

ஃபிராய்ட் பிறந்த நாள் மே 6
இருபதாம் நூற்றாண்டில் மனித சிந்தனை மரபிற்குக் கூடுதல் வளத்தைச் சேர்த்தவர்களில் ஒருவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். முதுமையடைந்த ஃப்ராய்டின் சிகிச்சை அறையைப் புகைப்படத்தில் பார்க்கும் போதெல்லாம் அங்கு பல்வேறு சிற்பங்கள் கண்களை உறுத்துகிற மாதிரி நிறைந்திருப்பதைக் காணமுடியும். எகிப்திய, கிரேக்க, ரோமானிய ஆப்பிரிக்க தேசத்துச் சிற்பங்கள். மனநலம் சம்பந்தப்பட்ட ஒரு மருத்துவர் அறையில் புராதனப் பொருட்களுக்கு என்ன வேலை என்ற ஆச்சரியம் ஒருவருக்கு எழும்.
கறாரான அறிவியல் சார்ந்த துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற ஃப்ராய்டுக்கு ஏன் கடந்து போன நாகரிகங்களின் மேல் ஆசை வந்தது?
அடுத்து சிகிச்சைக்காக ஃப்ராய்ட் பயன்படுத்திய சாதனங்களும் வித்தியாசமானவைதான். ஒரு கட்டில். அதையொட்டி தலைமாட்டில் ஒரு நாற்காலி. சிகிச்சைக்காக வருபவர்கள் படுத்துக்கொண்டு மனதில் தோன்றுவதை கலாசாரம் மற்றும் ஒழுக்கவியல் ரீதியான ‘சரி’, ‘தவறு’ என்ற தணிக்கைக்கு ஆட்படுத்தாமல் பேச வேண்டும்.
சிகிக்சை நேரத்தில் நோயாளியின் தணிக்கைசெய்யப்படாத பேச்சு ஏற்படுத்தும் உணர்வுத் தத்தளிப்பை உளப் பகுப்பாய்வாளரும் நோயாளியும் பரஸ்பரம் பார்த்துக்கொள்ளாதபடி, தோதாகத்தான் கட்டிலையொட்டி கண்மறைவாக நாற்காலியைப் போட்டிருப்பார் ஃப்ராய்ட்.
மனிதனின் கடந்த காலம்
கிடைத்த தொல் சாட்சியங்களை வைத்துக்கொண்டு வரலாற்றில் விடுபட்டுப்போன இடைவெளிகளை நிரப்பிக் கடந்த கால வரலாற்றை மீண்டும் உருவாக்கிக்கொள்வது, அகழ்வாராய்ச்சித் துறையின் பணியாகும். உளப் பகுப்பாய்வின் செயல்பாடுகளும் அதற்கு ஒப்பானதுதான். நோயாளி பேசும், பேசத் தவிர்க்கும் விஷயங்களை சாட்சியாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் கடந்த காலத்தை மறுநிர்மாணம் செய்வதுதான் உளப் பகுப்பாய்வு. ஆகவே தொல்லியல் ஆய்வுக்கும், உளப் பகுப்பாய்வுக்கும் இடையே அதிகமான பொதுத் தன்மைகள் உண்டு என ஃப்ராய்ட் சொல்லுவார்.
கிடைத்த தொல் சாட்சியங்களை வைத்துக்கொண்டு வரலாற்றில் விடுபட்டுப்போன இடைவெளிகளை நிரப்பிக் கடந்த கால வரலாற்றை மீண்டும் உருவாக்கிக்கொள்வது, அகழ்வாராய்ச்சித் துறையின் பணியாகும். உளப் பகுப்பாய்வின் செயல்பாடுகளும் அதற்கு ஒப்பானதுதான். நோயாளி பேசும், பேசத் தவிர்க்கும் விஷயங்களை சாட்சியாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் கடந்த காலத்தை மறுநிர்மாணம் செய்வதுதான் உளப் பகுப்பாய்வு. ஆகவே தொல்லியல் ஆய்வுக்கும், உளப் பகுப்பாய்வுக்கும் இடையே அதிகமான பொதுத் தன்மைகள் உண்டு என ஃப்ராய்ட் சொல்லுவார்.
டாக்கிங் க்யூர்
உளப் பகுப்பாய்வின் ஆரம்ப வரலாறு ஒரு பெண் சிறுகதை ஆசிரியரை உருவாக்கியதோடு தொடர்பு கொண்டிருக்கிறது. ஃப்ராய்டும் அவரது மருத்துவ நண்பரான ப்ருயரும் சேர்ந்து 1895-ல் ஐந்து பெண் ஹிஸ்டீரியா நோயாளி களைப் பற்றி ஆய்வுக் குறிப்புகளை எழுதி Studies on Hysteria என்ற பெயரில் வெளியிட்டார்கள். அதில் முதல் கேஸ் ஹிஸ்டரி அன்னா ஓ என்பவரைப் பற்றியது.
‘சிம்னி விளக்கில் படிந்த புகைக்கரியை தேய்த்து சுத்தமாக்குவது போல, நான் பேசப் பேச மனது லகுவானது’ என்று தனக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றிச் சொன்னார் அன்னா. மொழி வழியாகத் தானே சுயமாக அடைந்த சிகிச்சைக்கு அன்னா விளையாட்டாகச் சொன்ன பெயர்தான் ‘டாக்கிங் க்யூர்’ (Talking Cure).
