Published : 06 May 2022 03:15 PM
Last Updated : 06 May 2022 03:15 PM

என் தம்பியை நிறையவே மிஸ் செய்தேன்! | இயக்குநர் செல்வராகவன் பேட்டி


‘காதல் கொண்டேன்’ வினோத், திவ்யா, ‘புதுப்பேட்டை’ கொக்கி குமார், கிருஷ்ணவேணி தொடங்கி, ‘என்.ஜி.கே’ படத்தின் நந்தகோபாலன் குமரன் வரை, தன்னுடைய கதாபாத்திரங்களைப் புறக்கணிப்பிலிருந்து எழும் தீவிரத்துடன் திரைக்கதை நெடுகிலும் செலுத்தக்கூடியவர் இயக்குநர் செல்வராகவன். தற்போது தனுஷின் கதை, திரைக்கதை, நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதற்கிடையில் ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியிருக்கிறார். ஆனால், அந்தப் படத்துக்கு முன்பே அவர் ஒப்புக்கொண்டு நடிக்கத் தொடங்கிய ‘சாணிக் காயிதம்’ இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் நிலையில் ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி.


‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தொடங்கிய பயணம், இப்போது உங்களை நடிகராகவும் மாற்றியிருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது என்ன நினைக்கிறீர்கள்?


கடந்த காலம் என்பது முடிந்துபோன ஒன்று. இன்று நடப்பது மட்டும்தான் முக்கியமானது என நினைக்கிறேன். இன்று இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒவ்வொரு நாளும் உங்களை ‘அப்டேட்’ செய்துகொள்ள வேண்டும். இன்றைக்கு என்ன நாம் புதிதாகச் செய்யப்போகிறோம் என்பது மட்டும்தான் என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. திரும்பிப் பார்ப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல் நாளைக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றியும் நான் யோசிப்பதில்லை. இன்றைய தினத்தை, இந்தத் தருணத்தை அழகாக வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கிறேன்.


கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை, நடிகர்களிடம் கேட்டுப் பெறும் இடத்திலிருந்து, அதே நடிப்பை கேமரா முன்னால் நின்று கொடுத்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?


நடிப்பைக் கேட்டுப் பெறுவதில் இயக்குநருக்கு இயக்குநர் வேறுபாடு உண்டு. ஒவ்வொருவரும் ஒரு உத்தியைக் கையாளுவார்கள். நான் என்ன தேவை என்பதைச் சொல்லிவிட்டு, மிகக் கொஞ்சமாக நடித்துக் காட்டுவேன். ஆனால், நானே நடிப்பை ‘டெலிவர்’ செய்ய வேண்டும் என்று வந்தபோது, என் மீதே எனக்கு நம்பிக்கையில்லை. ‘சாணிக் காயிதம்’ படத்தின் இணைத் தயாரிப்பாளரான சித்தார்த் எனது நல்ல நண்பர். அவர்தான் என்னை வற்புறுத்தினார். நானும் பலவாறாகச் சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவரும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் என்னை விடுவதாக இல்லை. கேமரா முன்னால் நின்று என்னால் நடிக்க முடியும் என்று தோன்றவில்லை. காரணம், நடிப்பது சலிப்பு ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை எனக்குக் கற்பிக்கும் ஒன்றாக அது இருந்தது. பொறுமை காத்து என்னுடன் நடித்த கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கும் இயக்குநர் அருண் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் நன்றி.


உங்களது அறிமுகப்படம் வெளியாகும் முன்பே ‘பீஸ்ட்’ வெளியாகிவிட்டது. அதில் நக்கலும் விமர்சனமும் செய்யக் கூடிய ‘அல்தாப் ஹுசைன்’ கதாபாத்திரத்தில் நடித்ததற்கு எதிர்வினைகள் எப்படியிருந்தன? விஜயுடன் நடித்த அனுபவம் பற்றிக் கொஞ்சம்…


இயக்குநர் நெல்சனுக்குத்தான் எல்லாப் பெருமையும். அவர் சொன்னதைச் செய்தேன். என் மீது அவர் வைத்த நம்பிக்கைதான் ‘அல்தாப் ஹுசைன்’. விஜயுடன் ஒரு காட்சியில் இணைந்து நடித்தேன். அவர் செட்டில் வேலை செய்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் ஏன் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்பதை அவரது அர்ப்பணிப்பைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.


இன்னொரு இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும்போது, செல்வராகவன் என்கிற இயக்குநர் படப்பிடிப்புத் தளத்தில் எட்டிப் பார்த்தாரா?


‘நடிப்பு என்று வந்திருக்கிறாய் வாயை முடிக்கொண்டு சும்மா இரு’ என்று என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். நடிகர் எனும்போது இயக்குநரிடம் உங்களை ‘சரண்டர்’ செய்துவிடுவதுதான் சரியாக இருக்கும். காரணம், நடிகராக அந்தக் கதாபாத்திரத்துக்கு தேவையானதைக் கொடுக்க இப்போதுதான் அவரிடம் இணைந்திருப்போம். ஆனால், அந்தக் கேரக்டரை எழுதின இயக்குநர் எத்தனை வருடமாக அதனோடு ‘ட்ராவல்’ பண்ணினார், அதைப் பற்றி எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார் என்பதெல்லாம் அவருக்கு மட்டும்தான் தெரியும். அப்படியிருக்கும்போது திடீரென்று நடுவில் புகுந்து பேசக் கூடாது இல்லையா? நான் நடிக்க வந்தது ஆக்ஸிடெண்டல்தான். இயக்குநர் செல்வராகவன்தான் நிரந்தரமானவன்.


