Published : 26 May 2022 12:58 PM
Last Updated : 26 May 2022 12:58 PM

முடிவானது விக்ரம் படத்தின் 3ஆம் பாகம்!

கட்சி அரசியல், பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றில் பிஸியாக இருந்துவந்த உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரவிருக்கிறது ‘விக்ரம்’ திரைப்படம். இந்தப் படத்தில் கமல் ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘அஞ்சாதே’ நரேனும் நடித்துள்ளார். சூர்யா கௌரவத் தோற்றத்தில் வருகிறார். அனிருத் இசையில் இதுவரை 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், வெளியீட்டுக்கு முன்பே, திரையரங்க வெளியீட்டு உரிமை, டிஜிட்டல் உரிமைகள், பிற மாநில உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள் மூலம் வியாபாரம் ரூபாய் 175 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியிருப்பதாக ராஜ்கமல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரம் படத்தின் தமிழ்நாட்டுத் திரையரங்க வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியிடுகிறது. இதையொட்டி, இப்படத்தின் ஊடகச் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் கமல் ஹாசனுடன் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மட்டும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்: “வித்தியாசமான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறோம். ‘16 வயதினிலே’ படத்தில் நடித்தபோது பாரதிராஜா புதிய இயக்குநர். அதைப் போல் இப்போது லோகேஷ் கனகராஜ் என்கிற புதியவரின் இயக்கத்தில் நடித்திருக்கிறேன். அன்றும் இன்றும் நான் இளைஞர்களுடன் பணியாற்றுகிறவன். எனது ரசிகர்களை நான்கு வருடங்கள் காக்கவைத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். விக்ரம் 5 மொழிகளில் வெளியாகிறது. அதற்கான பரப்புரையில் ஈடுபடப் பல நகரங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். அதற்கு முன் எம்மவர்களாகி உங்களிடம் வாழ்த்துகளைப் பெற்றுப் புறப்படவே நாம் முதலில் சந்தித்திருக்கிறோம்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய ரசிகர்கள். படப்பிடிப்பின்போது என்னைப் பாராட்டிக்கொண்டே இருந்தார்கள். விக்ரம் படம் பெரிய விலைக்கு விற்றிருக்கிறது. விக்ரம் படத்தின் தலைப்பை லோகேஷ் கனகராஜ்தான் கேட்டு வாங்கினார். அன்று ‘விக்ரம்’ (1986) படத்தை ராஜசேகர் இயக்கினார். தற்போது, இந்த ‘விக்ர’மை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இதை இரண்டாம் பாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ‘விக்ரம்’ படத்தின் 3ஆம் பாகத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார். அதை எப்போது தொடங்குவது என்பதை லோகேஷ் கனகராஜ்தான் சொல்ல வேண்டும். ‘இந்தியன் 2’ படம் கண்டிப்பாக இருக்கிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார். மேலும் ‘விக்ரம்’ படத்தின் மக்கள் தொடர்பாளரான டைமண்ட் பாபுவை மேடையில் ஏற்றி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கமல், “ மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபுவுக்கு இது 600-வது படம். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறினார்.

மக்கள் தொடர்பாளர் ‘டைமண்ட்’ பாபுவுக்குப் பாராட்டு

கமலுக்கு முன்னதாகப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “கமல் சாரின் படங்களைப் பார்த்தே சினிமா கற்றுக்கொண்ட அவருடைய ரசிகன் நான். நான்காவது படத்திலேயே அவரை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்த கமல் சாருக்கு என் நன்றி” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x