Published : 18 Jun 2014 08:00 AM
Last Updated : 18 Jun 2014 08:00 AM

குள்ள ராஜா போட்ட தடை

மங்களபுரம் என்ற ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரியும் இருந்தார். ராஜாவோட உயரம் நாலரை அடிதான். ஆனா அமைச்சரோ ஆறடி உயரம் இருந்தார். ராஜா குள்ளமா இருந்தாலும் அது பத்தி கவலையில்லாம இருந்தார். அவர் விருப்பத்திற்கேற்ப மந்திரி நடந்தார்.

ஒருமுறை ராஜாவும், மந்திரியும் மாறுவேஷத்துல நகர்வலம் போனார்கள். அப்போது ஒரு வீட்டில் ஒரு அப்பா, தன் பையனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். “நல்லா குதிச்சு உயரமா ஆகற வழியை பாரு. இல்லேன்னா நம்ம ராஜா போல குள்ளமா ஆயிடுவே” என்று கூறினார். இதை கேட்டதும் ராஜாவுக்கு கடுங்கோபம் வந்தது. மாறுவேஷத்தை யாருக்கும் காட்டிக்கொடுக்கவும் விரும்பவில்லை. இருவரும் விடுவிடுவென்று அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அன்றைக்கு முழுவதும் ராஜா கோபமாகவே இருந்தார்.

மறுநாள் காலை ஊர் முழுக்க தண்டோரா போடச் சொன்னார் ராஜா. “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், நாலரை அடி உயரத்துக்கு மேல ஊருல ஆம்பிளைங்க யாரெல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோரும் உடனடியா ஊரை விட்டு வெளியேறணும்” என்று அறிவிப்பு வெளியிட்டார் ராஜா.

அதனால் ஊருல இருந்த எல்லா பெரியவங்களும் உடனடியா காலி பண்ணிட்டாங்க. மந்திரி ஆறடி உயரம் இருந்தாலும், மந்திரி மட்டும் காலி பண்ணாம இருந்தார். ஆனால், ராஜா பார்த்தால் திட்டுவாரேன்னு மறைந்து வாழ்ந்து வந்தார். எல்லா பெரியங்களும் வெளியே போய்ட்டதால சின்ன பசங்க சில பேரை ஒற்றர்களாகவும், அமைச்சர்களாகவும் ராஜா நியமிச்சார். ஆனா வீரர்களா இருக்க உயரமும் வேணுமே? அதனால வீரர்கள் மட்டும் கிடைக்கவே இல்ல.

இதெல்லாம் ராஜாவை எப்போ கவிழ்க்கலாம் என்று காத்துக் கொண்டிருந்த எதிரி நாட்டு ராஜாவுக்கு தெரிந்தது. அதனால மங்களபுரம் மேல போர் தொடுக்க போவதாக அறிவிப்பு தந்தார். அத்துடன், தனது வீரர்களோடு ஊரையும் முற்றுகையிட்டார்.

மங்களபுரத்தில் வீரர்கள் இல்லாததால் ராஜாவுக்கு ஒரே கவலை. இந்த நேரத்தில் ராஜாவின் முன்னால் மந்திரி அரண்மனைக்கு வந்தார். மந்திரியைப் பார்த்ததும் ராஜாவுக்கு சந்தோஷம். ஆனா, வெளியில அதை காட்டிக்காமல் கோபமாக பேசினார்.

“இப்ப ஏன் இங்க வந்தே?” என்று கேட்டார். “மன்னரே, என் கால் ரெண்டையும் பாருங்க. நான் குள்ளமா இருக்கணும்கிறதால அப்படியே வெட்டிக்கொண்டேன்”

என்றார் அமைச்சர். ராஜா அப்போதுதான் அமைச்சரின் காலைப் பார்த்தார். கால் குண்டா இருந்தது. ஆனால், கால் முழங்காலை மடிச்சு சின்னதா இருப்பது போல காண்பித்திருந்தார் அமைச்சர். ராஜாவுக்குப் புரிந்தது. அமைச்சரின் நகைச்சுவையை ரசித்தார். உடனே வேலையில் சேரும்படி அமைச்சருக்கு ராஜா உத்தரவிட்டார்.

உடனடியாகக் களத்தில் இறங்கிய அமைச்சர், மளமளவென்று உத்தரவுகளைப் பிறப்பித்தார். குள்ளமான சிறுவர்களை எதிரி நாட்டு ஒற்றர்களுக்கு சந்தேகம் வராமல் வெளியே செல்வதற்குப் பயிற்சியளித்தார். அவர்கள் மூலம் ஊரை காலி செய்து விட்டுப் போன வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். வீரர்கள் எல்லோரும் பின்புறமாக அரண்மனையில் குவிந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து

எதிரி நாட்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை தாங்க முடியமால் எதிரி நாட்டுப் படையினர் ஓட்டம் பிடித்தார்கள்.

நாட்டை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக மந்திரிக்கு ராஜா நன்றி தெரிவித்தார். நாட்டை ஆள்வதற்குத் தேவை வீரமும், அறிவும்தான். அதை ஒழுங்காகச் செய்வதுதான் முக்கியம் என்பதை ராஜா உணர்ந்து கொண்டார். உடனே உயரமானவர்களுக்கு விதித்த தடையை நீக்கினார். எல்லோரும் ராஜாவை வாழ்த்தினார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x