Published : 03 May 2022 06:40 PM
Last Updated : 03 May 2022 06:40 PM

ஓடிடி உலகம் | பயனாளிகளின் கவனத்துக்கு..!

சமுக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டி காட்டும் பல திரைப்படங்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. கடந்த 2019-ல் ஜீ5 தளத்தில் வெளியான ‘ஃபிங்கர்டிப்’ ஆந்தாலஜி திரைப்படம் ஒரு அசலான முயற்சி எனலாம். தற்போது ‘பயணிகள் கவனிக்கவும்’ மற்றொரு நல்ல முயற்சி.

காது கேட்காத, வாய் பேச இயலாத எழிலன் (விதார்த்) ஒரு நூலகர். அவர், தன்னுடைய மனைவி,மகன்,மகளுடன் எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது ஆண்டனியின் (கருணாகரன்) என்கிற இளைஞரின் பொறுப்பற்ற செயல். தன்னுடைய மொபைல் போன் வழியே எப்போதும் சமூக ஊடகங்களில் மூழ்கியிருக்கிறார் ஆண்டனி. எழிலன் பற்றிய எந்தப் பின்னணியும் அறியாமல், அவரைப் பற்றிய தவறான ஒரு தகவலை, அவருடைய புகைப்படத்துடன் முகநூலில் பதிவிடுகிறார் ஆண்டனி. அது வைரலாகிறது. அதன்பிறகு எழிலன் குடும்பம் அந்தத் தவறான பதிவால் சந்திந்த சிக்கல்கள் என்ன? தவறான தகவலைப் பகிர்ந்து பிரச்சினைக்கு காரணமாக இருந்த ஆண்டனி என்னமாதிரியான எதிர்விளைவுகளை எதிர்கொண்டார் என்பதுதான் கதை.

சமுக ஊடகங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இன்றைய இளைய தலைமுறையினருக்குப் பொறுப்புணர்வு அவசியம். இளையோரில் பலர், தகவல்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல் சாகச மனப்பான்மையுடன் பிறரைக் குறித்துப் பகிர்ந்துவிடுகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகள் சம்மந்தபட்ட நபரை மட்டுமல்ல; அவரது குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதை இப்படம் நகைச்சுவையைத் தொட்டுக்கொண்டு கூறினாலும், பிரச்சினையின் ஆழத்தை அதன் முக்கியத்துவம் குறைந்துவிடாமல் சித்தரித்துள்ளது.

எழிலனாக விதார்த்தின் வெகு இயல்பாக நடிப்பு, நம்மை கதைக் களத்துக்குள் இழுத்துக்கொள்கிறது. அவருடைய மனைவியாக வரும் லட்சுமி பிரியாவும் வழக்கம்போல் யதார்த்த நடிப்பில் பின்னியெடுக்கிறார். எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக சமுக வலைதளங்களில் மூழ்கியிருக்கும் துபாய் ரீட்டர்ன் இளைஞனாக கருணாகரனின் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய குணச்சித்திர நடிப்பு, கதையுடன் நம்மை ஒன்ற வைக்கிறது.

சமுக ஊடகங்களில் முற்றிலும் தவறான தகவல்களைப் பகிருதல், பதிவிடுதல், பரப்புதல், உண்மை அறியாமல் விமர்சனம் செய்தல், மீம்ஸ் போடுதல் போன்ற நடவடிக்கைகள் ஒரு தனி மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் அவர்களைச் சுற்றியுள்ள சமுகத்தையும் எப்படி மாற்றுகிறது என்பதை எடுத்துக் காட்டுவதில் மெல்லிய இசை போன்று நம்மை வசீகரிக்கிறது இந்தத் திரைப்படம்.

அப்பா என்பவர் எப்படி இருக்கவேண்டும், தனிமனிதச் சுதந்திரம் எவ்வளவு முக்கியம், மாற்றுத் திறனாளிகளை சுய லாபத்துக்கு பயன்படுத்துபவர்களின் முகம் என படம் முழுவதும் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி கதையின் மையக் கருத்துக்கு அவசியமானவற்றை அழுத்தமான காட்சிகள் வழியாக நிறுவியிருக்கிறார்.

இன்றைய நவீன தகவல் யுகத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று ஸ்மார்ட் போன். அதைத் தகவல் தொடர்புக்கும் அறிவுத் தேடலுக்கும் அர்த்தபூர்வமான பொழுதுபோக்கிற்கும் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், அதை எப்படியெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதை ஒரு மெல்லிய இசைபோல், அளவான நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறது படம்.

- ஹரிராம்பிரசாத் - ஊடக மாணவர்


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x