Published : 02 May 2016 11:59 AM
Last Updated : 02 May 2016 11:59 AM

டீசல் கார்களுக்குத் தொடரும் தடை: துணிந்து களமிறங்கும் ஜப்பானிய நிறுவனங்கள்!

சுற்றுச் சூழலைக் காக்கும் நோக்கில் டெல்லி பகுதியில் புதிய டீசல் கார்கள் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2000 சிசி திறனுக்கு மேலான வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தடை காரணமாக பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களது எஸ்யுவி ரகக் கார்களை டெல்லி பிராந்தியத்தில் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றன.

பெட்ரோலைக் காட்டிலும் டீசல் என்ஜின் விடும் புகை மாசு அளவு குறைவு என்ற ஆட்டோமொபைல் நிறுவனங் களின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனால் டெல்லி பிராந்தியத்தில் புதிய வாகன விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

டெல்லியைத் தொடர்ந்து தங்கள் மாநிலங்களிலும் இதுபோன்ற தடையை நீடிக்கலாமா என வாகனப் புகையில் தவிக்கும் பிற மாநில அரசுகளும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

தடை நீடிக்கும் பட்சத்தில் டீசல் இன்ஜின் கார்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இருந்தாலும் ஜப்பானிய நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஜப்பானின் டொயோடா மற்றும் இசுஸு ஆகிய நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

டொயோடா ரூ. 1,100 கோடி முதலீடு

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டொயோடா நிறுவனம் பெங்க ளூருவில் டீசல் இன்ஜின் தயாரிப்புக்கு ரூ. 1,100 கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு ஒரு லட்சம் இன்ஜின் களைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இந்த ஆலை ஜூன் முதல் வாரத்தில் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

டீசல் இன்ஜின் மீதான தடையை நீண்ட காலம் தொடர முடியாது. பெட்ரோல் வாகனங்கள் வெளியிடும் புகை அளவை விடக் குறைவாக டீசல் இன்ஜின்கள் வெளியிட்டால் அதைத் தடுக்க முடியாது. அந்த அளவுக்கு மேம்பட்ட இன்ஜின்களைத் தான் தயாரிக்கிறோம் என்று டொயோடா நிறுவன உயர் அதிகாரிகள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.

டொயோடா நிறுவனம் ஏற்கெனவே தங்கள் கார்களில் பயன்படுத்தி வந்த கேடி பிரிவு இன்ஜினுக்கு மாற்றாக ஜிடி பிரிவு இன்ஜின்களை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த இன் ஜின்கள் ஜப்பான், தாய்லாந்து ஆலை களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. தற்போது பெங்களூரு ஆலையிலும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இந்நிறுவனம் தொடங்கும் முதலாவது டீசல் இன்ஜின் ஆலை இதுவாகும்.

2017-ம் ஆண்டு அமலுக்கு வர உள்ள புகை மாசு அளவை ஈடு செய்யும் வகையில் மேம்பட்ட இன்ஜின்கள் இங்கு தயாரிக்கப்படுவதாக டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் தெரிவித்துள்ளார்.

இசுஸு மோட்டார்ஸ்

ஜப்பானைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான இசுஸு மோட்டார்ஸ் ஆந்திர மாநிலம்  சிட்டி வளாகத்தில் புதிய ஆலையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலைக்கென ரூ. 3 ஆயிரம் கோடியை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. 107 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் டீசல் வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 1.20 லட்சம் அளவுக்கு உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் முடியும்.

எஸ்யுவி மாடல் பிக் அப் டிரக்கான இசுஸு டி-மேக்ஸ் வாகனங்கள் இங்கு தயாராகின்றன.

ஒருவேளை தடை தொடர்ந்தால் மாற்று திட்டம் உள்ளதா என்று நிறுவன உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இசுஸு நிறுவனம் டீசல் இன்ஜின்களை மட்டுமே தயாரிக்கும் என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

டீசல் கார்கள் தவிர்க்க முடியாதவை என்பதை நிரூபிக்கும் வகையில் ஜப்பானிய முதலீடுகள் அமைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x