Published : 21 Apr 2022 04:24 PM
Last Updated : 21 Apr 2022 04:24 PM

சங்கர்லால் படித்தேன்; துப்பறிவாளரானேன்! - உதயசங்கர்

1960இல் பிறந்த எனக்கு விவரம் தெரிவதற்கு முன்னால் நான் எப்படி இருந்தேன் என்று ஞாபகத்தில் இல்லை. ஆனால், அம்மா அடிக்கடி சொல்கிற ஒரு சம்பவம் மட்டும் பதிந்திருக்கிறது. அப்போது எனக்கு இரண்டு வயது இருக்கலாம். என் தாத்தா வெளியிலிருந்து வருகிறபோது குருவி பிஸ்கெட் வாங்கிக்கொண்டு வருவார். அப்போது குருவி, வண்ணத்துப்பூச்சி என்று விதவிதமான விலங்குகள், பறவைகள், பூச்சிகள் வடிவத்தில் சோளமாவில் செய்யப்பட்ட பிஸ்கெட்டுகள் மிகப்பிரபலம். காகிதத்தில் மடித்துக்கொண்டு வரும் பிஸ்கெட்டில் ஒன்றை மட்டும் என்னிடம் கொடுப்பார். நான் கோபித்துக்கொண்டு திரும்பி உட்கார்ந்துகொள்வேன். என் கோபத்தை ரசித்துத் தன் பொக்கைவாயைத் திறந்து ’கெக்கேக்கே’ என்று சிரித்துக்கொண்டு, என் கையில் இரண்டு பிஸ்கெட்டுகளைக் கொடுத்ததும் என் முகத்தில் சிரிப்பு அள்ளும். அப்படியே அவர் மீது பாய்ந்துவிடுவேன்.

என் வீடு அபூர்வமான ஓரிடத்தில் இருந்தது. இரண்டு தெருக்களின் நடுவில் நான்கு பக்கமும் குறுகலான சந்துகள் சூழ ஒரு தீவு மாதிரி இருந்தது. என்னை எப்போதும் தெரு அழைத்துக்கொண்டேயிருக்கும். அந்தக் காலத்தில் குழந்தைகள் எல்லோரும் தெருவில்தான் கிடப்போம். எப்போதும் விளையாட்டு... விளையாட்டு… விளையாட்டுதான்!

வீட்டிலிருந்து அம்மாவோ அப்பாவோ வந்து, “தின்னுட்டுப் போய் விளையாடேம்ல...” என்று கூப்பிடும்வரை விளையாடிக்கொண்டிருப்போம். ஓடிப்பிடித்தல், கண்ணாமூச்சி, கல்லா மரமா, கபடி, எறிபந்து, ஓடு அடுக்குதல், கோலிக்காய், குழி உருட்டுதல், பேந்தி, எறி கோலிக்காய், பம்பரக்குத்து, செதுக்கு முத்து, ஒத்தையா இரட்டையா, உப்புமூட்டை, பச்சைக்குதிரை தாண்டுதல், கிட்டிப்புள் என்று விளையாட்டுகள் மாறிக்கொண்டேயிருக்கும். எப்போது எந்த விளையாட்டு வரும் என்று யாருக்கும் தெரியாது.

திடீரென ஒரு சேக்காளி பம்பரம் சுற்றுவான். பார்த்தால் கடைகளில் பம்பரம் கிடைக்கும். திடீரென ஒரு பையன் பையில் கோலிக்காய்களைப் போட்டுக் கொண்டுவந்து குலுக்கிக் காட்டுவான். பார்த்தால் கடைகளில் கோலிக்காய்கள் இருக்கும். இப்படி ஆண்டு முழுவதும் எல்லாப் பருவங்களிலும் விளையாடிக்கொண்டிருப்பேன்.

பையன்கள் செட்டு கிடைக்காதபோதோ, மழைக்காலத்திலோ, இரவு நேரத்திலோ அக்கா, தங்கைகளுடன் தாயக்கட்டம், பரமபதம், பல்லாங்குழி, குத்தடி குத்தடி சைலக்கா, ஒரு குடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்ததாம், பூ பூ என்ன பூ என்று பல விளையாட்டுகளை விளையாடுவோம். பள்ளிக்கூடத்திலும் உத்திப் பிரித்துக்கொண்டோ, சாட் பூட் திரி, சொல்லியோ அணி பிரித்து விளையாடுவோம்.

