Last Updated : 06 May, 2016 11:53 AM

 

Published : 06 May 2016 11:53 AM
Last Updated : 06 May 2016 11:53 AM

திரைப் பார்வை: வீட்டை விட்டு வெளியேறுகிறாள்- இஷ்டி

சமஸ்கிருதத் திரைப்படம்

தமிழ் மொழியின் தொன்மையை இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுத் தொடர்ச்சியுடன் தமிழ் பேசப்பட்டுவருகிறது. அச்சு முன்னேற்றமடைந்ததில் இன்று ஏராளமான மிகச் சிறந்த நூல்கள் தமிழில் வெளிவருகின்றன.

சமஸ்கிருதம் ஒலி சாத்தியக்கூறுகளில் சிறந்தது. இன்று அது புழக்கத்தில் இல்லை என்றால் அதற்குப் பண்டிதர்களே காரணம். எனக்குத் தெரிந்த ஒருவர் விடாமல் ‘கல்யாண கல்பதரு’ என்றொரு சமஸ்கிருதப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார். இது ஐம்பது ஆண்டுக் கதை. அவர் பிடிவாதம் அவருடைய வாரிசுகளுக்கு இருக்க வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்?

சென்னை மயிலை கிரி டிரேடர்ஸ் கடைக்குச் சென்றால் சமஸ்கிருத நூல்களைப் பார்க்கலாம். எல்லாம் ஸ்தோத்திர வெளியீடுகள். அன்றாட வாழ்க்கை பற்றி ஒரு நூல் இருக்காது. இருபது ஆண்டுகளுக்கும் முன்பாக ஜி.வி. ஐயர் என்பவர் சமஸ்கிருதத்தில் ஒரு திரைப்படம் எடுத்தார். ஜி.வி. ஐயருக்கு வெறுங்கால் டைரக்டர் என்று பெயர் உண்டு. “என்ன பெரிய புதிய அலை! நான் அதையெல்லாம் விஞ்சும்படியாக ஒரு படம் எடுக்கிறேன்,” என்று சபதம் செய்தார். ‘ஹம்ச கீதே’ என்றொரு படம் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். எல்லோரும் ‘இதென்ன பைத்தியக்காரத்தனம்’ என்று சொல்ல அவர் ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாற்றை சமஸ்கிருதத்தில் எடுத்தார். அப்படம் நடுவர்களின் ஒருமித்த தேர்வாக ஆண்டின் சிறந்த திரைப்படம் என்று விருது பெற்றது. அதில் ஒரு பொருத்தம் இருக்கிறது. சங்கரர் அவருடைய ஏராளமான விளக்கவுரைகளை சமஸ்கிருதத்தில்தான் படைத்திருக்கிறார். ஜி.வி. ஐயர் அடுத்தபடியாக ‘ ராமானுஜர்’ வரலாற்றைத் தமிழில் உருவாக்கினார். மூன்றாவது மஹா விளக்கவுரைக்காரரான மத்வாச்சாரியர் வரலாற்றைக் கன்னட மொழியில் எடுத்தார். மூன்றும் திரைப்படக் கலையில் விசேஷமானவை.

ஜி.வி. ஐயர் பல முன்னணி இயக்குநர்களை விட அதிக தேசிய விருதுகள் வாங்கினார். நான் ‘மத்வாச்சாரியர்’ படத்தைத் திரையரங்கில் பார்த்தேன். மனதில் அலட்சியத்தோடு போனேன். ஆனால் ஜி.வி. ஐயர் (இமய) மலைகளைப் படமெடுத்த விதம் நானறிந்து வேறு யாரும் முயற்சி செய்ததில்லை.

பழங்காலத்தை சமஸ்கிருதத்தில் சித்தரிக்கலாம். ஆனால் தற்காலம்? அதுவும் முடியும் என்று என் நீண்ட கால நண்பர் பேராசிரியர் பிரபா நிரூபித்திருக்கிறார்.

கேரளம் நம் அண்டை மாநிலமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் பிரிவுகளைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? அப்படிப் பார்த்தால் நம் தமிழர் பற்றியே எவ்வளவு தெரியம்?

