

மனித நாகரிக வரலாற்றில் அடைந்த வெற்றிகளை மட்டுமல்ல, சந்தித்த பின்னடைவுகளையும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது அவசியம். அந்த வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணப் பேரவை முன்னோடி முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. சென்ற நூற்றாண்டில் நடந்த யூத இனப்படுகொலைகள் மற்றும் ஆர்மீனியப் படுகொலைகளைப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஹிட்லர் நிகழ்த்திய படுகொலைகள்
மிச்சிகன் மாகாணத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கிரேட் 8 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்குப் போர்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான பாடங்கள் இருக்கும். அத்துடன் 15 பேர் கொண்ட இனப்படுகொலை பற்றிய கல்விக் குழுவையும் மிச்சிகன் மாகாணத்தின் ஆளுநர் ரிக் ஸ்நைடர் உருவாக்க வேண்டுமென்றும் இந்த மசோதா நிபந்தனை விதித்துள்ளது. இந்த மசோதா ஹவுஸ் பில் 4493 அல்லது ஹாலெகாஸ்ட் அண்ட் ஆர்மினியன் ஜெனோசைட் எஜுகேஷன் பில் என்று அழைக்கப்படுகிறது.
மனித குல வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தலைமையிலான நாஜி ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட யூத இனப்படுகொலைகள் கருதப்படுகின்றன. இந்தப் படுகொலைகளில் அறுபது லட்சம் யூதர்கள் கூட்டம்கூட்டமாகக் கொல்லப்பட்டனர். முதல் உலகப்போரில் 15 லட்சம் ஆர்மினியர்கள் கொல்லப்பட்டனர்.
சக மனிதர்களின் துயரம்
மிச்சிகன் மாகாணத்தில், தற்போது 50 ஆயிரம் ஆர்மினியர்கள் வசிக்கும் நிலையில், அமெரிக்க மாணவர்கள் தங்களுடன் வசிக்கும் ஆர்மினிய மக்களை நன்கு புரிந்துகொள்வதற்கு இந்தப் பாடங்கள் உதவும் என்பதால் இந்தப் பாடத்திட்டத்தை அமெரிக்காவில் வாழும் ஆர்மினிய மக்களும் வரவேற்றுள்ளனர்.
முதல் உலகப்போரும் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகளும் அமெரிக்க மாணவர்களுக்கு ஏற்கெனவே பாடங்களாக உள்ளன. வரலாற்றின் வேறு வேறு காலகட்டங்களில் நடந்த இனப்படுகொலைகளை அறிவதன் வழியாக உலகத்தையும் தம்மைச் சுற்றியுள்ள மக்களையும் பற்றிக் கல்வி கற்கும் வயதிலேயே மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும் என்பதால் இந்தப் பாடத்திட்டத்தை வரவேற்றுள்ளனர் கல்வியாளர்கள்.