Published : 29 May 2016 01:52 PM
Last Updated : 29 May 2016 01:52 PM

பார்வை: திருமண உறவில் எல்லாமே புனிதம்தானா?

“எனக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகின்றன. இதுவரை ஒரே ஒரு முறைகூட என் விருப்பத்தை என் கணவர் கேட்டதும் இல்லை, நானும் வெளிப்படுத்தியதும் இல்லை. எனக்குப் பல நேரம் பிடிக்கவில்லை என்றாலும் அவரது விருப்பத்துக்காக இணங்கியிருக்கிறேன். அவர் குடித்துவிட்டு வரும் நாட்களில் அந்த வாடையே குடலைப் புரட்டும். அப்போதும் அதைச் சகித்துக்கொண்டு மறுப்பேதும் சொல்லாமல் இருந்திருக்கிறேன். அது போன்ற நாட்களில் என்ன வாழ்க்கை இது, நம் உணர்வுக்கு மதிப்பே இல்லையா என்று தோன்றும்” என்று சொல்கிறார் பெயர் வெளியிட விரும்பாத வாசகி ஒருவர்.

திருமண பந்தத்துக்குள் வல்லுறவு என்னும் பிரச்சினை இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், திருமணத்துக்குள் வல்லுறவா, அப்படியெல்லாம் பேசுவதே முறையற்றது என்னும் எதிர்வினைகள்தாம் அதிகம் வருகின்றன. காரணம், அது குறித்த விழிப்புணர்வு இங்கே இல்லை.

மனைவியின் விருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அவளது அனுமதியைப் பெறாமல் ஒரு கணவன் அவளுடன் கொள்ளும் பலவந்தமான உறவுதான் திருமண வல்லுறவு எனப்படுகிறது. இது குறித்த சட்டம் இயற்றப்படுவது பற்றிப் பேச்சு எழுந்திருக்கும் நிலையில் அண்மையில் வந்துள்ள வலைதள வீடியோ ஒன்று இப்பிரச்சினை குறித்து உரக்கவும் தெளிவாகவும் பேசுகிறது. திருமணம் என்பது புனிதமானது என்ற காரணத்தாலேயே அந்த உறவுக்குள் நடக்கிற வன்முறையையும் புனிதம் என்றே சகித்துக்கொள்ள வேண்டுமா?

இந்தக் கேள்வியைத்தான் எழுப்புகிறது அந்த வீடியோ. Girliyapa வெளியிட்டிருக்கும் இந்த வீடியா, கடந்த வாரம் வைரலானது. பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிற, ஆனால் நாம் வெளிப்படையாகப் பேசத் தயங்குகிற விஷயத்தை கேலியான வீடியோவாக வெளியிட்டு கவனம் ஈர்த்திருக்கிறர்கள். வீடியோவின் தலைப்பே மிரட்டலாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது.

எது காதலின் உச்சம்?

திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் தன் பிறந்த வீட்டுக்குப் பெட்டியுடன் வருகிறாள் ஒரு பெண். வீட்டில் இருக்கிற அனைவரும் அவளைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள். “பெண்ணாக இருப்பதால் நான் சொல்லும் ‘வேண்டாம்’ என்ற வார்த்தைக்கு மதிப்பில்லையா?” என்று கேட்கிறாள் அந்தப் பெண். உடனே அவளுடைய மாமா, பகோடா வேண்டுமா என்று கேட்க, அவள் வேண்டாம் என்று மறுக்கிறாள். “பார்த்தாயா, நீ ‘வேண்டாம்’ என்று சொன்னதை ஏற்றுக்கொண்டேன்” என்று பெருமிதத்தோடு சொல்கிறார். தான் வல்லுறவு செய்யப்பட்டதாக அந்தப் பெண் சொல்ல, வீட்டிலிருக்கும் அனைவரும் கொதித்துப் போகிறார்கள்.

அந்தக் கயவனை நையப்புடைத்துவிடும் ஆவேசத்துடன் கொந்தளிக்கிறார் அப்பா. “யார் அப்படிச் செய்தது?” என்ற கேள்விக்கு, தன் கணவனின் பெயரைச் சொல்கிறாள் அவள். அவ்வளவுதான், வீட்டிலிருக்கும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, அவளுடைய மாமா உண்மையிலேயே சோபாவில் இருந்து கீழே விழுந்து சிரிக்கிறார். அந்தப் பெண்ணின் தங்கை மட்டும் அக்காவைப் புரிந்துகொள்ளும் பார்வையுடன் நோக்குகிறாள்.

“ அடி அசட்டுப் பெண்ணே… இது காதலின் உச்சம். இதைப் போய் வல்லுறவு என்று சொல்கிறாயே. உன் அப்பாவும் தாத்தாவும் செய்யாததா” என்று ஆளாளுக்கு விளக்கம் தருகிறார்கள். வேலை செய்யும் பெண்ணின் அனுபவத்தையும் குறிப்பிடுகிறார்கள். “இதெல்லாம் 23 நொடியில் முடிந்துவிடுகிற விஷயம். இதுக்குப் போய் இத்தனை அலட்டலா” என்று முத்தாய்ப்பு வைக்கிறார் அம்மா.

