Published : 25 May 2022 12:41 PM
Last Updated : 25 May 2022 12:41 PM

கார்த்தி 45 | வந்தியத் தேவனின் குதிரைக் குளம்பொலி கேட்கிறது!

அறிமுகப் படத்தில் எல்லோருக்கும் அடர்த்தியான கதாபாத்திரம் அமைந்துவிடுவதில்லை. ‘பருத்தி வீர’னில் கார்த்திக்கு அந்த அதிர்ஷ்டம் அமைந்தது. முதலில் சண்டியராகவும், பிறகு காதலில் உருகி உருக்குலைந்து போகிறவராகவும் ஒரு கதாபாத்திரத்தின் இரட்டைப் பரிமாணத்தை ஈடுபாட்டோடு ரசித்துச் செய்திருப்பார் கார்த்தி. ஒரு சிறந்த நடிகன் என்பவன் தன்னுடைய கதாபாத்திரத்தை மட்டும் உள்வாங்கிகொண்டு அதை வெளிப்படுத்துவதில் மட்டும் சிரத்தை காட்டுபவன் அல்ல. தன்னுடன் நெருக்கமாகப் பயணிக்கும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி நிலைகளுக்கு இயைந்துகொடுத்து தனது கதாபாத்திரத்தின் வடிவமைப்பு கோரும் உணர்ச்சி நிலைகளை எதிரொலிப்பவன். இந்த வித்தையை ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக, தவறவிட்டுவிடாமால் வெளிப்படுத்தத் தெரிந்தவன். அதை அறிமுகப் படத்திலேயே தன்னால் முடியும் என்று காட்டினார் கார்த்தி.செவ்வாழைக்கும் முத்தழகுக்கும் அவர் இயைந்துகொடுத்த நடிப்பு அப்படிப்பட்டதுதான். முத்தழகை முழுமையாக முன்னிறுத்த படத்தின் இயக்குநர் அமீர் உதவியிருப்பார் என்றாலும் பருத்திவீரனாக கார்த்தியின் நடிப்பு, ப்ரியாமணிக்கு பெரும் உயிர்த்துடிப்பைக் கொடுத்திருக்கும்.

3 ஆண்டுகளை மீட்டுக்கொண்ட முத்து!

அறிமுகப் படம் அமோக வெற்றிபெற்றபோதும், இரண்டாவது படத்தின் வெற்றியே ஒரு நடிகனின் இருப்பை உறுதி செய்யும். அந்த வகையில், முதல் படத்தின் வெற்றியில் விளைந்த புகழைப் பயன்படுத்தி பல படங்களில் நடித்து, அவசர அறுவடையில் இறங்காமல், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்காக 3 வருடங்களை அர்ப்பணிப்புடன் ஒதுக்கிக்கொடுத்தார் கார்த்தி. 363 நாட்கள் படப்பிடிப்புடன் எண்ணற்ற கலைஞர்களின் பங்கேற்பு, பங்களிப்புடன் வெளியான அப்படம்தான் புத்தாயிரத்தின் முதல் பிரம்மாண்டம். உள்ளடக்கத்திலும் அதில் பொதிந்திருந்த செய்திகளிலும் பிரம்மாண்டம் காட்டிய ‘ஆயிரத்தில் ஒருவ’னியில் துறைமுகக் கூலியாள் முத்துவாக, எந்தவித நாயக மேன்மையும் இல்லாமல், ஆனால், தாமோரு மேன்மைமிகு சோழத் தூதுவன் என்பதை அறியாமல், திரையில் நாயக மேன்மையையே வாழ்வாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் ரசிகனாக, அந்த ஆபத்தானப் பயணத்தில் உடன் பயணிக்கும் அத்தனை கதாபாத்திரங்களையும் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாக்கியபடி, சூழ்நிலை உருவாக்கும் அவல நகைச்சுவையைத் தன் வாய்மொழியாகவும் உடல்மொழியாகவும் கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்தியிருந்தார். முத்துவைக் கொண்டு இயக்குநர் உருவாக்க நினைத்த நுணுக்கங்களுக்கு கச்சிதமாகக் தன்னைக் கொடுத்து அதில் ‘இயக்குநரின் நடிகராக’வே ஆகியிருந்தார். முதல் படத்துக்குப் பின் மூன்று ஆண்டுகள் கழித்து வந்தாலும் தன் திறனைத் திறம்படக் காட்டிவிட்டார்.

