பிளாஸ்டிக் சர்ஜரியின் வரலாறு

பிளாஸ்டிக் சர்ஜரியின் வரலாறு
Updated on
2 min read

மனிதன் அல்லது மனுஷி எப்போது கண்ணாடியைப் பார்க்கத் தொடங்கினரோ அப்போதே அவர்களது தோற்றம் குறித்த கவலைகளும் தொடங்கியிருக்க வேண்டும். உடலின் நிறம், தோற்றம், உறுப்புகளின் வடிவம், அளவு என ‘அழகு’ குறித்து எத்தனையோ நம்பிக்கைகளும் கருத்துகளும் நம்மிடையே காலகாலமாகப் புழங்கிவருகின்றன. மனிதர்கள் தங்கள் உடல் தோற்றத்தில் உணரும் ‘அழகின்மை’ மற்றும் ‘குறைபாட்டை’ சரிசெய்வதற்கான முயற்சிதான் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் காஸ்மெட்டிக் சர்ஜரி என்று சொல்லப்படும் அறுவை சிகிச்சை.

உலகம் அங்கீகரித்த முதல் பிளாஸ்டிக் சர்ஜரி

பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்குப் போரில் தாடையிலும் முகத்திலும் ஏற்பட்ட ரணங்களை சீர் செய்ய பெல்ஜியன் ஃபீல்ட் மருத்துவமனையில் மருத்துவர் ஹரால்ட் கில்லீஸ் 1915-ல் அறுவை சிகிச்சைகள் செய்தார். இதுதான் உலக வரலாற்றில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பிளாஸ்டிக் சர்ஜரி. ஆகையால் இப்போது பிளாஸ்டிக் சர்ஜரியின் 101-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.

மேற்குலகில் பிரபலமானது எப்போது?

பிளாஸ்டிக் சர்ஜரி தொடர்பான குறிப்புகள் 16-ம் நூற்றாண்டிலிருந்து காணக் கிடைக்கின்றன. போரில் குறைபட்ட உறுப்புகளைச் சரிசெய்வதற்கும், தனிநபர் சண்டைகளில் குறைபட்ட மூக்குகளை சரிசெய்வதற்கும், பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட முகத்தைச் சரிசெய்வதற்கும் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைகள் செய்யப்பட்டன. இனம், நிறம் சார்ந்து அழகு, ஆரோக்கியம் என்று கருதப்படும் தோற்றத்திற்காகவும் இந்த சிகிச்சைகள் வழக்கத்தில் இருந்தன. மூக்கின் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு, மேல் புஜத்திலிருந்து தோல் வெட்டியெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சைகள் வலியில்லாமல் செய்யப்படுவது வரை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைகள் அத்தனை பிரபலமாகவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் தொற்றால் சீழ் பிடிக்கும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் அறுவை சிகிச்சைகள் உயிராபத்தைக்கூட விளைவிக்ககூடியவையாக இருந்தன.

2015-ல் 6 லட்சத்து 27 ஆயிரத்து 165 அமெரிக்கப் பெண்கள் செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பிளாஸ்டிக் சர்ஜரியைப் பொருத்தவரை 1921 முக்கியமான ஆண்டு.

பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் முதல் கூட்டம் நடந்த ஆண்டு. முதல் ‘மிஸ் அமெரிக்கா’ போட்டி நடந்த ஆண்டும் இதுதான். இதில் அழகியாகத் தேர்வு பெற்றவர்கள் அனைவரும் வெள்ளையினப் பெண்கள்.

நான்காவது நூற்றாண்டில் வாழ்ந்த ரிஷி வாக்பாதர், ‘அஷ்டாங்க ஹ்ரிதயான்ஸ் சம்ஹிதா’ நூலில் பிளாஸ்டிக் சர்ஜரி முறைகள் பற்றி எழுதியுள்ளார். மகரிஷி ஆத்ரேயாவின் செயல்முறைகள் என்றும் அதைப் பதிந்துள்ளார். மூக்கில் செய்யும் அறுவை சிகிச்சை, காதுகளில் செய்யும் அறுவை சிகிச்சை, உறுப்புகள் பொருத்துதல் குறித்து இந்நூலில் குறிப்புகள் உள்ளன. அறுவை சிகிச்சை தொடர்பான அறிவும் தொழில்நுட்பங்களும் தோன்றிய நாடுகளென்று இந்தியாவும் எகிப்தும் கருதப்படுகிறது. பவுத்த துறவிகள் வழியாக கிரேக்கத்துக்கும் அரேபியாவுக்கும் சென்று பின்னர் ஜெர்மானிய, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மருத்துவ உலகத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது.

நவீன இந்தியாவில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சைப் பிரிவுகள் பெங்களூருவில் திறக்கப்பட்டன. இதற்குக் காரணம் மருத்துவர்கள் டாம் கிப்சன் மற்றும் ஈ.டபிள்யு. பீட். இதுதான் இந்தியாவில் நவீன மருத்துவர்களிடையே பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த ஆர்வத்தை எழுப்பியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தற்காலிக நியமன அதிகாரிகளாகப் பணிபுரிந்த இந்திய மருத்துவர்களான சி.பாலகிருஷ்ணனும் ஆர்.என்.சின்ஹாவும்தான் இந்தியாவின் அறியப்பட்ட முதல் பிளாஸ்டிக் சர்ஜன்கள்.

நாக்பூரில் 1958-ல் நாக்பூர் நகரத்தில் இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தோன்றியது

1846-ல் அமெரிக்கப் பல் மருத்துவர் வில்லியம் மோர்டனால் முதல் வலியற்ற அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. கைக்குட்டையில் ஈத்தர் அமிலத்தை நோயாளியின் மூக்கில் வைத்து மயக்கமடையச் செய்த பிறகு இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஆனால் தற்போதைய நடைமுறைகளின்படி ஈத்தரின் அளவு அதிகரித்துவிட்டால் ஆபத்தானது, மரணத்தை ஏற்படுத்தவும் கூடியது. 1880-களில் அனஸ்தீசியா என்னும் மயக்க மருந்து செலுத்தும் முறை நவீனமடைந்து பாதுகாப்பானதாகவும் வலியற்றதாகவும் மாறியது.

நோய்த்தொற்றுக்கு வாய்ப்பில்லாத நவீன அலங்கார அறுவை சிகிச்சை

1860களில் ஜோசப் லிஸ்டர்தான், நோய்த்தொற்றுக்கு வாய்ப்பில்லாத, கிருமியற்ற நவீன அறுவை சிகிச்சை மாதிரியை உருவாக்கினார். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர்களால் இந்த முறை பின்பற்றப்பட்டு உலகம் முழுவதும் பரவியது.

அலங்கார சிகிச்சைகள் சார்ந்த விளம்பரங்கள் மற்றும் போலி விளம்பரங்கள்

மூக்கு, மார்பகங்கள், வயிறு முதல் ரகசிய உறுப்புகள் வரை அலங்கார அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம் என்று கூறும் விளம்பரங்களை இன்றும் நாம் இணையதளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. இந்த விளம்பரங்கள் எல்லாம் மேற்குலகில் 20-ம் நூற்றாண்டில்தான் பத்திரிகைகள் வாயிலாக வரத் தொடங்கின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in