தனுஷ் என்கிற தேசிய விருதுபெற்ற நடிகரை உருவாக்கியவர் நீங்கள். மற்றொரு தேசிய விருதுபெற்ற நடிகரான கீர்த்தி சுரேஷுடன் நடித்தபோது ஒத்துழைப்பு எப்படியிருந்தது?


ஏற்கெனவே அவங்க ஒரு ‘எஸ்டாபிளிஷ்டு’ நடிகர். அவங்க ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ல பயணம் செய்றவங்கன்னா நான் ‘தேர்டு கிளாஸ்’ பயணி. ஆனால். கீர்த்தி சுரேஷ் ‘அக்ளைம்டு ஆக்டர்’ என்கிற எந்தப் பந்தாவும் இல்லாம, ஸ்பாட்ல அவங்க ஒரு மூலையில கிடப்பாங்க. நான் எங்கயாவது ஒரு மூலையில உட்கார்ந்திருப்பேன். ரொம்ப சாதாரண பெண்மணியாக இருக்காங்க.


புத்தாயிரத்தில் புதிய தலைமுறை சினிமா தந்தவர் நீங்கள். இப்போது ‘நியூ வேவ்’ இயக்குநர்களின் கூட்டம் தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. ஒரு சீனியராக அவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?


நானும் அந்தக் கூட்டத்தில்தான் இன்னமும் இருக்கிறேன். ஆனால், ஜூனியர்கள் ரொம்பவே அனுபவித்துச் செய்கிறார்கள். புல்லரித்துச் செய்கிறார்கள். இது சினிமாவை அவர்கள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


ஓடிடியும் அதில் கிடைக்கும் புதிய புதிய ‘கண்டெண்ட்’டுகளும் சினிமா பார்க்கும் அனுபவத்தை மாற்றிவிட்டதாக நினைக்கிறீர்களா? ரசிகர்களின் தேடல் அதிகமாகிவிட்டது என்பதை உணர்கிறீர்களா?


புத்தகம் படிப்பது மாதிரிதான் சினிமா பார்ப்பதும். நிறைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க ‘நாலேஜ்’ என்பது வளர்ந்துகொண்டே போகும். அப்படித்தான் ஓடிடியும் நிறைய ‘சாய்ஸ்’ கொடுக்கிறது. எங்கோ நாம் அறிந்திராத நாட்டிலிருந்து வரும் படத்தை ஓடிடியில் பார்க்கமுடியும். இது சினிமாவைப் பார்ப்பவர்களுக்கும் உருவாக்குபவர்களும் நல்லதுதான்.

நானே வருவேன் படத்தில் தனுஷ்


பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் உங்களுடைய தம்பி தனுஷுடன் இணைந்திருக்கிறீர்கள்? இந்த இடைவெளியும் பிரிவும் கடினமாக இருந்ததா?


நிச்சயமாக. இரண்டு பேருமே அவரவர் பாதையில் பிஸியாகப் போய்க்கொண்டிருந்தோம். இதனாலேயே எனக்குத் தம்பியாலும் என்னால் தம்பிக்கும் ஆத்மார்த்தமான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இந்தக் காலகட்டத்தில் தம்பியை ரொம்பவே மிஸ் செய்தேன். இப்போது ‘நானே வருவேன்’ எங்களை இணைத்திருக்கிறது. தனுஷ் ஒரு கடும் உழைப்பாளி. மீண்டும் நாங்கள் இணைந்து படம் செய்வது என்று வரும்போது, நான் ‘புதுப்பேட்டை 2’ படத்தைப் பண்ணலாம் என்றேன். அவர், சில ஐடியாக்களைச் சொன்னார். அதிலேயே சில மாதங்கள் ஓடிவிட்டன. பிறகு அவரே எழுதிய ஒரு திரைக்கதையுடன் வந்தார். அதை வாசித்த பிறகு ஒரு அண்ணனாக எனக்குப் பெருமையாக இருந்தது. அதைப் படமாக எடுப்பது இயக்குநர் செல்வராகவனுக்கு நல்ல சவாலாக இருக்கும் என்று களமிறங்கி, ஸ்பாட்டில் தனுஷ் ஐடியாக்களையும் இணைத்துக்கொண்டு ஒரே மூச்சாகப் படத்தை எடுத்து முடித்தேன். இப்போது போஸ்ட் புரோடெக்‌ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.


‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்துக்கான திரைக்கதை தயாராக இருப்பதாகக் கூறியிருந்தீர்களே?


உண்மைதான். ஆனால், அதற்கு கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் வந்தாகவேண்டுமே. காலப்போக்கில் எல்லாமே நடக்கும் என்று நினைக்கிறேன். எதையும் நாம் வலிந்து செய்துவிட முடியாது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x