காலப் பயணம் சாத்தியமா?

காலப் பயணம் சாத்தியமா?
Updated on
3 min read

சூர்யா மூன்று வேடத்தில் நடித்து சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘24’ படம் காலப் பயணத்தைப் பற்றியது. கடந்த காலம், எதிர்காலம் என்று இரண்டு காலங்களுக்கும் பயணிப்பதுதான் ‘காலப் பயணம்’.

காலப் பயணம் குறித்த திரைப் படங்கள், அறிவியல் புனைகதைகள் போன்றவை மேலைநாடுகளிலிருந்து அதிகம் வெளிவந்தாலும் ‘காலப் பயணம்’ என்பதொன்றும் புதிய சிந்தனை கிடையாது. கீழை தேசங்களின் புராணங்களிலும் இதுகுறித்துத் தொன்மங்கள் காணப்படுகின்றன.

கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு:

இந்துப் புராணங்களில் கக்குட்மி என்பவரைப் பற்றிய கதைகள் வருகின்றன. சூர்ய வம்சத்தைச் சேர்ந்த கக்குட்மி மன்னனுக்கு ரேவதி என்ற பெண் இருக்கிறாள். தேவதை போன்ற அழகான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தகுதியான ஆண் யாரும் இந்த உலகத்தில் இல்லை என்று கருதும் கக்குட்மி, ரேவதியை அழைத்துக்கொண்டு பிரம்ம லோகத்தில் இருக்கும் பிரம்மாவிடம் கலந்தாலோசிக்கப் போகிறார். கக்குட்மியைச் சந்தித்ததும் பிரம்மா சிரிக்கிறார்.

‘பிரபஞ்சத்தில் நேரம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடையாது. நீ இங்கு இருக்கும் நேரத்தில் பூமியில் 108 யுகங்கள் கழிந்துவிட்டன. பல லட்சம் வருடங்களாகியிருக்கும்’ என்கிறார். என்ன செய்வதென்று விழித்துக்கொண்டிருக்கும் கக்குட்மியிடம் பிரம்மா, “விஷ்ணு இப்போது பூமியில் கிருஷ்ணராகவும் பலராமராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர்களில் பலராமர் உன் பெண்ணுக்குப் பொருத்தமாக இருப்பார்” என்று யோசனை சொல்லி அனுப்புகிறார். பூமிக்கு கக்குட்மி திரும்பும்போது எதிர்காலத்துக்குள் பிரவேசிக்கிறார்.

இதுபோன்று பல்வேறு மதங்களிலும் தொன்மங்கள் இருக்கின்றன. இவையெல்லாமே புராணங்கள் மட்டுமே. அறிவியல் அடிப்படைகளைவிட நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் சார்ந்து உருவானவை.

எங்கேயோ இடிக்குதே!

சமீப காலம் வரை ‘காலப் பயணம்’ என்பதையே அறிவியலுக்குப் புறம்பான ஒரு கற்பனை என்றுதான் புகழ் பெற்ற அறிவியலாளர்கள் உட்பட பலரும் எள்ளி நகையாடிவந்தார்கள். ‘காலப் பயணம்’ ஏன் சாத்தியம் இல்லை என்பதற்கு மூன்று முரண்பாடுகளை முன்வைத்தார்கள். அவை இங்கே…

அப்பா பிறப்பதற்கு முன்பே தாத்தாவைக் கொல்லுதல்:

குணாளன் என்பவர் கால இயந்திரத்தின் மூலம் கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கிறார். அங்கே அவர் தனது தாத்தாவைச் சந்திக்கிறார். அப்போது குணாளனின் அப்பா பிறந்திருக்கவில்லை. குணாளன் தனது தாத்தாவைச் சுட்டுவிடுகிறார். அப்படியென்றால் குணாளனின் அப்பாவும் பிறக்க மாட்டார். குணாளனும் பிறக்க மாட்டார் அல்லவா! பிறக்காத குணாளன் எப்படிக் காலப் பயணம் செய்து தன் தாத்தாவைச் சுட்டுக்கொல்ல முடியும்?

கடந்த காலம் இல்லாத மனிதன்:

முத்தழகன் என்ற இளைஞர் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க வரும் முதியவர் ஒருவர் கால இயந்திரத்தை வடிவமைப்பது எப்படி என்று சொல்லித்தருகிறார். அதைக் கொண்டு முத்தழகன் எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து பங்குச் சந்தை, கார் பந்தயம், விளையாட்டுப் போட்டி போன்றவற்றின் முடிவுகளைத் தெரிந்துகொண்டு மறுபடியும் நிகழ்காலத்துக்கு வருகிறார்.

