உலக ரத்த புற்றுநோய் நாள்: முறையான சிகிச்சை ரத்த புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும்

உலக ரத்த புற்றுநோய் நாள்: முறையான சிகிச்சை ரத்த புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும்
Updated on
2 min read

ரத்த புற்றுநோய் குறித்த வதந்திகளைக் களைத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 28ஆம் தேதி அன்று உலக ரத்த புற்றுநோய் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நம் உடலில் ரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கத்தால் / பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்பே ரத்த புற்றுநோய். ரத்த அணுக்களின் இத்தகைய அபரிமிதமான வளர்ச்சியினால் உடலின் இயல்பான செயல்பாடுகள் முடங்கிவிடும். நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறனும் குறைந்துவிடும். நாட்கள் செல்ல, செல்ல இதன் அறிகுறிகள் தீவிரமடையும்.

எலும்பு மஜ்ஜை புற்றுநோய், வெள்ளையணுப் புற்றுநோய், நிணநீர் உயிரணுப்புற்றுநோய் ஆகியவை ரத்த புற்றுநோயின் மூன்று முக்கிய வகைகள்.

Multiple myeloma

இந்த வகையே எலும்பு மஜ்ஜை புற்றுநோயில் அதிக அளவில் காணப்படுகிறது. இது பிளாஸ்மா செல்களில் இருந்து தொடங்கும். நோயுற்றவர்களின் நோய்யெதிர்ப்பு ஆற்றலை இது முற்றிலும் அழித்துவிடும். இந்த வகை புற்றுநோய் ஒருவரைத் தாக்கியதும், அவரது உடலில் கட்டிகள் உருவாகும். எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும்.

லுகேமியா (Leukemia)

இது ரத்த வெள்ளை அணுக்களைத் தாக்கும். இது உடலில், அசாதாரண எண்ணிக்கையில் வெள்ளை அணுக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில், இந்த வளர்ச்சி ரத்தச் சிவப்பு அணுக்கள், ரத்த தட்டை அணுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியைப் பாதிக்கத் தொடங்கும். இதன் தாக்கம் விரைவாக இருக்கும். பல ஆண்டுகளாக இது உடலில் பரவிக் கொண்டிருப்பதை நாம் அறியாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு.

இதன் வகைகள்:

நாள்பட்ட லிம்போசைடிக் லுகேமியா - இது பெரியவர்களை மட்டும் பாதிக்கும்
கடுமையான லிம்போசைடிக் லுகேமியா - இது சிறுவர்களையும், பெரியவர்களையும் பாதிக்கும்
நாள்பட்ட மைலோஜெனஸ் லுகேமியா - இது அதிகமான பெரியவர்களைப் பாதிக்கும்.
கடுமையான மைலோஜெனஸ் லுகேமியா - இது சிறுவர்களையும், பெரியவர்களையும் பாதிக்கும்.

லிம்போமா

இந்த வகை, நிணநீர் அல்லது எலும்பு மஜ்ஜையில் தொடங்கும். லிம்போமா உடலில் கட்டிகளை உருவாக்கும். நோய்யெதிர்ப்பு ஆற்றலைக் குறைக்கும். லிம்போமாவில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.

ஹாட்ஜ்கின் லிம்போமா - இந்த வகை பி-லிம்போசைட்டுகளில் இருந்து தொடங்குகிறது.

ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமா - இது பி அல்லது டி செல்களில் தொடங்கும்.

ரத்த புற்றுநோயின் அறிகுறிகள்

  • காரணமின்றி திடீரென்று ஏற்படும் எடை இழப்பு.
  • களைப்பு அல்லது தீவிரமான சோர்வு.
  • அதிக வியர்வை, குறிப்பாக இரவில் ஏற்படுவது.
  • மூச்சுத் திணறல்
  • மீண்டும் மீண்டும் எளிதில் ஏற்படும் தொற்றுநோய்கள்.
  • மூட்டுகள், எலும்புகளில் வலி.
  • தோல் அரிப்பு
  • தோலில் தோன்றும் சிவப்புப் புள்ளிகள்
  • எளிதாக ஏற்படும் காயங்கள் / சிராய்ப்புகள்
  • இரத்த போக்கு.
  • தலை, கழுத்து, இடுப்பு, அல்லது வயிற்றில் புடைப்புகளோ வீக்கமோ உருவாகுதல்.

காரணங்கள்

ரத்த புற்றுநோய் முக்கியமாக டி.என்.ஏவில் ஏற்படும் பிறழ்வுகள் அல்லது குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பிறழ்வுகளின் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. குடும்ப வரலாறு, வயது, பாலினம், இனம், சுகாதாரம் தொடர்பான குறைபாடுகள் போன்றவை காரணிகளாக இருக்கலாம். சில வேதிப்பொருள்கள், கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலமாகவும் ரத்த புற்றுநோய் ஏற்படக்கூடும்.

கண்டறிதல்

பொதுவாக, ரத்த புற்றுநோயானது வேறு ஏதேனும் ஒரு நோய்க்கான ரத்தப் பரிசோதனையில் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. உங்கள் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர் பரிந்துரைக்கும் பின்வரும் சில பரிசோதனைகளின் மூலமும் இது கண்டறியப்படுகிறது.

இரத்தப் பரிசோதனைகள்

  • புற ரத்தமென் படலம்.
  • முழு ரத்த எண்ணிக்கை (எஃப்.பி.சி).
  • தொற்றுநோய் பாதிப்பு ஆய்வு / வைராலஜி சோதனை.
  • யூரியா
  • கல்லீரல் செயல்பாடு சோதனைகள்.
  • ஃப்ளோ சைட்டோமெட்ரி
  • எலும்பு மஜ்ஜை சோதனை

ஸ்கேன்கள்

  • எக்ஸ்-கதிர்கள் சோதனை
  • அல்ட்ராசவுண்ட்
  • சி.டி ஸ்கேன்
  • எம்.ஆர்.ஐ ஸ்கேன்

சிகிச்சை

  • கீமோதெரபி
  • கதிர்வீச்சு
  • அறுவை சிகிச்சை
  • தண்டு உயிரணு மாற்று அறுவை சிகிச்சை
  • மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள்
  • உயிரியல் சிகிச்சை.
  • நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை

வெல்ல முடியும்

ரத்தப் புற்றுநோய்க்கான காரணங்கள், நோயறிதல், சிகிச்சை முறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆய்வுகள் உலகெங்கும் நடைபெறுகின்றன. எந்நேரமும் நூற்றுக்கணக்கான மருந்தக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வுகள் திறனுள்ள சிகிச்சை முறைகள், நோய் மேலாண்மைக்கான சிறந்த வழிமுறைகள், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வழிகள், நோயின் தீவிரத்தைக் குறைக்கும் வழிகள், சிகிச்சைக்குப் பின்னரான கவனிப்பு போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இவை மேலும் மேம்படும். முக்கியமாக, இந்த நோய் எவ்வளவு கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும்; நோயை வெல்லவும் அது உதவக்கூடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in