Last Updated : 25 May, 2016 12:23 PM

 

Published : 25 May 2016 12:23 PM
Last Updated : 25 May 2016 12:23 PM

விடுமுறையில் வாசிக்கலாமே: வாண்டுகளின் என்சைக்ளோபீடியா

பதினைந்தாம் நூற்றாண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டறியப் பட்டிருக்கவில்லை. அதேநேரம், ‘இண்டீஸ்' என்று அழைக்கப்பட்டுவந்த இந்தியாவில் பெரும் செல்வம் இருப்பதாக நம்பப்பட்டது.

அந்த செல்வம் வெறும் காசல்ல. மிளகு, லவங்கம், ஜாதிக்காய், குங்குமப்பூ போன்ற அரிய நறுமணப் பொருட்கள். வெளிநாட்டினர் பெரிதும் விரும்பிய நறுமணப் பொருட்கள்.

இந்தப் பொருட்கள் அரேபியாவுக்குச் சென்று கொண்டிருந்தன. அரேபியாவில் அவை பயன்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், அங்கிருந்து பெரும் விலை வைக்கப்பட்டு வெளிநாடுகளுக்குச் சென்றன.

அரேபியர்களை நம்பாமல் இந்தப் பொருட்களைப் பெற வேண்டுமானால் புதிய கடல் வழி தேவை. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல் வழி கண்டறியும் முயற்சி, இந்தப் பின்னணியில்தான் தீவிரமடைந்தது.

70-களிலிருந்து 90-கள் வரை புகழ்பெற்ற குழந்தை எழுத்தாளராக விளங்கிய வாண்டுமாமா, ‘கடல்களும் கண்டங்களும்' என்ற புத்தகத்தில் இதைப் பற்றி எழுதியுள்ளார்.

‘வரலாறு வேப்பங்காய்', ‘வெறும் ஆண்டுகளும் மன்னர்களின் பெயர்களுமே வரலாறு', ‘வரலாறு சுத்த போர்' என்றெல்லாம் நம்புபவர்கள் வாண்டுமாமா எழுதியுள்ள வரலாறு, பொது அறிவுப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். வரலாறு எவ்வளவு சுவாரசியமானது என்பது அப்போது புரியும். சரி,

இந்தியாவுக்கான கடல்வழி கண்டறிந்ததில் நடந்த முக்கியமான அம்சங்களைப் பார்ப்போம்.

# இந்தியாவுக்கான கடல்வழி கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை ஆப்பிரிக்காவின் தென்முனை வளைந்து இந்தியாவோடு இணைந்துள்ளது என்றுதான் அன்றைய ஐரோப்பியர்கள் நம்பினர். இந்த நம்பிக்கையை தகர்க்கக் காரணமாக இருந்தவர் 1460-ல் இறந்த போர்த்துக்கீசிய இளவரசர் ஹென்றி. அதே ஆண்டு பிறந்தவர்தான் இந்தியாவுக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்த வாஸ்கோடகாமா. அவரும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்தான்.

# கடல் சார்ந்த அறிவைப் பெற்றிருந்த இளவரசர் ஹென்றி மாலுமிகளையும் கப்பல்களையும் உருவாக்குவதற்காகவே தனி பயிற்சிப் பள்ளியை நடத்திவந்தார். அந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் புதிய வரைபடங்கள், கடல் வழிகளை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டார்கள்.

# ஐரோப்பியக் கப்பல்கள் பெரியவை, கனமானவை, சதுர வடிவில் பாய்மரங்களைக் கொண்டவை. அதேநேரம் அரேபியக் கப்பல்கள் இலேசானவை, முக்கோணப் பாய்மரங்களைக் கொண்டவை. இந்த இரண்டின் சாதகமான அம்சங்களை இணைத்து இளவரசர் ஹென்றி உருவாக்கியதுதான் காரவெல் கப்பல். நீண்ட கடல் பயணங்களை இது எளிதாக்கியது.

# ஆப்பிரிக்காவின் தென் முனை ‘புயல் முனை' என்ற பெயரைப் பெற்றிருந்தது. அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்று உறுதியாக நம்பப்பட்டது. அந்த முனையை வாஸ்கோட காமா தாண்டிச் சென்றதற்குப் பின்னரே அதற்கு ‘நன்னம்பிக்கை முனை' என்று பெயர் வந்தது.

# வாஸ்கோட காமாவின் நான்கு கப்பல்களும் பேரலைகள், புயலால் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு கடலும் காற்றும் ஒரு வழியாக அடங்கிய பின்னரே காமாவின் கப்பல்கள் 1497-ல்நன்னம்பிக்கை முனையைக் கடந்தன.

