Published : 03 May 2022 03:02 PM
Last Updated : 03 May 2022 03:02 PM

துடிக்கும் தோழன் 2 | எல்லா வலியும் மாரடைப்பு அல்ல

ரக்கமற்ற செயலைச் செய்தவரைப் பார்த்து சிலர், ‘உனக்கு இதயமே இல்லையா?’ என்று கேட்பார்கள். இதயத்துக்கும் உணர்வுக்கும் தொடர்பு இல்லை என்பதை முதல் அத்தியாயத்தில் பார்த்தோமல்லவா? அதனால், இந்தக் கேள்வியே தவறானது. அதேபோல் இதயத்தைப் பற்றி இன்னொரு தகவலும் இருக்கிறது. இதயத்துக்கும் மூளைக்கும் வலி நரம்புகளே கிடையாது. அதாவது இதயத்திலோ மூளையினுள்ளோ ஒரு ஊசியைச் செருகினாலும் வலிக்கவே வலிக்காது. ஆனால், இதயத்தை மூடியிருக்கும் இரட்டை மடிப்பு கொண்ட பையில் (பெரிகார்டியம்) வலி நரம்புகள் பல உள்ளன. அதேபோல் முளையை மூடியிருக்கும் திசுக்களில் நரம்புகள் நிறைய உள்ளன.

எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை அனுப்புகிற இதயத்துக்கும் அது செயல்பட ரத்தம் வேண்டுமல்லவா? அதற்குத்தான் கொரோனரி ரத்த நாளங்கள் உள்ளன (கொரொனாவுக்கும் இந்தப் பெயருக்கும் சம்பந்தமே இல்லை). இரண்டு முக்கிய நாளங்கள் இடதும் வலதும் உள்ளன. வலப்புறம் உள்ளது பக்கவாட்டில் போய் கீழே திரும்பி இதயத்தின் அடிப்புறம் வரை செல்லும். இடது நாளம் தொடங்கி ஒரு சென்டிமீட்டருக்குள் இரண்டாகப் பிரிந்து இதயத்தின் நடுச்சுவர் பகுதியிலும் மற்ற பக்கவாட்டிலும் சென்று இதயத்தின் அடிபாகத்தில் மற்ற நாளத்தோடு இணைகிறது. ஒரு விவரம். இதயத்திலும் மூளையின் அடிபாகத்திலும் தவிர, உடலில் நல்ல ரத்தம் செல்லும் தமனியுடன் வேறொரு தமனி இணைவதில்லை. விதிவிலக்கு இந்த இரண்டே இரண்டு இடங்களில்தான்.. முக்கியமான இடங்களில் இயற்கை எவ்வளவு முன்ஜாக்கிரதையாக வடிவமைத்திருக்கிறது!

ஏன் மார்வலி ஏற்படுகிறது?

இதயம் சுருங்கி விரிகிறதல்லவா? அது அப்படி விரியும்போதுதான் இந்த கொரோனரி நாளங்களில் ரத்தம் பாயும். இதயத் துடிப்பு அதிகமாக ஆக இந்த விரியும் தருணம் குறைகிறது. அதனால்தான் மிகக் கடினமான வேலை செய்தாலோ மற்ற எந்தக் காரணத்தினாலோ இதயத் துடிப்பு அதிகமாகும்போது ‘மார்வலி’ ஏற்படலாம். ரத்தக் குழாய்கள் குறுகியோ அல்லது அவற்றில் சின்ன அடைப்புகள் ஏற்பட்டாலோ ரத்த ஓட்டம் குறைந்து ஸ்ட்ரோக் எனப்படும் மின் தூண்டல் தடை ஏற்பட்டு மார்வலி என்னும் அஞ்ஜைனா ஏற்படுகிறது. அஞ்ஜைனாவுக்குக் காரணம் இதயத்தில் தேவைக்கு ஏற்ப தகுந்த ரத்த ஓட்டம் இல்லாததுதான். இந்தத் தேவை அதிகரிப்பு இதயத் தசை தடித்துப் போவதாலும் இருக்கலாம். இந்த மாதிரி தசைத் தடிப்பு ஏற்படக் காரணம் நீண்ட நாட்களாக அதிக ரத்த அழுத்தம் இருப்பதுதான்.

