வீட்டிலிருக்கும் விஷப்பொருட்கள் – அலட்சியம் ஆபத்தில் முடியும்

வீட்டிலிருக்கும் விஷப்பொருட்கள் – அலட்சியம் ஆபத்தில் முடியும்
Updated on
2 min read

பெரியவர்களின் கவனக்குறைவால் குழந்தைகள் விஷப்பொருட்களைத் தங்களை அறியாமல் உட்கொண்டு உயிருக்கு ஆபத்தைத் தேடிக்கொள்கிறார்கள். இது போன்ற விஷங்களால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவங்கள், கிருமி நாசினிகள், அமிலம், காரம், ஆல்கஹால், ரசாயனப் பொருட்கள் போன்றவை நச்சு மிகுந்தவை.

குழந்தைகளுக்கு மருந்தைக் கொடுக்கும்போது மிட்டாய், இனிப்பு என்று கூறி ஏமாற்றக் கூடாது. ஏனென்றால், பல்வேறு நிறங்களில் வரும் மாத்திரை களைக் கண்டு, அவற்றை மிட்டாய் (sugar-coated tablets) என நினைத்து உட்கொள்ளச் சாத்தியம் உண்டு. எல்லா மருந்துகளையும் குழந்தைகள் அணுக முடியாத இடத்தில் பூட்டிவையுங்கள். காலாவதியான மருந்துகளை உடனே அப்புறப்படுத்துங்கள்.

கவனம் தேவை

மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்களையும் குழந்தைகள் எளிதில் அணுக முடியாத இடத்திலேயே வைக்க வேண்டும். உணவுப் பொருள், நெய், எண்ணெய் போன்றவற்றை வைக்கும் பாத்திரம், குவளைகள், ஜாடிகள், டின்கள் போன்றவற்றில் எலி மருந்து - பொடி- கட்டிகள், எறும்புப் பொடி, பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை வைக்கக் கூடாது.

குளிர்பானம் குடித்த பழைய பாட்டில்களில் ரசாயன திரவங்களான பினாயில் போன்றவற்றை ஊற்றி வைக்காதீர்கள். பாத்திரம் கழுவ பயன்படும் தூள், சோப்பு திரவங்கள், கிருமிநாசினிகள், அடுப்பு கிளீனர்கள், பிளீச் ஆகியவற்றைப் பத்திரமாக வைக்க வேண்டும்.

தனி அலமாரியில் பூட்டிவையுங்கள்

லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், நெயில் பாலிஷ் ரிமூவர், ஹேண்ட் சானிடைசர், ஆஃப்டர்ஷேவ் லோஷன் (அதிக ஆல்கஹால் கொண்டது) ஆகியவற்றைத் தனி அலமாரியில் பூட்டிவையுங்கள். காலாவதியான சிறிய பாட்டரிகள், பட்டன் பாட்டரிகளை அப்புறப்படுத்துங்கள்.

சிடி கிளீனர், ஏர் ஃபிரெஷனர், ரசாயன பசைகள் ஆகியவற்றையும் அடைத்து வையுங்கள். பாதரசம் உள்ள தெர்மாமீட்டர் முதலான கருவிகளைத் தவிருங்கள். பெயின்ட், சிமென்ட், வார்னிஷ், சுண்ணாம்பு, டர்பன்டைன், பெயின்ட் தின்னர் போன்றவற்றைத் தனி அறையில் பூட்டிவைக்க வேண்டும்.

உடனடி சிகிச்சை அவசியம் தேவை

ரசாயன திரவங்களை லேபிள் உள்ள பாட்டில்களிலேயே வைத்திருங்கள். ரசாயன திரவங்களை நீங்களாகவே ஒன்றுடன் ஒன்று கலக்காதீர்கள். அது விஷத்தன்மையை அதிகரிக்கும். நாப்தலின் உருண்டைகளைத் தவிருங்கள். பட்டாசு, மத்தாப்பு, தீப்பெட்டி ஆகியவற்றையும் பத்திரமாக வைக்க வேண்டும்.

விஷம் வாய்வழியாக மட்டுமல்ல; தோல் வழியாக, சுவாசத்தின் மூலமாகவும் செல்லும். கண்களையும் தோலையும் நேரடியாகப் பாதிக்கும். விஷப் பாதிப்பு தெரிந்தவுடன் தாமதிக்காமல் அருகிலுள்ள குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுசென்று சிகிச்சையளிக்க வேண்டும்.

கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in