Published : 24 May 2022 03:10 PM
Last Updated : 24 May 2022 03:10 PM

நியாயமா லம்பா? - கதை

குறிஞ்சி

வௌவால்கள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது பழத்தோட்டம். அதில் நிறைய அத்தி மரங்கள் இருந்தன. அத்திப்பழங்கள் என்றால் வௌவால்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றை உண்பதற்காகக் கூட்டமாக வந்தன. அந்தத் தோட்டம் லம்பா கரடிக்குச் சொந்தமானது. அது வௌவால்களிடம், “நீங்க அத்திப்பழங்களைச் சாப்பிடக் கூடாது. இங்க இருந்து போயிருங்க” என்றது.

“ஏன்?” என்று கேட்டது ஒரு வெளவால்.

“இது என் தோட்டம். நீங்க இங்க வந்து பழங்களைச் சாப்பிடறது எனக்குப் பிடிக்கல” என்றது லம்பா.

காட்டில் இரை தேடி வரும் விருந்தினர்களை யாரும் தடுப்பதில்லை. ஏன் கரடி இப்படிச் சொல்கிறது? வௌவால்கள் குழப்பம் அடைந்தன. அவை தயங்குவதைப் பார்த்த லம்பா, இரு தீப்பந்தங்களைக் கொண்டு வந்து வீசியது. கரடியின் இந்தச் செயலால் அதிர்ந்துபோன வௌவால்கள் அங்கிருந்து சென்றுவிட்டன.

பழத்தோட்டத்தின் எதிரே மந்தி ஒன்று வசித்துவந்தது. அதற்குக் கரடியின் இந்தச் செய்கை பிடிக்கவில்லை. “எதுக்காக இரை தேடி வந்த வௌவால்களை விரட்டினே?” என்று கேட்டது.

“என்னோட தோட்டத்துல விளைஞ்ச எதையும் என்னோட அனுமதி இல்லாம யாரும் எடுக்கக் கூடாது” என்றது லம்பா.

“உணவுக்காக நாம ஒருவரை இன்னொருவர் சார்ந்துதானே வாழறோம்... இது மாதிரி உணவு தேடி வர்றவங்களைத் தடுக்குற வழக்கம் நம்ம காட்டுல கிடையாதே? பழம் உதிர்ந்து வீணாகத்தானே போகுது? வௌவால்கள் சாப்பிட்டுப் போகட்டுமே?”

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் இருக்கும். ஒருநாள் லம்பாவின் தோட்டத்தில் காட்டுப் பன்றியின் அலறல் கேட்டது. மந்தி ஓடிச் சென்று பார்த்தது. லம்பா பன்றியை மரத்தில் கட்டி வைத்திருந்தது.

“எதுக்காக இவனைக் கட்டி வைச்சிருக்க?” என்று கேட்டது மந்தி.

“இவன் என்னோட அனுமதி இல்லாமல் நுழைஞ்சு, நான் சேமிச்சு வைச்சிருக்குற கிழங்குகளைத் தின்னுக்கிட்டிருக்கான்!”

பசி என்று கேட்டு வருபவர்களுக்கும் உணவு தருவதில்லை, லம்பா. இத்தனைக்கும் தோட்டத்தின் மத்தியில் நிறைய தானியங்கள், பழங்கள், கிழங்கு வகைகளைச் சேமித்து வைத்திருக்கிறது.

“ஏதோ நீ தலையிட்டதால இந்தப் பன்றியை விடறேன்! இனி இவன் இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாது” என்று பன்றியை அவிழ்த்துவிட்டது லம்பா.
அன்று ஒரு குன்றின் உச்சியில் மந்தி குட்டிகளோடு விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது லம்பா பெரிய தேனடைகளைச் சுமந்து வந்தது.

இதைப் பார்த்த மந்தி, “பசின்னு உன்னைத் தேடி வர்றவங்களுக்கு நீ உணவு கொடுக்க மாட்டேங்குற... தேனீக்கள் கஷ்டப்பட்டு சேகரிச்ச தேனை மட்டும் நீ எடுத்துட்டு வரலாமா?” என்று கேட்டது. மந்தியின் இந்தக் கேள்விக்கு லம்பாவால் பதில் சொல்ல முடியவில்லை. சமாளித்துக்கொண்டு, “உன்னை நான் மதிச்சுப் பேசினால், என்னை என்ன வேணாலும் சொல்வீயா?” என்று கேட்டது.

“நீ புதைசேற்றில் மாட்டிக்கொண்டபோது, எங்கள் கூட்டம்தான் உன்னைக் காப்பாற்றியது. அந்த உரிமையில்தான் நீ தவறு செய்யும்போது தட்டிக் கேட்கிறேன். உனக்கு விருப்பமில்லை என்றால் இனி கேட்க மாட்டேன். ஆனால், உன்னைப் போல் சுயநலமாக நாங்கள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்” என்று சொல்லிவிட்டு மந்தி வேகமாகச் சென்றுவிட்டது.

கரடிக்கு அப்போதுதான் தன் தவறு புரிந்தது. மன்னிப்பு கேட்பதற்காக மந்தியைத் தேடிப் புறப்பட்டது.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x