Published : 03 May 2022 04:22 PM
Last Updated : 03 May 2022 04:22 PM

பார்த்திபனின் 'இரவின் நிழல்' இப்படித்தான் சாத்தியமானது!

மற்றவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னால்கூட அதைப் புதுமையாகவும் வித்தியாசமாகவும் சொல்லவேண்டும் என்று நினைப்பவர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன். அப்படிப்பட்டவர் தன்னுடைய பல படங்களில் புதுமையான பல அம்சங்களைப் புகுத்திப் பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கவேண்டும் என்பதில் ஆர்வம் குன்றாதவர்.

அவருடைய 'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை', 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' போன்ற சோதனை முயற்சித் திரைப்படங்களின் வரிசையில் கடந்த 2019-ம் ஆண்டு 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தைக் கொடுத்தார். ஒரேயொரு கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றித் தன் கதையைக் கூறும் உத்தியை, தரமான ஒளிப்பதிவு, ஒலியாக்கம், குரல் நடிப்பு, இசை ஆகியவற்றின் துணையுடன் சிறந்த முறையில் உருவாக்கம் செய்து, பார்வையாளர்களின் உள்ளத்தைத் தொட்ட 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரையரங்கு, படவிழாக்கள் என இரு தளங்களிலும் பாராட்டுகளைக் குவித்தது.

தற்போது மீண்டும் 'இரவின் நிழல்' என்கிற சாதனையைச் செய்திருக்கிறார், மூன்று முறை தேசிய விருது பெற்றவரான பார்த்திபன். 'நான் - லீனியர்' கதை சொல்லும் உத்தியில், ஆனால், ஒரே ஷாட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருக்கிறார்.

எப்படிச் சாத்தியமானது 'இரவின் நிழல்'?

59 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான செட்டில், 300 நடிகர்கள், 150 தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏராளமான ஆடை, ஒப்பனை மாற்றங்களுடன் 50 வருடம் பயணிக்கும் கதைக்களம் கொண்ட உலகின் முதல் 'நான்-லீனியர் சிங்கிள் ஷாட்' படமாக 'இரவின் நிழல்' படத்தை உருவாக்கியிருக்கிறார்.

சென்னையில் நடக்கும் கதை. முறையற்ற உறவில் பிறக்கும் ஒரு குழந்தையுடைய வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு கால கட்டங்கள், முன்னும் பின்னுமாக 'நான் - லீனியர்' திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளன.

'இரவின் நிழல்' படத்தின் திரைக்கதையை கடந்த 10 வருடங்களாக எழுதி வந்திருக்கிறார் பார்த்திபன்.

முதலில் 59 அரங்கங்கள் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அவை இறுதி செய்யப்பட்டதும் அதில் தொடர்ந்து 90 நாட்கள் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. ஒத்திகையில் நடிகர்கள் அத்தனைபேரும் அவரவர் இடத்தில் கேமராவின் வருகைக்காகக் காத்திருந்து நடித்திருக்கிறார்கள்.இந்தப் படத்தில் பெரியவர்களுடன் குழந்தைகள், விலங்குகளும் நடித்துள்ளனர்.

கதையோட்டத்துக்கு ஏற்ப 64 ஏக்கரில் 50 அரங்குகளில் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. முதன்மைக் கதாபாத்திரத்தின் 60 ஆண்டுக் கால வாழ்க்கையைப் பிரதிபலிப்பதற்கு செட் அமைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது. கதாபாத்திரத்தின் ஒவ்வொரு காலகட்டத்தையும் கச்சிதமாகக் காட்டும் வகையில் இந்த செட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட 350 பேர் கொண்ட படக் குழுவினருடன் 90 நாட்கள் ஒத்திகையின்போது ஒருவர்கூட 'ஆப்செண்ட்' ஆகவில்லை.

காட்சிக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு அரங்கிலும் வெயில், மழை என வானிலையும் மாற்றி அமைத்துள்ளனர்.

ஒரு முழு நீளத் திரைப்படம் ஒரே ஷாட்டில் எனும்போது, அதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய கேமராவையும் அதைத் தூக்கிச் செல்வதற்கான கருவியையும் தேர்வு செய்வதில் நடைமுறைச் சாத்தியங்களை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளனர். சிங்கிள் ஷாட் முழுவதும் ஜிம்பல் கருவியின் துணைகொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது.

ஒருசில நிமிடக் காட்சியை ஒரே ஷாட்டில் எடுப்பது என்றாலே கேமராவில் 'ஃபோகஸ் ஷிப்ட்' செய்வது மிகவும் கடினமான சவால்! ஆனால் 'இரவின் நிழல்' படத்தில், 59 செட்களின் குறுகிய சந்துகள், மூலை, முடுக்குகளைக் கடக்கும் கேமரா, 100 நிமிடங்கள், 19 வினாடிகள் கொண்ட ஒரே காட்சியைப் படம்பிடித்த நிலையில் , தேவைப்படும் அனைத்து இடங்களுக்கும் 'ஃபோகஸ் ஷிப்ட்' செய்து அசத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர்.

படத்துக்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களை ஒரே கோர்வையில் இசையமைத்துள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற கலைஞரான கிரேக் மான், ஒலியமைப்பு மேற்பார்வை பணிகளையும் மற்றொரு ஆஸ்கர் விருதுபெற்ற கலைஞரான கோட்டலாங்கோ லியோன் வி.எஃப்.எக்ஸ் பணிகளையும் செய்துள்ளனர்.

தற்போது 'இரவின் நிழல்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி, வரவேற்பைப் பெற்று வருகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x