வசூல் களமும் ரசிகர் குழாமும்

முதல் இரண்டு படங்கள் கார்த்தியை புடம் போட்டன என்றால், மாஸ் மசாலா சினிமாவுக்கும் தாம் தகுதியான நடிகன்தான் என்பதை, ‘பையா’, ‘நான் மகான் அல்ல’, ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘பிரியாணி’ படங்களின் வழியாகக் காட்டி தன்னை வசூல் களத்தில் ஒளிரும் நட்சத்திரமாக நிலை நிறுத்திக்கொண்டார். பெரும் ரசிகர் குழாமையும் சம்பாதித்துக்கொண்டார்.

அதன்பிறகு ‘மெட்ராஸ்’ படத்தில், நன்கு படித்த வடசென்னை இளைஞன் காளியாக, கார்த்தி நடிப்பில் காட்டிய வாழிட யதார்த்தம், ‘இதோ வந்துட்டார்ப்பா நம்ம மனசுக்கு நெருக்கமான கார்த்தி’ என்று பார்வையாளர்களைச் சொல்ல வைத்தது. வடசென்னையையே முதன்மைக் கதாபாத்திரமாக ஆக்கி, அங்குள்ள ஒரு சுவரை ‘ஓவியக் கித்தானாக’ மாற்றி, அதில், அப்பகுதியின் பூர்வகுடிகளாக இருந்தும் விலக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எளிய விளிம்பு மக்களை ஆட்டுவிக்கும் கட்சி அரசியலின் ரத்த ஆட்டத்தை, வட்டாரத் தூரிகையில் தொட்டு அசலாக வரைந்து காட்டிய படம். அதில் முதல் பாதியில் ஹீரோயிசம் துறந்து, அரட்டை, காதல், துயரம், ரௌத்திரம் எனப் பலவித உணர்ச்சிகளையும் பொருத்தமான உடல் மொழியுடன் வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி.

கிராமியக் களத்தில் என்றும் கொம்பன்

‘ஒருவரி’யில் உயிர்த்துடிப்பு மிக்க கதையாக இருந்தும், மாமனார் - மருமகன் கதாபாத்திரங்களை வலுவாகப் படைத்தும், அடிதடிச் சந்தையாக தேங்கிப்போயிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை, தன் துடிப்பான நடிப்பால் அதைக் குறிப்பிடத்தக்கப் படமாக மாற்றிக்காட்டியிருந்தார் கார்த்தி. ‘பருத்தி வீரன்’ தந்த பிம்ப இழையில் இன்னும் கார்த்தியைப் பொருத்திப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு, ‘கொம்பன்’ கார்த்தி தன்னுடைய எகத்தாளமான நடிப்பால் பெரிய ட்ரீட் கொடுத்திருந்தார். சாதிய அமைப்பில், ஆண் மையச் சமூகத்தில் உள்ள ஒரு முரட்டு கிராமியன் எப்படி இருப்பான் என்பதை கார்த்தி கொம்பையா பாண்டியனாகக் கிடுகிடுக்கக் காட்டியிருந்தார் நடிப்பில்! ராஜ்கிரண் என்கிற மலையுடன் மோதுகிற காட்சி என்றாலும் குழைந்துபோகிற காட்சியென்றாலும் கார்த்திக்குள் இருக்கும் நடிகன் கதாபாத்திரமாக பெரும்பாலான காட்சிகளில் வெளிப்பட்டு நின்றார்.

இதன்பிறகு ‘தோழா’வில் சீனுவாகப் பார்த்தபோது, இப்படியொரு குணச்சித்திர நடிப்பை இவரால் கொடுக்கமுடியுமா என்று தம் ரசிகர்களை எண்ணி வியந்திட வைத்தார்! குடும்ப உறவுகளைப் புதுப்பிக்க ‘கடைகுட்டிச் சிங்க’மாக கார்த்தி காட்டியிருந்த முனைப்பில் நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் மிகுந்திருந்தது.

ஆனால், கார்த்தியின் முதல் 12 ஆண்டு திரைப் பயணத்தில் இரண்டாவது பிரம்மாண்டம் ‘காஷ்மோரா’. அவருடைய முதல் இரட்டை வேடம், மூன்று பரிமாணங்கள். எந்த நாயகனுக்கும் அமைந்திராத ரசனையான கதைக் களம். காஷ்மோரா, ராஜ் நாயக் என கார்த்தி ஏற்ற இரண்டு கதாபாத்திரங்களும் எதிரெதிர் துருவங்களில் நின்ற சவால்கள். இரண்டையுமே கச்சிதமாக அணுகியிருந்தார். மொட்டைத் தலையில் வல்லூறு உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டு வரும்போது தோற்றத்திலேயே அசத்தியவர், கருந்தாடியைக் கர்வமாகத் தடவிக் கொண்டு, வீரத்தையும் பெண்ணாசையையும் வெளிப்படுத்தும் நடிப்பில் ஈர்த்தார். காஷ்மோரா கதாபாத்திரத்தில் தன் முத்திரையான கலகலப்பைத் தந்து இரட்டை வேடங்களை ஊதித் தள்ளிவிட்டுப்போனார்.