பொதுவான அபிப்பிராயம், இங்கே பிராமணர்கள், அங்கே நம்பூதிரிகள். மேற்பூச்சாகத்தான்... நம்பூதிரிகளில் மூத்த மகன் மட்டும்தான் மணந்துகொள்ளலாம். இதர மகன்கள் வேறு பிரிவுப் பெண்களுடன் வாழலாம். ஆனால், குடும்பத்தில் அவனுக்கு இடம் கிடையாது. வேத பாராயணம் சிறுவர்களுக்குக் கடுமையாகக் கற்பிக்கப்படும். ஆனால், ஒருவருக்கும் படிப்பறிவு கிடையாது. நம்பூதிரியின் மகனாக வாழ்பவனுக்கே எழுத்தறிவு கிடையாது. மூத்த நம்பூதிரி யாகம், யாகம் என்று இருக்கும் பணத்தை ஒழித்துவிடுவார். அரிசி. பருப்பு வாங்குவதற்கு வீட்டுப் பாத்திரங்களை விற்பார். சீதனத்துக்காக 71 வயது நம்பூதிரி 17 வயதுப் பெண்ணை மணப்பார்.

நான் பிரபாவை சென்னை லயோலா கல்லூரிப் பேராசிரியராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்திருக்கிறேன். ஆனால், சினிமா பக்கம் போகிறவராக அவரைக் கனவிலும் நினைத்ததில்லை. அவர் கதை வசனம் எழுதி ஒரு சமஸ்கிருதத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்!

பிரபா பல இலக்கியவாதிகளின் நண்பன் என்றும் எனக்குத் தெரியும். மகாகவி அக்கிதன் (வயது 90) இவருக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இவர் ஏற்பாடு செய்திருந்த விசேஷக் காட்சியில் பலர் நின்றுகொண்டு பார்க்க வேண்டியிருந்தது.

‘நிஷ்டி’ என்றால் தன்னை அறியும் முயற்சி. புது மணப்பெண்ணாக வந்த 17 வயதுப் பெண் எழுதப் படிக்கத் தெரிந்தவள். நம்பூதிரி வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுத்தருகிறாள். நம்பூதிரியின் மகன் அவனும் எழுதப் படிக்கத் தெரியாதவன் கதகளி உபகரணங்கள் செய்வதில் தேர்ச்சி பெற்றவன். அவனுடன் பேசுவதை ஒழுக்கக் குறைவு என்று இதர நம்பூதிரிகள் சொன்னவுடன் அவன் வீட்டை விட்டே சென்றுவிடுகிறான். இளம் நம்பூதிரிகளால் இயல்பான குடும்ப வாழ்க்கை வாழ முடியாது, அனைவரையும் பாமரர்களாக வளர்க்கும் இனம் அழிந்துபோகும் என்கிறாள் புது மணப்பெண். நம்பூதிரிப் பெண்கள் மீது வெயில் படக் கூடாது என்று எடுத்துச் செல்லும் சம்பிரதாயக் குடையை விட்டெறிந்துவிட்டு அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பெரிய நம்பூதிரிக்கு இன்னொரு அதிர்ச்சி. அவர் கடைசியாகச் செய்த யாகத்தின் நெருப்பு, அணையா நெருப்பு. அது அணைந்துவிடுகிறது. “நான் இருக்கும்போதே இறந்தவனாகிவிட்டேனா?” என்று தலை மீது கையை வைத்துக்கொள்கிறார்.

இதில் மிகை ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. கேரளத்தின் இரண்டாவது முதல்வர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட். பழுத்த கம்யூனிஸ்ட். அப்படிப்பட்டவர் 1957-லேயே மாநிலத்தைத் தலைமை தாங்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநிலத்தில் ‘நிஷ்டி’ திரைப்படத்தில் காணப்படும் நம்பூதிரிகள் போன்றவர்கள் இன்றும் இருந்தால் நிலைமை உடனே திருத்தப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x