படிக்கும் மாணவர்கள் எனப் பலரும் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டனர்.

“கல்வி என்பது அதிகாரம் அளிக்கக்கூடிய கருவி. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பெண்கள் கல்வியறிவு பெறப் பாடுபட விரும்புகிறேன். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் பணியாற்ற விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்த மக்களின் எண்ணங்களை மாற்ற முயல்வேன். மாற்றுத்திறனாளியாக இருப்பதால், இதைச் செய்ய இயலவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இயல்பானவர்களைவிட மாற்றுத்திறனாளிகள் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்குமே தவிர, அவர்களால் செய்ய முடியாத விஷயம் என்று ஒன்று இல்லை” என்கிற ஆயுஷி, ஆசிரியர் பொறுப்பிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பொறுப்பை விரைவில் ஏற்க இருக்கிறார்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x