தான் தெரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு பெரும் பணக்காரர் ஆகிறார். முத்தழகனுக்கு வயதாகிறது. தனது கடந்த காலத்தை நோக்கிப் பயணித்து, இளைஞராக அப்போது இருக்கக் கூடிய தனக்குக் கால இயந்திரத்தை வடிவமைப்பதன் ரகசியத்தைச் சொல்லுகிறார். அப்படியென்றால் ஆரம்பத்தில் பார்த்த முதியவர் முத்தழகன்தான். முத்தழகனுக்கு முத்தழகனே யோசனை என்றால் முதன்முதலில் கால இயந்திரத்தை முத்தழகனுக்கு யார் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்?

தாயும் நீயே தந்தையும்…

ப்ரீடெஸ்டினேஷன் படத்தில் ஜேன் மற்றும் ஜான்

காலப் பயணத்தைப் பற்றிய முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று ‘ப்ரீடெஸ்டினேஷன்’. காலப்பயணம் செய்யும் ஒரு ரகசிய ஏஜென்ட் மதுவிடுதி ஒன்றில் வேலை பார்க்கிறார். அங்கே வரும் ஜான் என்ற நபர் மது குடித்துக்கொண்டே தனது விசித்திரமான வாழ்க்கைக் கதையைப் பற்றிச் சொல்கிறார்.

பெண்ணாகப் பிறந்தவர் ஜான் (பெண் பெயர்- ஜேன்). பிறந்த உடனேயே யாரோ ஒருவரால் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டுபோய் விடப்பட்ட ஜேன் அங்கேயே வளர்கிறார். பருவமடைந்த பிறகு சந்திக்கும் ஒரு இளைஞனிடம் காதல் வயப்பட்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், அந்தக் குழந்தை காணாமல் போகிறது. பிரசவத்தின்போது ஜேனுக்கு இரண்டு பாலினத்துக்கும் உரிய உறுப்புகளும் இருப்பது மருத்துவர்களுக்குத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட ஒரு சிக்கலின் காரணமாக ஜேனை ஆணாக மாற்றிவிடுகிறார்கள். அந்த ஆண்தான் ஜான்.

இந்தக் கதையைச் சொல்லிமுடித்ததும் ஜேனின் காதலனைக் கண்டு பிடிப்பதற்காக ஜானைக் கால இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு, ஜேனும் அவளது அடையாளம் தெரியாத காதலனும் முதன்முதலின் சந்தித்த தருணத்துக்கு அழைத்துச்செல்கிறார் அந்த ஏஜென்ட். அங்கே, ஜேனும் ஜானும் (இரண்டு பேரும் ஒன்றுதான்!) சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் வயப்படுகிறார்கள். ஜேன் கர்ப்பமாகிறாள். இறுதியில், அந்த ஏஜென்ட், ஜேன், ஜான், குழந்தை அனைவரும் ஒரே நபர் என்பதும், காலப்பயணங்களால் ஏற்பட்ட விசித்திர சந்திப்புகளின் விளைவுகளே அவர்கள் என்பதும் நமக்குத் தெரியவருகிறது. தானே தனக்குத் தாயும் தகப்பனும் குழந்தையும் என்றால் தாத்தா, பாட்டி யார்?

நான்காவது முரண்:

காலப் பயணம் சாத்தியம் இல்லை என்பதற்கு அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட முரண் உதாரணங்கள்தான் இவை. இவற்றோடு நான்காவதாக ஒரு முரணை ஸ்டீவன் ஹாக்கிங் முன்வைக்கிறார். காலப் பயணம் செய்வது சாத்தியம் என்றால் நம் எதிர்காலத் தலைமுறைகள் யாராவது காலப் பயணம் செய்துவந்து நம்மை ஏற்கெனவே சந்தித்திருப்பார்களே? அப்படி யாரும் இதுவரை சந்திக்கவில்லை என்பதே எதிர்காலத்திலும் காலப் பயணத்துக்கான வழிமுறைகள் சாத்தியப்படாது என்பதற்கான உதாரணம்தானே என்று கேள்வி கேட்கிறார்.

ஆனால், தற்போதோ ஸ்டீவன் ஹாக்கிங் உட்பட பல அறிவியலாளர்கள் காலப் பயணம் என்பது சாத்தியமாகலாம் என்ற மனமாற்றத்துக்கு வந்திருக்கிறார்கள். ஏன்?

(அடுத்த வாரம் முடிவடையும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in