

எதற்கும் நேரமின்றி ஓடும் இன்றைய அன்றாடத் துரித வாழ்வு, பெருமளவு ஸ்மார்ட்போன்களைச் சார்ந்தே இருக்கிறது. ஸ்மார்ட்போனுக்கு என நித்தமும் அறிமுகமாகும் புதிய செயலிகள், பேசுவதற்கு மட்டுமே என்றிருந்த தொலைப்பேசிகளை இன்று நம் வாழ்வின் அனைத்துமாக மாற்றிவிட்டன. சமூகத் தொடர்பு, பயணம், உணவு, திட்டமிடல், உடல் நலம், கற்றல், கேளிக்கை, பொழுதுபோக்கு போன்ற அனைத்தும் இன்று இந்தச் செயலிகளை நம்பியே இருக்கின்றன. இன்றைய நவீன செயலிகள் ஸ்மார்ட்போன்களின் திறனை மட்டுமல்லாமல்; நம் வாழ்வின் தரத்தையும் சேர்த்தே மேம்படுத்துகின்றன; முக்கியமாக, கரோனா பெருந்தொற்று காலத்தில், மாணவர்களின் கற்றல் இடைவெளியை இத்தகைய செயலிகளே நிரப்பின. மாணவர்களின் கற்றலுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட செயலிகளில் முக்கியமானதும், பயனுள்ளதுமே 'போட்டோமேத்' எனும் இலவச செயலி. அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே அனைவரின் கவனத்தையும் அது ஈர்த்து வருகிறது.
சிறப்பு அம்சம்
பொதுவாக, மாணவர்களின் மூளையைக் கசக்கிப் பிழிந்து, பெரிதும் அயர்ச்சிக்கு உள்ளாக்குபவையாகக் கணித சமன்பாடுகள் உள்ளன. இந்தக் கணித சமன்பாடுகளை மாணவர்கள் எளிதில் தீர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் செயலியே 'போட்டோமேத்'. மாணவர்களால் எளிதில் தீர்க்க முடியாத கணித சமன்பாடுகளுக்குக் கூட இந்த செயலி சில வினாடிகளில் விடை அளித்துவிடும் என்பதால், இதை உலகின் மிகவும் சாதுரியமான கால்குலேட்டர் என்றும் சொல்லலாம். பலருக்கும் கடினமாகத் தோன்றும் கணக்கு பாடத்தை ஸ்மார்ட்போன் கேமரா மூலம் எளிமையாக்கியுள்ளது போட்டோமேத் (PhotoMath).
எப்படிச் செயல்படுகிறது?
போட்டோமேத் செயலியில் ஒரு கணக்குக்கான விடையைப் பெற, ஒவ்வொரு எண்ணையும் உள்ளீடு செய்ய வேண்டிய தேவையில்லை. புத்தகத்தில் அல்லது வினாத்தாள் போன்றவற்றில் அச்சிடப்பட்டுள்ள கணக்கை ஸ்மார்ட்போன் கேமரா மூலம், போட்டோ எடுத்தாலே போதும், விடை உடனடியாக தெளிவாகக் காட்டப்படும். அதுவும், போட்டோ எடுத்து முடித்த மறு நொடியே கணக்குக்கான விடை தெரிந்துவிடும்.
குறை
இந்த செயலியில் விடை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். கணக்கை படிப்படியாக (step by step) எப்படித் தீர்ப்பது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. எனவே இந்த செயலியைக் கொண்டு, மாணவர்கள் தாங்கள் கணக்கைத் தீர்வு செய்தது சரிதானா என்பதை மட்டுமே சோதித்துக் கொள்ள முடியும்.
எங்கே கிடைக்கும்?
பயனர்களை வியக்க வைக்கும் இந்த செயலியை ஆண்டிராய்ட், விண்டோஸ், ஐபோன் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியும். இதைப் பதிவிறக்கம் செய்ய உதவும் இணைப்பு: போட்டோமேத்
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription