Published : 01 May 2022 11:26 AM
Last Updated : 01 May 2022 11:26 AM

உழைப்பைப் போற்றும் நாள் - மே தினம் சிறப்பு வினாடி வினா

1. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1886-ல் மே 3-ம் தேதி எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியப் போராடிய தொழிலாளர்களில் பலர் காவல்துறை அடக்குமுறையால் பலர் கொல்லப்பட்டனர். அதை கண்டிக்கும் வகையில் தொழிலாளர்கள் அமைதியாகப் பேரணி நடத்தியபோது குண்டு வீசப்பட்டது. தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையிலேயே 'உழைப்பாளர் நாள்' மே 1-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. குண்டுவீசப்பட்ட பகுதியின் பெயர் என்ன?

2. 1880-களில் அமெரிக்காவில் தொழிலாளர் போராட்டங்கள் தீவிரமடைவதற்கு முன்பே, 1862-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவின் முதல் தொழிற்சாலை வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1,200 ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த வேலை நிறுத்தம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்தது. இந்தப் போராட்டம் எந்த ஊரில் நடைபெற்றது?

3 தமிழகத்தின் முதல் தொழிற்சாலை வேலைநிறுத்தம் அன்றைய 'மெட்ராஸ் ரயில் நிறுவன'த்தின் ஒரு பகுதியாக இருந்த பெரம்பூர் ரயில்வே பணிமனையின் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கோரி நடத்திய போராட்டம்தான். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த வேலைநிறுத்தம் எந்த ஆண்டு நடைபெற்றது?

4. தூத்துக்குடியில் 'கோரல் மில்' என்ற நூற்பாலையை ஆங்கிலேயர்கள் நடத்திவந்தனர். அங்கு வேலைபார்த்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் பெரும்பாலோர் 16 வயதுக்குக் கீழே இருந்த சிறுவர்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இந்த ஆலையில் 1908 பிப்ரவரி 27-ம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கியதைடுத்து சம்பள உயர்வு, வேலை நேரம் குறைப்பு, வாரம் ஒரு நாள் விடுமுறை போன்ற உரிமைகள் வழங்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற முதன்மையான விடுதலைப் போராட்ட வீரர் யார்?

5. 'மெட்ராஸ் லேபர் யூனியன்' என்ற தொழிற்சங்கத்தை திரு.வி.க., வாடியா ஆகியோருடன் இணைந்து ராமாஞ்சலு, செல்வபதி ஆகியோர் உருவாக்கினர். தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உரிய விதிமுறைகளுடன் நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் இதுதான். இந்தத் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?

6. தென்னிந்தியாவின் 'முதல் பொதுவுடைமைத் தலைவர்' என்றழைக்கப்படும் ம. சிங்காரவேலர், 1923-ம் ஆண்டில் மே நாளைக் கொண்டாடத் திட்டமிட்டார். அந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் எதிரேயிருந்த கடற்கரையில் அவர் தலைமையிலும் திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி என்பவர் தலைமையில் மே நாள் கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இந்த மே நாள் கொண்டாட்டங்களின் தனிச்சிறப்பு என்ன?

7. மேற்கண்ட கொண்டாட்டத்தின்போது நாட்டிலேயே முதன்முறையாக செங்கொடி பயன்படுத்தப்பட்டது. மே நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் மே நாள் முதன்முதலாக விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது?

8. சென்னை மெரினாவின் அடையாளமாக இருக்கும் 'உழைப்பாளர் சிலை', சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த தேவிபிரசாத் ராய் சௌத்ரியால் வடிக்கப்பட்டது. நாட்டின் முதல் மே நாள் கொண்டாட்டங்கள் மெரினா கடற்கரையில் நடைபெற்றதை நினைவுகூரும் வகையிலும் உழைப்பைப் போற்றும் விதமாகவும் இந்தச் சிலையை ராய் சௌத்ரி வடித்தார். இந்தச் சிலை திறக்கப்பட்ட நாள் எது?

9. 'உழைப்பாளர் நாள்' கொண்டாட வேண்டும் என்கிற கருத்தை முதன்முதலில் முன்மொழிந்தவர் மேத்யு மகுய்ர். 1882-ல் நியூயார்க் மத்திய தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக இருந்தபோது அவர் இதை வலியுறுத்தினார். அமெரிக்காவில் உழைப்பாளர் நாளை முதன் முதலில் விடுமுறை நாளாக ஆரிகான் மாகாணம் 1887-ல் அறிவித்தது. எந்த நாளில் அது கொண்டாடப்பட்டது?

10. 'இரண்டாம் அகிலம்' எனப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாடு 1889-ல் பாரிஸில் நடைபெற்றது. அதில் சிகாகோ போராட்டங்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் உழைப்பாளர் நாளைக் கொண்டாட வேண்டுமென ரேமண்ட் லவிக்னே தீர்மானத்தை முன்மொழிந்தார். அதையடுத்து 1890-ல் உலகின் பல நாடுகளில் உழைப்பாளர் நாள் கொண்டாடப்பட்டாலும், தொழிலாளர் இயக்கங்கள் எந்த ஆண்டிலிருந்து உழைப்பாளர் நாளை முறைப்படி கொண்டாட ஆரம்பித்தன?

விடைகள்: (தலைகீழே)
1. ஹேமார்கெட்
2. ஹௌரா, கொல்கத்தா
3. 1898
4. வ.உ.சிதம்பரனார்
5. 1918 ஏப்ரல் 27-ம் தேதி
6. நாட்டின் முதல் மே நாள் கொண்டாட்டம்
7. 1957-ல் கேரளத்தில்
8. 1959, குடியரசு நாள் (ஜன. 26)
9. செப்டம்பர் மாத முதல் திங்கள்கிழமை
10. 1891

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x