Published : 09 May 2022 12:55 PM
Last Updated : 09 May 2022 12:55 PM
‘நேர்மையான ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஏன் இப்படிப்பட்ட ஒருவருக்கு அதிகாரங்களை வாரிவழங்கி, உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுத்து, அநியாயத்துக்குத் துணை போகிறீர்கள்?’
இந்தக் கேள்வியைக் கேட்டவர் 21 வயதேயான சோஃபி ஸ்கால். அதுவும் ஹிட்லர் ஆட்சி செய்துகொண்டிருந்த நாஜிகளின் ஜெர்மனியில்!
யார் இந்த சோஃபி?
ராபர்ட் ஸ்கால்-மேக்தலின் தம்பதிக்குப் பிறந்த 6 குழந்தைகளில் சோஃபியும் ஒருவர். தன் அம்மாவைப்போல் மென்மையான இதயம் கொண்டவர். நகர மேயராக இருந்த ராபர்ட், நேர்மையும் சுதந்திரமும் மனிதருக்கு முக்கியமானது என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்தார். மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் சோஃபிக்கு வாய்த்தது. 1933-ம் ஆண்டு ஹிட்லரின் தலைமையில் நாஜி கட்சி ஆட்சிக்கு வந்தது. அடிப்படைவாதங்களை முன்வைத்து பல்வேறு அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்தனர். 12 வயது சோஃபியும் ஹிட்லரின் பெண்களுக்கான ‘யூத்’ அமைப்பில் சேர்ந்தார். அதில் தீவிரமாக ஆர்வம் செலுத்தி, ஓர் அணியின் தலைவியாகவும் மாறினார்.
சோஃபியின் அப்பா ஹிட்லரின் கொள்கைகளுக்கு எதிரானவராக இருந்தார். சோஃபி ஹிட்லர் அமைப்பில் தீவிரமாகச் செயல்படுவதை அவர் விரும்பவில்லை. எனவே இரவு உணவு மேஜையில் தமது குழந்தைகளுடன் அரசியல் பேச ஆரம்பித்தார். அண்ணன் ஹான்ஸும் அப்பாவும் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டார் சோஃபி. தன்னுடன் படித்த யூத மாணவர்கள் திடீரென்று பள்ளியிலிருந்து விலக்கப்பட்டதை அறிந்தார். யூதர்களுக்கு என்று தனி அடையாளம், கட்டுப்பாடுகள் இருப்பதையும் கண்ட பிறகு, ‘யூத்’ அமைப்பிலிருந்து விலகினார்.
ஹான்ஸ், ஹிட்லரின் எதிர்ப்புக் குழுவில் தீவிரமாகச் செயல்பட்டார். இந்தக் குழுவில் மனித நேயமும் இயற்கை மீது அன்பும் பிரதான விஷயங்களாக இருந்தன. ஆரம்பத்தில் இந்தக் குழுக்கள் ஹிட்லருக்கு ஆதரவானவை என்று நாஜிகள் நினைத்தனர். பின்னர் உண்மை தெரிந்தவுடன் குழுக்களைக் கலைத்தனர். குழுவில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஹான்ஸின் கைது, சோஃபியை வலுவாக நாஜிகளை எதிர்க்கத் தூண்டியது.
பள்ளிப் படிப்பை முடித்த சோஃபி, மழலையர் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். ஒருவருடன் அவருக்குக் காதலும் அரும்பியிருந்தது. அப்போது ஹிட்லர் போலந்து நாட்டை ஆக்கிரமித்தார். இதனால் பிரான்ஸும் பிரிட்டனும் ஜெர்மனிக்கு எதிராகத் திரும்பின. சோஃபியின் சகோதரர்கள் நாஜிகளின் கட்டாயத்தின் பெயரில் போருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். சோஃபியும் தொழிலாளர் சேவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போரில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட்ட சோஃபியின் அப்பா, ஹிட்லரைப் பற்றிய தன்னுடைய கருத்தை வெளியிட்ட குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். நாடும் வீடும் கொந்தளிப்பான சூழலில் இருந்தன. சில மாதங்களுக்குப் பின்னர் அரசாங்கத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வீடு திரும்பினர்.
ஒயிட் ரோஸ்
முனிச் பல்கலைக்கழகத்தில் ஹான்ஸ் மருத்துவம் பயின்றார். அங்கு ‘ஒயிட் ரோஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்தார் ஹான்ஸ். இந்த அமைப்புக்குப் பேராசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கிவந்தனர். ஒரு சர்வாதிகார ஆட்சியில் தனிப்பட்ட மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய உரைகள் நிகழ்த்தப்பட்டன. வெளிப்பார்வைக்கு ஜாலியான இளைஞர் அமைப்பாகவும் வன்முறைக்கு எதிரான அமைப்பாகவும் ஒயிட் ரோஸ் இருந்தது. ஆனால், ரகசியமாக ஹிட்லருக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
1942-ம் ஆண்டு தத்துவம் படிப்பதற்காக முனிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் சோஃபி. அண்ணனும் அவரின் நண்பர்களும் ஆட்சியாளருக்கு எதிரான ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிந்ததைக் கண்டறிந்தார். தன்னையும் அதில் இணைத்துக்கொண்டார். ‘ஒயிட் ரோஸ்’ அமைப்பினருடன் சேர்ந்து இரவில் யாருக்கும் தெரியாமல் பல்கலைக்கழகச் சுவர்களில் எதிர்ப்பு வாசகங்களை எழுதி வைத்தார். நகர வீதிகளில் போஸ்டர்களை ஒட்டினார். துண்டறிக்கைகளை ஆயிரக்கணக்கில் நகல் எடுத்து, ரகசியமாகத் தபால் பெட்டிகளில் சேர்க்கும் பொறுப்பை வெற்றிகரமாகச் செய்து வந்தார். என்றாவது ஒருநாள் நாஜிகளிடம் பிடிபட்டால் உயிர் தப்பாது என்பதையும் அறிந்தே இருந்தார் சோஃபி.