ஒருவரின் நினைவுச் சுவடுகளுக்கும் வார்த்தைகளுக்கும் உள்ள முக்கிய இணைப்பை அடையாளப்படுத்திய நிலையில் உளப் பகுப்பாய்வு பிறந்தது. அன்னா ஓ, பின்னாளில் சிகிச்சையைக் கைவிட்டுவிட்டார். வார்த்தைகளால் அலைகழிக்கப்பட்ட அவர், வார்த்தைகளை ஆளும் நல்ல சிறுகதை ஆசிரியராகப் பின்னாளில் ஆனார். குழந்தைகள், பெண்கள், அபலைகள், பாலியல் தொழிலாளிகள் போன்றோர்களின் உரிமைப் பிரச்சினைகளைக் கையிலெடுத்த அரசியல் செயல்பாட்டாளராகவும் மாறிவிட்டார். நவீன ஜெர்மனியின் முதல் பெண் சமூகப் பணியாளர் என்று புகழ்பெற்றார்.
சிகிச்சை முறையா கலையா?
உளப் பகுப்பாய்வு கலையா, அல்லது விஞ்ஞானமா? கலையும் விஞ்ஞானமும் சந்தித்த புள்ளிதான் ஃப்ராய்ட். அதுவரை அறிவியல், முகம்கொடுக்காமல் இருந்த பல விஷயங்கள் அவருடைய எழுத்துக்களால் பிரகாசம் பெற்றன.
கனவின் நற்பலன்கள் மற்றும் தீயசகுனங்கள் பற்றிப் பேசப்பட்ட காலத்தில் கனவுகள் தெரிவிக்கும் அர்த்தங்களை மொழியியல் ரீதியாக ஃப்ராய்ட் விளக்கினார். அவர் நகைச்சுவையைப் பற்றி விரிவாக எழுதினார். அவருடைய ‘Jokes and Its relation to the Unconscious’ என்ற நூலை வாசிப்பது வடிவேலின் நகைச்சுவை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய செல்வாக்கு குறித்து புதிய புரிதலைத் தரும். இனம் புரியா விபரீத உணர்வுகளை (Uncanny) பற்றிய அவரின் கட்டுரை, த்ரில்லர் படங்களைப் பார்த்து நாம் பயப்படுவதை விளங்கிக்கொள்ள உதவி செய்யும்.
பண்பாடு சார்ந்த விசாலமான பார்வையும், அறிவியலாளனுக்குத் தேவையான படைப்புத் திறனும் இருந்ததால்தான் ஃப்ராய்டால் அறிவியலின் எல்லை தாண்டிப் பல தளங்களில் இயங்க முடிந்தது.
இந்தியாவிலிருந்து ஒரு ஆதரவுக் குரல்
ஃப்ராய்டின் சிந்தனைகளுக்கு இந்தியாவிலிருந்து ஓர் ஆதரவுக் குரலும் அத்தோடு விமர்சனக் குரலும் எழுந்தது. வடக்கு அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஃப்ராய்டின் சிந்தனைகளுக்கு வரவேற்பு கிடைப்பதற்கு முன்பே, இந்தியாவில் அதற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது.
நவீனத்துவத்தைக் கொண்டு வந்த கிழக்கிந்தியக் கம்பனியின் மையமாக விளங்கிவந்த கல்கத்தாவில் 1922-ம் ஆண்டு முதன்முதலாக இந்திய உளப் பகுப்பாய்வுச் சங்கம் தோன்றிவிட்டது. கிரிந்தர சேகர் போஸ் என்பவர்தான் சங்கத்தின் ஸ்தாபகர். இந்து முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடிக்கொண்டிருந்த காந்திகூட ஒரு உளப் பகுப்பாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
போஸ் ஆங்கில மருத்துவம் பயின்றவர். வேதியியல் துறையிலும் அவருக்கு ஆர்வம். பகவத்கீதைக்கு உளவியல் ரீதியாக உரை எழுதியவர்; பதஞ்சலி யோக சூத்திரத்தை வங்காளத்தில் மொழிபெயர்த்தவர். போஸ், The Concept of Repression என்ற உளப் பகுப்பாய்வுக் கோட்பாடுகள் நிறைந்த தனது ஆய்வு நூலை ஃப்ராய்டுக்கு அனுப்பிவைத்தார். தனது கருத்துக்களுக்கு உலகளாவிய பொருத்தப்பாடும் அதற்கான அங்கீகாரமும் கிடைத்ததில் ஃப்ராய்டுக்கு மகிழ்ச்சி.
ஃப்ராய்டும் போஸூக்குக் கடிதம் போட்டார். 20 ஆண்டுகள் வரை இருவருக்கும் கடிதப் போக்குவரத்து நீடித்திருக்கிறது. ஃப்ராய்டின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் தந்தத்திலான விஷ்ணுவின் சிலையை அவருக்குப் பரிசாக அனுப்பி வைத்தார் போஸ். இந்தியாவின் அடையாளமாக விஷ்ணுவின் சிலை ஃப்ராய்டின் மேஜையில் இடம் பிடித்துக் கொண்டது.
- கட்டுரையாளர் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், தேனி மருத்துவக் கல்லூரி