# வாஸ்கோட காமாதான் நன்னம்பிக்கை முனையை முதலில் கடந்தார் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவருக்கு முன்பாகவே 1488-ல் போர்ச்சுகலைச் சேர்ந்த பர்த்தலோமியு டயஸ் அந்த முனையைக் கடந்திருந்தார். ஆனால், அதற்குப் பிறகு மாலுமிகள் தெரிவித்த கடுமையான எதிர்ப்பால் அவர் நாடு திரும்பிவிட்டார்.

அவரும் காமாவுடன் புதிய கப்பலில் அனுப்பப்பட்டிருந்தார். இடையிலேயே ஆப்பிரிக்க காலனி நாட்டுக்கு அவர் சென்றுவிட்டார்.

# இந்தியாவுக்குக் கடல் வழி கண்டறியும் நோக்கத்துடன் அனுப்பப்பட்ட வாஸ்கோட காமா, மற்றொரு வேலையையும் செய்தார். கடற்கரை வழியாகவே சென்று ஆப்பிரிக்க வரைபடத்தை அவர் வரைந்திருக்கிறார். அது கச்சிதமாக இருப்பதுதான் ஆச்சரியம்.

# பத்து மாதக் கடல் பயணத்தின் இறுதிக் கட்டமாகக் கிழக்கு ஆப்பிரிக்காவின் மெலிண்டா துறைமுகத்திலிருந்து மே மாத ஆரம்பத்தில் புறப்பட்ட வாஸ்கோட காமாவின் கப்பல்கள் கேரளத்திலுள்ள கோழிக்கோடு துறைமுகத்தை மே 20-ம் தேதி அடைந்தன. அதாவது இந்திய மண்ணைத் தொட்டன.

# கோழிக்கோடு இருந்த மலபார் பகுதியை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர் சமுத்திரி (கடல் என்று அர்த்தம்). கோழிக்கோடு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது. அங்கிருந்து எகிப்து வழியாக மத்திய தரைக்கடலுக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

போர்த்துகீசியர்கள் நிபந்தனையின்றி வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு போர்த்துகீசிய மன்னர் கொடுத்த கடிதத்தை சமுத்திரியிடம் வாஸ்கோட காமா கொடுத்தார்.

# வாஸ்கோட காமா வெற்றிகரமாக இந்திய மண்ணைத் தொட்டு நாடு திரும்பிவிட்டாலும், அவரோடு கப்பலில் சென்ற குழுவில் பாதிப் பேர் கடல் பயணத்திலேயே இறந்துவிட்டார்கள்.இந்த ஆச்சரியமான தகவல்களை வாண்டுமாமா தொகுத்துள்ளார்.

இந்தியாவுக்கான கடல் வழியை வாஸ்கோட காமா கண்டறிந்திருக்காவிட்டால், ஐரோப்பியர்கள் சற்றுத் தாமதமாகவே கடல் வழியாக இந்தியாவுக்கு வந்திருப்பார்கள்.

அந்த வகையில் ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட வாஸ்கோட காமா மறைமுகக் காரணம். அதேபோல இந்தியப் பகுதிகளான கோவா, டையு, டாமன் போர்த்துகீசிய காலனிகளாக இருந்தவையே. நாடு விடுதலை பெற்ற பிறகு கடைசியாக இணைக்கப்பட்ட பகுதி கோவா, அதுவும் 1961-ல்தான் இந்தியாவுடன் சேர்ந்தது.

எப்படி இருந்தாலும் நிகழ்ந்துவிட்ட வரலாறை மாற்றி எழுத முடியாது. வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் நாம் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியாது.

தன்னுடைய சுவாரசியமான, உத்வேகமூட்டும் நடையால் கவர்ந்துவிடுகிறார் வாண்டுமாமா. அதற்கு ‘கடல்களும் கண்டங்களும்' நூலில் வாஸ்கோட காமா பற்றிய அத்தியாயம் சிறந்த உதாரணம்.

விக்கிபீடியா போன்ற எளிதில் அணுக முடியாத தகவல் களஞ்சியங்கள் இல்லாத அந்தக் காலத்தில், வாண்டுமாமா போன்றோர் தமிழில் குழந்தைகளுக்குத் தந்த தகவல்கள், கட்டுரைகள் முக்கியத்துவம் பெற்றன. இன்றைக்கு வாசிக்கும்போது அந்த சுவாரசியம் சற்றும் குறையவில்லை. அதுதான் வாண்டுமாமாவின் மேஜிக்.

கடல்களும் கண்டங்களும்,
வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்,
தொடர்புக்கு: 044 - 2436 4243

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x