'ஒயிட் ரோஸ்’ துண்டறிக்கைகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. துண்டறிக்கைகளைப் படித்தவர்கள், அதை நகல் எடுத்து பலருக்கும் கொடுத்தனர். இதனால் நாஜி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக வலுப் பெற்றது. ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்றுக் கவனித்துவந்த நாஜிகளின் ரகசியக் காவல்படை, ஒயிட் ரோஸ் அமைப்பைக் கண்காணிக்க ஆரம்பித்தது.
இறுதித் துண்டறிக்கை
ஆறாவது துண்டறிக்கை தயாரானது. கண்காணிப்பு அதிகமாக இருந்ததால் பெட்டிக்குள் வைத்து பல்கலைக்கழகத்துக்குக் கொண்டுவந்தார் சோஃபி. எதிர்பாராத விதமாக நாஜி காவலர்களிடம் பிடிபட்டார். அவருடன் சேர்ந்து ஹான்ஸும் கிறிஸ்டோப்பும் கைது செய்யப்பட்டனர்.
இயக்கத்தினரைக் காட்டிக் கொடுத்தால், சோஃபியின் தண்டனை குறைக்கப்படலாம் என்றனர். ஆனால், அத்தனை குற்றத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் தண்டனையைத் தனக்கு மட்டும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் சோஃபி. அதேபோல் ஹான்ஸும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தானே ஏற்றுக்கொண்டார். நீதிபதி ரோலண்ட் ஃப்ரீஸ்லர் விசாரித்த வழக்குகளில் 90 சதவீதம் மரண தண்டனையே அளித்திருந்தார். இவர்களுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனையாக, கில்லட்டின் கருவியால் தலையை வெட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.
சோஃபியின் பெற்றோர் கடைசியாக ஒருமுறை பார்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தங்களின் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுக்க இருந்த அந்தப் பெற்றோரின் துயரத்தை என்னவென்று சொல்ல முடியும்? முதலில் ஹான்ஸைச் சந்தித்தனர். அவர் கண்களில் துயரம் எதுவும் வெளிப்படவில்லை. மகனின் உறுதியைக் கண்டு பெற்றோர் ஆச்சரியமடைந்தனர். அடுத்து சோஃபி அழைத்துவரப்பட்டார். மலர்ந்த முகத்தோடு பெற்றோரைச் சந்தித்தார். அம்மா கொடுத்த மிட்டாய்களை வாங்க மறுத்தார். தங்களின் மரணம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை விடுவிக்கும் என்று நம்பிக்கையோடு கூறினார். கம்பீரமாக அறைக்குத் திரும்பினார். சட்டென்று உடைந்து அழுதார். சிறைக் காவலர் காரணம் கேட்டார். "பெற்றோரிடம் விடைபெற்று வந்தேன். உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்” என்றார் சோஃபி.
அன்று பிற்பகல் ஹான்ஸ், சோஃபி, கிறிஸ்டோப் மூவரும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. யாருக்கும் பேசுவதற்கு எதுவும் எஞ்சியிருக்கவில்லை. பிறகு கில்லட்டின் என்ற கொலைக்கருவிக்கு முதல் ஆளாக அழைத்துச் செல்லப்பட்டார் சோஃபி. அவர் முகத்திலும் கண்களிலும் பயத்தின் அறிகுறிகள் இல்லை.
"நீதிக்கான போராட்டத்தில் தன்னை ஒப்படைப்பதற்கு யாரும் தயாராக இல்லை என்றால், நாம் நீதியை எப்படி எதிர்பார்க்க முடியும்? இது அழகான நாள். நான் செல்ல வேண்டும். என் மரணம் ஆயிரக்கணக்கானவர்களைக் கிளர்ந்தெழச் செய்யுமா?” என்று கேட்டுவிட்டுக் கம்பீரமாக நடந்து சென்றார் சோஃபி.
தலை துண்டிக்கப்படும்போதுகூட அவரின் இமைகள் இமைக்கவில்லை என்று பின்னர் தெரிவித்தார் தண்டனையை நிறைவேற்றிய அதிகாரி.
சோஃபியின் மரணத்துக்குப் பிறகு வெளியான கடைசித் துண்டறிக்கை வேகமாகப் பரவியது. ஆயிரக்கணக்கான மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியது. பிரிட்டன் படைகள் இந்தத் துண்டறிக்கையை லட்சக்கணக்கில் நகல் எடுத்து ஜெர்மனி முழுவதும் வழங்கின. சோஃபி, ஹான்ஸ், கிறிஸ்டோப் மரணத்துக்குப் பிறகும் அவர்களின் குரல் உரக்கக் கேட்க ஆரம்பித்தது. நேசப்படைகள் ஜெர்மனி மீது படையெடுத்து வந்தன. ஹிட்லரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்டனர்.
எங்கெல்லாம் அடிப்படைவாதம் தலைதூக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் மனித மாண்புகள் மிதிக்கப்படுகின்றனவோ, எங்கெல்லாம் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் போராட்டத்தின் சின்னமாக இருந்துகொண்டிருப்பார் இந்த வெள்ளை ரோஜா!
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT