

இன்சுலின் எனப்படும் கணைய நீரைத், தேவையான அளவு உடல் உற்பத்திசெய்யாத அல்லது உற்பத்திசெய்யப்பட்டதைப் பயன்படுத்தாத நிலையில் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதைத்தான் நீரிழிவு என அழைக்கிறோம். பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் இதனால் வர வாய்ப்புள்ளது. உலக அளவில் 42.2 கோடி மக்கள் இந்த நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு சொல்கிறது. இதில் 7.4 கோடி பேர் இந்தியர்கள். உலக அளவில் நீரிழிவுப் பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.
இந்த நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலும் ஆங்கில மருத்துவ முறையிலான முறைகள்தாம் பின்பற்றப்படுகின்றன. ஆனால், இதற்கு எளிய சித்த மருத்துவ முறைகளை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரைக்கிறது.
நீரிழிவு நோய்க்கான எளிய மருத்துவம்
உலர்ந்த அத்திப் பழத்தை 1 கிராம் அளவு தினமும் இருவேளை தண்ணீருடன் உண்ணலாம்.
5 கிராம் ஆலம்பட்டைப் பொடியை 50 மில்லி லிட்டர் நீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தலாம் (30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தலாம்).
4 முதல் 10 கிராம் ஆவாரம் பூ பொடியைச் சுடு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.
1-5 கிராம் கடல் அழிஞ்சில் உடன் 4 பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காகச் சுருக்கிக் காய்ச்சி அருந்தலாம்.
கேழ்வரகுக் கஞ்சி, கேழ்வரகு அடை போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
1 – 3 கோவைக்காய் சாற்றைத் தினமும் குடிக்கலாம்
நீரிழிவுப் பாதிப்பால் வரும் கடும் தாகத்தைத் தணிக்க சீந்தில் இலை அல்லது தண்டுப் பொடியை சுடு தண்ணீரில் ஊறவைத்துத் தினமும் இருவேளை அருந்தலாம்.
1 கிராம் தேற்றான் விதைப் பொடியைப் பாலுடன் தினமும் இரு வேளை குடிக்கலாம்.
4-8 கிராம் நிழலில் உலர்த்திய தொட்டாற்சிணுங்கி சமூலத்தை (வேர் வரைக்குமான முழுச் செடி) 50 மி.லி. சுடு தண்ணீரில் கலந்து தினம்ம் இருவேளை உட்கொள்ளலாம்.
2-4 கிராம் நாவல் கொட்டைப் பொடியை 50 மி.லி. சுடு தண்ணீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.
1-3 கிராம் நிழலில் உலர்த்திய இளநீரின் பொடியை நீரில் கலந்து தினமும் இரு வேளை அருந்தலாம்.
மணிச்சம்பா அரிசியை அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
வேகவைத்த மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது.
3 கிராம் கருஞ்சீரகப் பொடியை சம அளவு வெந்தயத்துடன் கலந்து தினமும் இரு வேளை உணவுக்கு முன்பாக எடுத்துக்கொள்ளலாம்.
எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனப் பயிற்சிகளைத் தினமும் செய்ய வேண்டும்.
மேற்கண்டவற்றைப் பின்பற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.