

நாம் எல்லோரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவோம். அதற்காக நம் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆனால், உடல் போன போக்கில் அப்படியே வாழ்ந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?
கட்டுப்பாடுகளுடன் சில பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தால்தான் நாம் வாழ்க்கையில் உருப்பட முடியும். உடலும் மனமும் ஆரோக்கியம் ஆகும். அப்படியானால்தான் நீண்ட நாள் நாம் வாழ முடியும்.
நம்முடைய மரபில் சித்தர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்ததாக நாம் படித்திருப்போம். அவர்கள் தங்கள் தவ வலிமையால் உடலைக் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். அதனால் இதெல்லாம் சாத்தியம் ஆனது. இப்படி நோயின்றி நீண்ட நாள் வாழத் தேசியச் சித்த மருத்துவக் கழகம் சில யோசனைகளைச் சொல்கிறது.
நீண்ட நாட்கள் நோயின்றி வாழச் சித்த மருத்துவம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள்
1. இரவில் பசும்பாலையே அருந்த வேண்டும்.
2. எண்ணெயிலிட்டுத் தலை முழுகும் போதெல்லாம். வெந்நீரிலே குளிக்க வேண்டும்.
3. பகற் பொழுதில் உறக்கம் கூடாது.
4. இயற்கை உபாதைகளை நீண்ட நேரம் அடக்கக் கூடாது.
5. முன்நாள் சமைத்தகறி, அமுதாக இருந்தாலும் உண்ணக் கூடாது.
6. பசியில்லாமல் உணவு அருந்தக் கூடாது.
7. மந்தம் தரும் தயிரை இரவில் தவிர்க்க வேண்டும்.
8. உண்டபின் சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்.
9. மூன்று நாட்களுக்கொரு முறை கண்களுக்கு மை இடவேண்டும்.
10. உறங்கும்போது இடக்கையை கீழமைத்து உறங்க வேண்டும்.
11. நீரை நன்றாகக் காய்ச்சி அருந்த வேண்டும்.
12. நெய்யை உருக்கியே உணவில் சேர்க்க வேண்டும்.
13. தயிரை நீர் மோராக்கியே உணவில் சேர்க்க வேண்டும்.
14. தினமும் இளம் வெயிலில் உடலில் படும்படி செய்ய வேண்டும்.
15. கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கை மட்டும் உண்ணலாம்.