Published : 30 Apr 2022 01:37 PM
Last Updated : 30 Apr 2022 01:37 PM

இதழனின் மாமரம்! - கதை

சாமியப்பன்

இதழன் தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள மாமரத்து நிழலில் அமர்ந்து நண்பர்களுடன் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது மாம்பழம் ஒன்று பொத்தென்று சரியாகக் குழிக்குள்ளேயே விழுந்தது. இதழன் அந்தப் பழத்தைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்து ருசித்தான். நண்பர்களும் சுவை நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.

இதழனுக்கு அந்த மரத்தடியில் விளையாடுவது என்றால் கொள்ளைப் பிரியம். பத்து வயதாகும் அவனுக்கு நினைவுதெரிந்த நாள் முதல் அந்த மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றோ அமர்ந்தோ விளையாடியோ முடித்தால்தான் அன்றைய பொழுது நிறைவுபெறும். இதழனுடைய குழந்தைப் பருவத்தில் இதே மாமரத்தின் கிளையில்தான் தொட்டில் கட்டித் தாலாட்டியதாக அவன் அம்மா அடிக்கடி கூறுவார். அதை உறுதிப்படுத்தும் விதமாக நல்ல கனமான கயிற்று ஊஞ்சல் ஒன்று இப்போதும் மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதில் அவ்வப்போது நண்பர்களுடன் ஊஞ்சலாடி மகிழ்வான் இதழன்.

காய்ப்புக் காலத்தில் அதிகாலையிலேயே தொப்பென்று விழும் மாம்பழச் சத்தம்தான் இதழனுக்கான அலாரம். இரவு தூங்கும்போதுகூட மாமரத்தின் காற்று ஜன்னல் வழியாக அவனைத் தாலாட்டும். இதழன் பள்ளி செல்லும் நாட்களில் இந்த மாமரமும் கூடவந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக்கொள்வான். பள்ளி அருகில்தான் என்பதால் இடைவேளையில் ஒரே ஓட்டமாக ஓடிவந்து மரத்தைப் பார்த்துவிட்டுச் செல்வான். மாமரமும் ஓடிவந்த களைப்பு தீர, கனிந்த மாம்பழம் ஒன்றைப் பரிசளித்து அனுப்பும்.

இதழன் தான் வளர்ந்துவருவதை மாமரத்தின் வளர்ச்சியை ஒப்பிட்டுத்தான் உணர்ந்து வந்தான். அதன் நிழலையே ரசித்தும் அந்த நிழலில் விழும் பழங்களைப் புசித்தும் வந்தவன், தற்போது மாமரத்தின் கிளைகளில் ஏறி பழங்களைப் பறித்துச் சாப்பிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டான். ஆனால், இத்தனை வருட நட்பில் இதழன் ஒருமுறைகூடக் கற்களை எறிந்து பழம் பறித்ததே இல்லை. கல் எறிவது என்பது மரத்தின் மீது காட்டப்படும் வன்முறை என்று அவன் உணர்ந்திருந்தான்.

வகுப்புகள் கடந்து வந்ததே தெரியவில்லை. இப்போதுதான் முதல் வகுப்பு சேர்ந்ததுபோல இருந்தது, அதற்குள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விடுமுறையும் வந்துவிட்டது. மேற்படிப்புக்குத் தொலைவில் உள்ள நகருக்குத்தான் சென்றாக வேண்டும். எப்போதும் மரம், வீடு, பள்ளி என்று இருந்தவனுக்குத் திடீரென்று மாமரத்தைப் பிரிந்து செல்வது வருத்தமாக இருந்தது. தினமும் பேருந்தில் சென்றுவரக்கூடிய தொலைவில் கல்லூரி இருந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், அதற்கு வழியில்லை. கண்டிப்பாக விடுதியில் தங்கித்தான் படித்தாக வேண்டும். மாதம் ஒருமுறைதான் மாமரத்தைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என்று நினைத்தபோதே இதழுனுக்கு அழுகை வந்துவிட்டது.

அம்மாவும் அப்பாவும் சமாதானம் சொன்னாலும் இதழனின் மனம் அதை ஏற்கவில்லை. இதை நினைத்துக்கொண்டே தூங்கினான். மாமரம் அவன் கையைப் பிடித்துக் கல்லூரிக்குள் அழைத்துச் சென்றது. “எனக்காக இவ்வளவு வருத்தப்படுவீயா? இங்கே நீ நினைத்தால் என்னை உருவாக்கிவிடலாம். வீட்டிலிருக்கும் மாங்கொட்டைகளை எடுத்துட்டு வந்து, கல்லூரியிலும் விடுதியிலும் நட்டு வை. நீ படித்து முடிக்கும் வரை அவை உனக்கு ஆறுதலாக இருக்கும்” என்று மாமரம் சொன்னவுடன் சட்டென்று விழித்தான் இதழன்.

‘ஓ… கனவா! ஆனாலும் மாமரம் சொன்ன யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. புதிய மரங்களை உருவாக்கி, என் படிப்பு முடியும் வரை வளர்ப்பேன்’ என்று சொல்லிக்கொண்டான் இதழன்.

மறுவாரம் கல்லூரி விடுதிக்குக் கிளம்பும்போது, மறக்காமல் மாங்கொட்டைகளை எடுத்துக்கொண்டான். அதைப் பார்த்த மாமரம், வேகமாகக் காற்றைவீசி, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க':

https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x