இந்தக் களேபரத்துக்கு இடையில் மருமகன் வர, அவருக்கு நம் வழக்கப்படி ராஜ வரவேற்பும் உபசரிப்பும். “நான் தினமும் காலையில் எழுந்து அலுவலகம் செய்கிறேன். இவள் நாள் முழுக்க வீட்டு வேலை செய்வதைத் தவிர வேறென்ன செய்கிறாள்? என் காதலையும் புரிந்துகொள்ள மறுக்கிறாள். எனக்குக் கத்தரிக்காய் அலர்ஜி என்று தெரிந்தும் அதைச் சமைத்தாள். அதனால் எனக்குத் தொண்டையில் பிரச்சினை” என்று விளக்கம் தர, தன் தவற்றை உணர்கிறாள் அந்தப் பெண். “என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் காதலை நான் புரிந்துகொண்டேன்” என்று சொல்ல, எல்லாமே சுபம். குடும்பமே ஒன்றாக நின்று செல்ஃபி எடுக்க, அதிர்ந்துபோகிறாள் அந்த வீட்டுப் பதின்பருவப் பெண்.

வீடியோ முடிந்ததும் ஓடுகிற புரமோஷன் காட்சியில் ஒரு பெண் “இல்லை” என்று சொல்ல, அதை இன்னொருத்தி “ஆமாம்” என்று திரித்துச் சொல்கிறாள். ஆனால் முதலாமவள் அழுத்தம் திருத்தமாக “இல்லை என்றால் இல்லை என்றுதான் அர்த்தம்” என்று சொல்கிறாள்.

வல்லுறவும் குற்றமே

பெரும்பாலான இந்தியக் குடும்பங்களில் நடப்பதைத்தான் சித்தரிக்கிறது இந்த வீடியோ. சில காட்சிகளும் வசனங்களும் நம் சூழலுக்குப் பொருந்தாதவை போலத் தோன்றினாலும் அவை திருமண வல்லுறவு குறித்து சரியாகவே பேசுகின்றன. திருமண வல்லுறவு குறித்து நம் நாட்டில் போதுமான விழிப்புணர்வு இல்லாதபோது சட்ட வரையறை மட்டும் பெண்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுமா? ‘மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் அவளைத் தொடுவது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்’ என்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவின் பரிந்துரை, நம் சமூகத்துக்குப் பொருந்தாது என்று நிராகரிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடே இன்னும் இழுபறியில் இருக்கும்போது, நம் பண்பாட்டின், புனிதத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிற திருமண உறவில் பெண்களுக்கு நிகழும் கொடுமைக்கு மட்டும் விரைவில் தீர்வு கிடைத்துவிடுமா என்ன?

கணவன் மனைவிக்குள் நடக்கிற அந்தரங்க விஷயம் என்பதாலேயே பலர் திருமண வல்லுறவு குறித்து வெளியே சொல்வதில்லை. கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு தினம் தினம் துயரத்தை அனுபவிக்கிறார்கள். தவிர பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து ஊடகங்களும் பொது மக்களும் பல கற்பிதங்களை உருவாக்கிவைத்திருக்கிறார்கள் எடுத்துக்காட்டாக மன ரீதியான சிக்கல் கொண்ட ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்புடன் பலருக்குத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இப்படியான செயல்களுக்கும் பெண்களே பலிகடாவாக்கப்படுகிறர்கள்.

பலிகாடாவாக்கப்படும் பெண்கள்

“எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்குத் திருமணமானது. அவளுடைய கணவன் தினம் தினம் அவளைச் சித்தரவதைப்படுத்தியிருக்கிறான். சிகரெட்டால் சுடுவது, சூடான பாலை மேலே கொட்டுவது, உடல் முழுக்க ரணப்படுத்துவது என்று அவனது கொடுமை எல்லை மீறியபோதுதான் அந்தப் பெண் அழுதபடியே என்னிடம் அனைத்தையும் சொன்னாள். இத்தனைக்கும் அந்தப் பையன் படித்து, நல்ல வேலையில் இருக்கிறவன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பெண்ணியச் செயற்பாட்டாளர் ஒருவர்.

ஆண்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துகிற நம் நாட்டில் தாம்பத்திய உறவு குறித்த தன் விருப்பத்தைப் பெண்கள் வெளிப்படுத்துவதே இல்லை. அப்படிச் செய்கிற பெண்கள் நடத்தைப் பிறழ்வு கொண்டவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். குடும்பப் பெண் என்றால் கணவனுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தர வேண்டும், அவளுக்கென்று தனியே எந்த ஆசையும் இருக்கக் கூடாது என்பது இங்கே எழுதப்படாத சட்டம். ‘வேண்டாம்’ என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு நம் குடும்ப அமைப்பில் வழியே இல்லை. அப்படி மீறி சொன்னாலும் ‘அவ குடும்பத்துக்குச் சரிப்பட்டு வரமாட்டா’ என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

வீட்டுக்கு வெளியே நடக்கிற பாலியல் கொடுமைகளைப் பற்றிக் கொந்தளிக்கிற பலரும் திருமண வல்லுறவுகளைப் பற்றி மூச்சு விடுவதே இல்லை. காரணம் திருமண பந்தம் என்பது நம் நாட்டில் புனிதமானது. உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத பந்தம் புனிதமானதா? ஒரு உறவின் பெயரால், பந்தத்தின் பெயரால் பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறலை எப்படி காதல் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? கணவரை அனுசரித்துப் போவது மட்டுமல்ல, பிடிக்காததை மறுப்பதும் மனைவிக்கான இலக்கணம் என்பதைப் பெண்களும், மனைவிக்கும் ஆசைகளும் உணர்வுகளும் உண்டு, அவர்களும் மனிதப் பிறவிகள்தான் என்பதை ஆண்களும் உணரத் தொடங்குவதுதான் இந்தப் பிரச்சினைகான தீர்வாக இருக்க முடியும்.

நீங்க என்ன சொல்றீங்க?

திருமண உறவில் நிகழும் பாலியல் வல்லுறவை எப்படிச் சரி செய்வது? நம் சமூகத்தில் அது சாத்தியமா? இல்லை பெண்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் புழுங்கியே மடிய வேண்டுமா? உங்கள் கருத்து என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x