Last Updated : 23 May, 2016 11:53 AM

 

Published : 23 May 2016 11:53 AM
Last Updated : 23 May 2016 11:53 AM

உறுதியான கார்களைத் தயாரிப்பது எப்போது?

தமிழகத்தில் நிகழ்ந்த மிகக் கோரமான சாலை விபத்துகளில் அதுவும் ஒன்று. தென்னகத்தைச் சேர்ந்த தொழில் குழுமத்தின் அடுத்த தலைமுறை ஆண்கள் அனைவருமே அந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர். மற்றொரு காரில் பயணித்த அவர்களின் மனைவிகள்தான் தொழிலை நடத்த வேண்டிய நிலை உருவானது.

மிகவும் சோகமான சூழலில் பொறுப்பேற்றவுடன் அவர்கள் செய்த முதல் காரியம், தங்கள் சொந்த உபயோகத்துக்கு ஏர் பேக் வசதி கொண்ட கார்களை இறக்குமதி செய்ததுதான். அடுத்ததாக ஒரே சமயத்தில் ஒரே காரில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பயணிப்பதில்லை என்று தீர்மானித்ததுதான்.

பெரிய தொழில் குழுமம் என்பதால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து காரைப் பயன்படுத்துவது சாத்தியம். ஆனால் அன்றாட போக்குவரத்துக்கு, எப்போதாவது மாதம் ஒரு முறை குடும்பத்துடன் அருகிலுள்ள ஊர்களுக்குச்சென்று வருவதற்கு காரைப் பயன்படுத்தும் மத்திய தர குடும்பத்திற்கு இது சாத்தியமா?

குடும்ப போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான வாகனமாக கார்கள் மாறிவிட்டன. இந்நிலையில் கார் பயணம் பாதுகாப்பானதா, ஓரளவுக்கு பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டதாக கார்கள் தயாரிக்கப்படுகின்றனவா என்பதற்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த வாரம் மும்பையில் சில கார்களின் ஸ்திரத் தன்மை சோதிக்கப்பட்டது. சர்வதேச புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தின் (குளோபல் என்சிஏபி) கீழ் இந்தியாவில் தயாராகும் 5 கார்கள் சோதிக்கப்பட்டன.

ரெனால்ட் க்விட், மாருதி சுஸுகி செலரியோ மற்றும் எகோ, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும ஹூண்டாய் இயான்.

`கிராஷ் டெஸ்ட்’ எனப்படும் விபத்தின் போது இந்த கார்களில் பயணிப்பவர்கள் உயிர் பிழைப்பது எந்த அளவு சாத்தியம் என்பதை அறிவதற்காக இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன.

ரெனால்டின் க்விட் மாடலில் 3 கார்கள் இத்தகைய சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இதில் ஒரு மாடல் ஏர் பேக் உள்ள மாடலாகும். இந்த மூன்று மாடல் கார்களும் விபத்துக்குள்ளானால் பெரியவர்கள் தப்பிப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாக இருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவித்தன.

இந்த மூன்று மாடல் கார்களுக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண் (ஜீரோ ரேட்டிங்) வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்திராவின் ஸ்கார்பியோ மாடல் கார்களும் இதே மதிப்பெண்ணைத்தான் (0) பெற்றன. ஆனால் இந்தக் காரில் குழந்தைகள் பாதுகாப்புக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறி 2 ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காரில் பயணிக்கும் பெரியவர்களில் ஒருவருக்கு மிக மோசமான காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஏர் பேக்ஸ் இல்லாத ஹூண்டாய் இயான் மாடல் காரும் இதே நிலை யைத்தான் சந்தித்தது. பெரியவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்ற போதிலும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் 2 ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல மாருதி சுஸுகியின் ஏர் பேக் இல்லாத செலரியோ மற்றும் எகோ கார்களும் கிராஷ் டெஸ்டில் புள்ளிகளைப் பெறவில்லை.

இந்த சோதனை அனைத்துமே ஒரு விபத்து நடந்தபிறகு காரின் வெளிப்புற அமைப்பு எந்த அளவுக்கு ஸ்திரமாக உள்ளது என்பதை சோதிப்பதற்கு நடத்தப்பட்டவை. அவை எந்த அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் உணர வேண்டும் என்பதுவும் முக்கியம் என்று குளோபல் என்சிஏபி-யின் செயலர் டேவிட் வார்டு தெரிவித்தார்.

உலகம் முழுவதும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், பாதுகாப்பு அம்சங்களைத் தவிர்த்துவிட்டு கார் தயாரிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்தபட்சம் இந்த கிராஷ் டெஸ்டில் தேர்வு பெறும் அளவில் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய கார்களின் ஸ்திரத்தன்மை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இதில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள் என நம்புவதாக டேவிட் குறிப் பிட்டார்.

குளோபல் நிறுவனம் நடத்திய சோதனை முடிவுகள் இந்திய அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு அம்சங் களுக்கு முற்றிலும் மாறாக உள்ளது. இந்திய அரசு வகுத்துள்ள விதிமுறை கள்படி தாங்கள் வாகனங்களைத் தயாரிப்பதாக அனைத்து நிறுவனங் களும் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இதுபோன்ற சோதனைகள் நிர்ணயிக்கப்பட்ட வேகமான 45 கி.மீ. வேகத்தில் நடத்தப் படும். ஆனால் குளோபல் என்சிஏபி சோதனை அதிக வேகத்தில் நடத்தப் பட்டதாக இத்தறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் இதில் மேலும் கவனம் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் இதேபோன்ற சோதனைகள் நடத்தப் பட்டன. அப்போது மாருதி ஆல்டோ 800, டாடா நானோ, ஃபோர்டு பிகோ, ஹூண்டாய் ஐ10, ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட கார்களும் பூஜ்ஜிய மதிப்பெண்ணையே எடுத்தன.

பாரத் என்சிஏபி என்ற பெயரில் இதுபோன்ற விபத்து சோதனைகள் 2017 முதல் நடத்தப்பட உள்ளன. இது அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. முன்பகுதி மற்றும் பக்கவாட்டில் இத்தகைய சோதனை நடத்தப்பட உள்ளன.

அதே போல உயிர் காக்கும் ஏர் பேக் அனைத்து கார்களிலும் கட்டாயமாக்கப்படும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். புணேயில் செயல்படும் ஆட்டோமோடிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா (ஏஆர்ஏஐ) இத்தகைய சோதனையை நடத்த பரிந்துரைத்துள்ளது. இந்த சோதனை 64 கி.மீ. வேகத்தில் நடத்தப்பட வேண் டும் என குறிப்பிட்டுள்ளது.

காரில் பயணிப்பவர்கள், நடைபாதையில் செல்வோர் ஆகியோரின் பாதுகாப்புக் கேற்ப கார் வடிவமைப்பு இருக்க வேண்டும். இந்த தர பரிசோதனையில் வெற்றி பெறும் கார்களுக்கு 5 ஸ்டார் அளிக்கப்படும். 2017-ம் ஆண்டு அக்டோபர் முதல் இது அமலுக்கு வர உள்ளது. அனைத்து கார்களும் இந்த சோதனையை நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும்.

சோதனைகளில் மதிப்பெண் எடுப்பதோ அல்லது எடுக்காமலிருப்பதோ பிரச்சினையில்லை. பயணிகளின் உயிரைக் காக்கும் வகையில் வாகனங் களைத் தயாரிக்கும் பொறுப்பு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உள்ளது என்பதை உணர வேண்டும்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x