மாதிரிப் படம்

ஒரு சுவாரசியமான தகவல். 18-ம் நூற்றாண்டில் ஆஸ்லர் என்கிற மருத்துவர் உடலில் உள்ள ரத்த நாளங்களையும் இதயத்தையும் பற்றி ஆச்சரியமான விஷயங்களைக் கண்டுபிடித்து விவரித்திருக்கிறார். அவர்தான் முதன் முறையாக மார்வலி என்கிற அஞ்ஜைனா எப்படிப்பட்டது என்பதையும் அதற்கும் அதிக உடற்பயிற்சிக்கும் உள்ள தொடர்பையும் அழகாக விவரித்திருக்கிறார். பனிபொழியும் தருணத்தில் ஒருவர் மரத்தை வெட்டுகிறபோது ஏற்பட்ட மார்வலியை அவருடைய சொற்களாலேயே கூறியிருக்கிறார். “உள்ளிருந்து பிசைவதுபோல பாரமாகவும், மரணம் நெருங்குவதுபோலவும் கொஞ்சம் அசைந்தாலும் மரணம் சம்பவிக்கும்போலவும் இருந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வர்ணிப்பை இன்றுவரை யாரும் மிஞ்சவில்லை.

மார்வலியின் அறிகுறிகள்

எல்லா மார்வலிகளும் அஞ்ஜைனா அல்ல. மார்புக்கூட்டில் தசைகள் உள்ளன. எலும்புகளும் மூட்டுகளும் உள்ளன. இதயத்தின் பின்னால்தான் உணவுக்குழாய் உள்ளது. மார் வலித்தால் சில நேரம் இவற்றில் ஏற்படும் வலியாகவும் இருக்கலாம். சந்தேகமாக இருந்தால் கீழ்க்கண்ட அறிகுறிகள் உள்ளனவா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
1. இந்த வலி உடலின் நிலைமாற்றத்தினால் அதாவது திரும்புவது, படுப்பது, குனிவது போன்றவற்றால் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா?
2. இந்த வலியை ஓரிடத்தில் விரல்களால் அழுத்திக் காண்பிக்க முடியுமா?
3. இந்த வலி ஈனோ குளிர் நீர், பால் எடுத்துக்கொள்வதால் மாறுபடுகிறதா? குறைகிறதா?
4. கடந்த ஓரிரு நாட்களில் நீங்கள் எங்காவது இடித்துக்கொண்டீர்களா அல்லது விழுந்தீர்களா?
மேற்கண்டவற்றில் ஏதேனும் உண்டானால் இந்த வலி நிச்சயமாக 99.9 சதவீதம் அஞ்ஜைனா அல்ல.

முன்பு விவரித்த மாதிரியான உள்ளிருந்துவரும் வலியாக அஞ்ஜைனா இருக்கும். இந்த வலி கழுத்துக்கோ கைகளின் உட்பகுதிக்கோ மணிக்கட்டுவரையோ பரவலாம். வியர்வையோ வாந்தி வரும் உணர்வோ ஏற்படலாம். ஐஸார்டில் 5மி.கி. (Isordil – 5 mg) என்கிற மாத்திரையை நாவிற்கடியில் வைத்தால் அது கரைந்து இரண்டு நிமிடங்களில் வலி கணிசமாகக் குறையும் அல்லது மறையும்.
ஏதாவது உடலை வருத்தி வேலை செய்யும்போது வலி வரலாம். மாடிப்படி ஏறுவது, ஓடுவது, கனமான பொருட்களைத் தூக்கிக்கொண்டு நடப்பது போன்றவையும் காரணமாகலாம். திடீர் அதிர்ச்சியும் ஒரு காரணம். தூங்கும்போது வலி உங்களை எழுப்பினால் உடனே மருத்துவ உதவியை நாடவேண்டும்.

டாக்டர். கல்யாணி நித்யானந்தன்

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு) தொடர்புக்கு:joenitya@yahoo.com
(தற்போது 87 வயதாகும் டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.)

முந்தைய அத்தியாயம் > துடிக்கும் தோழன் 1 | இதயத்துக்கும் உணர்வுக்கும் தொடர்பில்லை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x