தீரன் என்றால் கார்த்தி!

‘காற்று வெளியிடை’ ‘தேவ்’ ஆகிய இரண்டும் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்காமல் போனாலும் ‘ஸ்டைலும் அழகும்’ நிறைந்த தமிழ் சினிமா கதாநாயகர்களில் கார்த்தி முதல் வரிசை நாயகன் என்பதைச் சொன்ன படங்கள். ஆனால், ‘தீரன் அதிகாரம்’ ஒன்றில் தன்னை முழுவதும் திருமாறனாக முன்வைத்தார் கார்த்தி. அதிலிருந்த ஹீரோயிசத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு, சினிமா யதார்த்தத்தின் நாயாகனாக, துரத்தலும் தேடலும் நிறைந்த திருமாறனின் அசராத பயணத்தை தன் உழைப்பால் ஈடுகட்டியிருந்தார் கார்த்தி. ஒரு சதாப்தத்துக்கும் மேலாக தமிழகக் காவல் துறைக்கு தண்ணி காட்டிய ஒரு கொள்ளைக் கூட்டத்தின் தடங்களை நூல் பிடித்துத் தேடிச் செல்லும் ஒரு காவல் அதிகாரியின் தீரமான பயணத்தில் திருமாறனின் வியூகங்களை கார்த்தி உள்வாங்கிப் பிரதிபலித்திருந்த விதம், படத்துக்கு கடைசிவரை கம்பீரமான வெப்பத்தைக் கொடுத்தது. ஒரு அதிகாரியின் பணி வாழ்க்கை, சொந்த வாழ்க்கையின் மீது பரப்பும் பயங்கரமான நிழலில் மருகித் தவிக்கும் தவிப்பையும் கார்த்தி அதில் வெளிப்படுத்திக் காட்டினார். இன்றைக்கும் ‘தீரன்’ என்றால் அது கார்த்தி என்று அந்தப் படமும் அதில் கார்த்தியின் நடிப்பும் சொல்ல வைக்கின்றன.

வருகிறார் வந்தியத் தேவன்!

வம்பாட்டம் ஆடுவதில் தனக்கேயுரிய சூட்சுமத்துடன் ‘தம்பி’யில் போலி சரவணனாகவும் பின் விக்கியாகவே ஒரு குடும்பம் காட்டும் அன்பிடம் சரணடையும் இளைஞனாக கார்த்தி கவனிக்கத் தக்க நடிப்பைத் தந்தார். ‘சுல்தான்’ கார்த்தியின் மாஸ் மசாலா படங்களின் வரிசையில் இடம்பிடித்துகொண்டது. ‘விருமன்’ ‘சர்தார்’ என கார்த்தியின் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தாலும், பொன்னியின் செல்வ’னில் வல்லவராயன் வந்தியத் தேவனாக அவரைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். புனைவெழுத்தின் வழியாகவே மக்கள் மனங்களில் கம்பீரமாக அமர்ந்துகொண்டிருக்கும் வந்தியத்தேவனின் வீரத்தையும் அவனது துடுக்குத்தனத்தையும் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கற்பனை செய்து உருக்கொடுத்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வந்தியத் தேவனை கார்த்தி தன் திறமையால் தருவார் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். குந்தவையைச் சந்தித்தப்பின் ஈழத்துக்குச் சென்று, இளவரசர் அருள்மொழி வர்மரைச் சந்தித்தது, தஞ்சைக்குத் திரும்ப அவரை வேறொரு கப்பலில் தவறவிட்டு மந்திரவாதி ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னைக் காப்பாற்ற வந்த இளவரசருடன் கடலில் விழுந்து பெரும் புயலில் சிக்கிக் கொண்டது என வந்தியத்தேவனாக மணிரத்னம் உருவாக்கிய உலகில் கார்த்தி எப்படி ‘பொன்னியின் செல்வ’னுக்குத் தன்னைக் கொடுத்திருக்கிறார் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள். திரையில் வந்தியத் தேவன் வரும் குதிரையின் குளம்பொலியைக் கேட்க, தங்களுடைய காதுகளை கூர்தீட்டிக் காத்திருக்கிறார்கள். ‘வல்லவராயன் வந்தியத் தேவனே வருக’ என 45-வது அகவையில் அடி வைக்கும் அவரை வாழ்த்துவோம்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x