இத்தனைக்கும் அப்போது எல்லோர் வீட்டிலும் தீப்பெட்டி அட்டைப்பெட்டி ஒட்டிக் கொடுப்பதோ, தீக்குச்சிக் கட்டை அடுக்கிக் கொடுப்பதோ, ஏதோ ஒரு வேலை நடக்கும். இரவில் தெருவின் முகமே மாறிவிடும். அனைத்து வீடுகளிலிருக்கும் பெண்களும் குழந்தைகளும் தெருவில் நிறைந்துவிடுவார்கள். தெருவிளக்கு வெளிச்சத்தில் சணல் சாக்கை விரித்து, உட்கார்ந்து கதை பேசிக்கொண்டே வேலை செய்வார்கள். கதை என்றால் கதை உங்க வீட்டுக்கதை எங்க வீட்டுக்கதை இல்லை. சினிமா கதை, பேய்க் கதை, ரத்தக்காட்டேரிக் கதை, நாட்டுப்புறக்கதை, படித்த கதை, கற்பனைக்கதை, புராணக்கதை, இதிகாசக்கதை என்று கதைகளைப் பேசிக்கொண்டே வேலை செய்வார்கள். எந்தக் கூச்சமுமில்லாமல் சினிமா பாடல்களைப் பாடிக்கொண்டே வேலை பார்ப்பார்கள். நானும் எனக்குக் கொடுக்கப்பட்ட அட்டைப்பெட்டிக் கட்டுகளுடன் உட்கார்ந்து கதை கேட்பேன். அப்படி ஆயிரக்கணக்கான கதைகளைக் கேட்டிருக்கிறேன்.

அப்படிக் கேட்ட கதைகளை உல்டா பண்ணி நான் புதுக்கதைகளை உருவாக்குவேன். வீட்டில் அம்மா தொடர்கதைகளை வாசிப்பவராக இருந்தார். அவர் மட்டுமல்ல, பெரும்பாலான வீட்டுப்பெண்கள் வாரப் பத்திரிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை வெட்டி, பைண்டிங் செய்து வாசிப்பார்கள். அப்படி அம்மாவும் குமுதம், கல்கண்டு பத்திரிகைகளின் வாசகியாக இருந்தார். அம்மாவுக்குப் பத்திரிகைகள் வாங்கிக் கொடுப்பது நான் தான். அதுவும் சென்னையிலிருந்து ரயிலில் வரும் பத்திரிகைக்கட்டை, பத்திரிகை ஏஜெண்ட் சாந்தலிங்கம் பிரிக்கும்போதே வாங்கி வருவேன். கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் வீட்டுக்குமிடையில் இருக்கும் தூரத்தைப் பத்திரிகைகளில் உள்ள படங்களைப் பார்த்தபடியும் துணுக்குகளை வாசித்தபடியும் நடந்து கடப்பேன்.

அப்படியே கல்கண்டில் தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் சங்கர்லால் இடம்பெறும் தொடர்கதைகளை வாசிக்கத் தொடங்கினேன். எனக்கும் துப்பறியும் ஆசை வந்தது. என் வீட்டுக்கு அருகில் இருந்த இருளப்பன் சாமி கோயிலைச் சுற்றியிருக்கும் புதர்க்காட்டில் துப்பறியத் தொடங்கினேன். வண்ண வண்ணச் சட்டை பொத்தான்கள், ஜில்விலாஸ் அல்லது காளிமார்க் கலர் பாட்டில்களின் தகரமூடிகள், வீணாகிப்போன பேனா மூடிகள், வளைந்த பேனா நிப்புகள், குன்னிமுத்துகள், இலுப்பை விதைகள், காக்காப்பொன் துகள்கள் என்று சேகரித்து, ரகசியமாக அம்மாவுக்குத் தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருப்பேன். அதை அடிக்கடி திறந்து பார்க்கும்போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!

உதயசங்கர், எழுத்தாளர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x