ஆன்மிக நூலகம்: ஓரெழுத்தில் அறுபத்து மூவர் 

ஆன்மிக நூலகம்: ஓரெழுத்தில் அறுபத்து மூவர் 
Updated on
1 min read

ப.ஜெயக்குமார்
உமாதேவி பதிப்பகம், சென்னை – 77.
தொடர்புக்கு: 98405 89222

வாய்த்த பிறப்பில் வாகீசர் சிறப்புகளை, பெரிய புராண செல்வர்களின் பெரும் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற பெருமுயற்சியில் ‘ஓரெழுத்தில் அறுபத்து மூவர்’ என்கிற நூலை, அந்தந்த நாயன்மார்களின் பெயர்கள் தொடங்கும் தலைப்பெழுத்திலேயே ஆற்றொழுக்கான நடையில் உருவாக்கியுள்ளார் ஆசிரியர். நாயன்மார்களைச் சோதிக்க, ஆதியும் அந்தமும் இல்லா இறைவன் புரிந்த திருவிளையாடல்களை விளக்கும் வகையில் ஓவியங்களுடன் தர வேண்டும் என்கிற முனைப்பு பாராட்டுக்குரியது. ஓவியர் திருவிடைமருதூர் ராஜேந்திரனின் உயிரோவியங்கள் 63 நாயன்மார்களை நம் கண்முன்னே நிறுத்துகின்றன.

நாயன்மார்கள் அவதரித்த திருத்தலங்கள், அதன் பழைய பெயர், தற்காலப் பெயர், அவர்கள் வாழ்ந்த காலம், பிறந்த நட்சத்திரம், இறைவன் - இறைவி பெயர், அவ்வூர் செல்லும் வழி, தொலைவு, தொடர்புகொள்ள வேண்டிய நபர், தொலைபேசி எண் ஆகிய அனைத்துத் தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இறைவனோடு சேர்ந்த அன்பு உள்ளங்கள் இன்றும் நம்முடன், நமக்காக நலம் விளைவித்துக் கொண்டு வாழ்வதாக நூலை நிறைவு செய்துள்ளார் ஆசிரியர்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் பெண்கள்

ஹேமா அழகன்
ஜெயா பதிப்பகம், சென்னை 41.
தொடர்புக்கு: 98401 59391

பெண்கள் அநேகரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறந்து விளங்கி, இறைவனுக்கும் பாகவதர்களுக்கும் சேவை புரிந்துள்ளனர். பெருமாளுக்கு ஈடாகப் பிராட்டியையும் வைத்து சேவித்த சம்பிரதாயத்தில்,  ஆண்டாள், குமுதவல்லி நாச்சியார், துலுக்க நாச்சியார், பொன்னாச்சியார், கூரத்து ஆண்டாள், மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா, திருக்கோளூர் பெண்பிள்ளை, நாவல்கொடி அம்மாள், கொங்கில் பிராட்டி, வெள்ளாயி அம்மாள், திருவெள்ளறை அம்மாள், சின்னியம்மாள், திருவல்லிக்கேணி பெண்பிள்ளை போன்றோர் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்கள்.

தங்களுக்காக எதையும் வேண்டாமல் எப்போதும் உலக நன்மைக்காகவே பிரார்த்திக்கும் பெண்களின் வாழ்க்கை வரலாறு, அவர்தம் பக்தி, இறைவனுக்கு ஆற்றிய தொண்டு குறித்து இந்நூலில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ஹேமா அழகன். மன் நாராயணனே பரதெய்வம், பிராட்டியை முன்னிட்டு சரணாகதி, அனுஷ்டானம், பாகவத சத்சங்கம், நாமசங்கீர்த்தனம் என்று இறைவனையே துதித்து உலக நன்மைக்காக சேவை புரிந்த பெண்கள், இந்நூலில் போற்றப்பட்டுள்ளார்கள். பாமரப் பெண்கள் பக்தியிலும், அறிவிலும் சிறந்து விளங்கினர் என்று இந்நூல் மூலம் அறியப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in