

உலக அளவில் ட்ரெண்டிங்கான ஒரு ஃபேஷன்தான் இ-பாய், இ-கேர்ள். இது பொதுக்கலாச்சாரத்தில் இருந்து விலகிய ஒரு தனிக் கலாச்சாரம். அதாவது, நேர்த்தியான சட்டையை அணிந்துகொண்டு போகாமல் பொருந்தாத சட்டையை அணிந்துகொண்டு, ஆடி அசைந்து செல்வதுதான் இந்தத் தனிக் கலாச்சாரம் என எளிதாகச் சொல்லலாம்.
இ-பாய், இ-கேர்ள் என்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை அதிகமாக உபயோகிப்பவர்கள். ஆன்லைனில் கேம் விளையாடுபவர்கள். இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் புது ஃபேஷனுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்பவர்கள். ஆடைகளை மிகவும் தொளதொளவென உடுத்துபவர்கள். பெரிய கை வைத்த டி ஷர்ட்டை அணிபவர்கள். காலில் சாக்ஸ் தெரிய மாட்டிக்கொள்பவர்கள். ஷூவுக்குப் பதிலாக வேண்ஸ் (Vans) அணிபவர்கள். உடலில் பல இடங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பச்சை குத்தியிருப்பார்கள். பெரிய உலோக மாலையைச் சூடியிருப்பார்கள். கறுப்பாக நெயில் பாலிஷ் பூசியிருப்பார்கள். கிட்டதட்ட ‘புள்ளிங்கோ’ மாதிரி எனச் சொல்லலாம்.
இந்தக் கலாச்சாரம் எப்படி உருவானது? இது டிக்டாக் மூலமே பிரபலமானது. இன்ஸ்டாகிராம் போன்ற மற்ற சமூக ஊடகங்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இந்த மேற்கத்தியக் கலாச்சாரத்துக்கு எதிராக சீனாவில் புதிய இ-பாய் கலாச்சாரம் அண்மையில் ட்ரெண்ட் ஆனது. கார்மினல் சென் என்கிற 20 வயது இளைஞர் பெண்களின் உடைகளை அணிந்து, பெண்களின் கைப்பையுடன் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வைரல் ஆகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து வெவ்வேறு ஃபேஷனை ட்ரெண்ட் ஆக்கிவருகிறார்கள். ஆனால், இது சரியா, தவறா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால், இதனால் பெரிய சந்தை உருவாகிவருகிறது என்பதே மட்டுமே நிஜம்.