

“வணக்கம்... நலமா?” என்றார் அருணா.
“வணக்கம். நலம், நீங்க?” என்று ஒரே குரலில் மூவரும் கேட்டனர்.
“நான் அருணா. கடல்சார் ஆராய்ச்சியாளரா இருக்கேன். இந்தக் கடல் பயணத்துல உங்களோட வழிகாட்டியாக இருந்து, கடல் அதிசயங்களை உங்களுக்குக் காட்டப்போறேன்” என்றார் அருணா.
“என் பெயர் ரோசி, இவ ரக் ஷா, இவன் செந்தில். நாங்க மூணு பேரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். இந்த நண்பர் குழுவுக்கே நான்தான் தலைவி மாதிரி” என்று ரோசி பேச, மற்ற இருவரும் சிரித்துக்கொண்டே இல்லை என்று தலையசைத்தனர்.
“சரி, தலைவி அவர்களே... நம்ம முதல் கடல் அதிசயத்தைப் பார்க்கப் போகலாமா? இதோ இந்த ‘நாட்டிலஸ்’ நீர்மூழ்கிக்குள்ள உட்கார்ந்துக்கோங்க. எல்லாக் கடல் சூழலுக்கும் இதில் பயணம் போகலாம்,” என்று அருணா கைகாட்டினார்.
“எங்க போறோம்?” என்று செந்தில் கேட்டு முடிப்பதற்குள் கடலுக்குள் சீறிப் பாய்ந்தது நாட்டிலஸ்.
சில மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, தென்னாப்பிரிக்கக் கடற்பகுதிக்கு அருகில் இருப்பதாக நாட்டிலஸில் உள்ள டிஜிட்டல் வரைபடம் காட்டியது.
“இப்போ நாம் வந்திருப்பது தென்னாப் பிரிக்காவின் வடக்குக் கடற்பகுதிக்கு. இங்கே பூமியிலேயே மிகப்பெரிய மீன் கூட்டத்தைப் பார்க்கப் போறோம்” என்றார் அருணா.
“பெரிய மீன்கூட்டம்னா ஆயிரம் மீன் இருக்குமா?” என்று ரக் ஷா கேட்டாள்.
“அதோ பாருங்க” என்று அருணா கைகாட்டிய இடத்தில் மீன்கள் வருவதுபோலவே தெரியவில்லை. தூரத்தில் கோடிக்கணக்கான சிறு புள்ளிகள் கடலின் நீல நிறத்தையே கறுப்பாக்கிவிட்டன. குழந்தைகள் ஆச்சரியப்பட்டனர்.
“இது க்வாசுலு-நட்டால் சார்டீன் ரன் (Kwazulu-Natal Sardine Run)” என்று அருணா சொல்ல, “பேரு வாயில் நுழையாது போலிருக்கே” என்று செந்தில் குழம்பினான்.
“க்வாசுலு நட்டால் என்பது நாம் இருக்கும் இடத்தின் பெயர். பொதுவா இந்த நிகழ்வை Sardine Run என்று சொல்வோம். பசிபிக் மத்தி இனங்கள் வருடாவருடம் மே முதல் ஜூன் மாதம் வரை தென்னாப்பிரிக்காவின் மேற்குக் கடற்பகுதியிலிருந்து கிழக்குக் கடற்பகுதிக்கு வலசை போகும். இந்த மத்திக்கூட்டத்தின் அளவு மிகப்பெரியது. 7 கிலோமீட்டர் நீளம், 1.5 கிலோமீட்டர் அகலம், 30 மீட்டர் ஆழம் கொண்ட பெரும் கூட்டம் இது. கோடிக்கணக்கான மத்திமீன்களுடைய கூட்டம்” என்று அருணா விவரித்தார்.
மீன்கள் கூட்டம் அருகில் வரவும், மத்தி மீன்களின் உருவம் தெரிய ஆரம்பித்தது.
“எதுக்காக இந்த மீன்கள் வலசை போகுது?” என்று ரக் ஷா கேட்க, “நமக்குப் பள்ளிக்கூடத்துல சொல்லியிருக்காங்களே, வலசை போவது பெரும்பாலும் உணவுக்கும் இனப்பெருக்கத்துக்கும்தான்” என்றாள் ரோசி.
“ஆமாம். இந்த மீன்கள், கடலின் ஆழத்திலிருந்து வரும் சத்துகள்கொண்ட குளிர்ந்த நீரைப் பின்தொடர்ந்து நுண் விலங்குகளைச் சாப்பிடுவதற்காக வலசை போகின்றன. ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் நடக்கும் பாலூட்டிகளின் மிகப்பெரிய வலசை பற்றி நீங்கள் படித்திருப்பீர்களே, இது அதைவிட எண்ணிக்கையில் பெரிதுன்னு சொல்லப்படுது. இப்போ கவனமா பாருங்க” என்று அருணா கூறியதும், ஒரு பெரிய கடல் நாடகம் நடக்கத் தொடங்கியது.
திடீரென்று மேலிருந்து ஏவுகணை போல ஏதோ ஒன்று கடலுக்குள் சீறிப் பாய்ந்தது. அடுத்தடுத்து ஏவுகணைகள் வந்து விழவும், கடல்நீர் சலசலத்தது. வந்து விழுந்தவை கடல் பறவைகள் என்று புரிந்துகொள்ளவே கொஞ்ச நேரம் பிடித்தது.
அடுத்த சில நிமிடங்களில் சீல் பாலூட்டிகள், சூரை மீன்கள், ஓங்கில்கள் (டால்பின்கள்), சுறாக்கள் என்று எங்கிருந்தோ வெவ்வேறு கடல் உயிரினங்கள் வந்தபடி இருந்தன.
“ஓங்கில்கள் இவ்வளவு இருக்கே!” என்று செந்தில் அதிசயிக்க, “ஆமாம். ஒரு மத்திக்கூட்டத்தைப் பிடிக்க சராசரியாக 18,000 ஓங்கில்கள் வரும்” என்றார் அருணா.
திடீரென்று மத்திக் கூட்டத்தைச் சுறாக்கள் தாக்க, அவை சிறு குழுக்களாகப் பிரிந்து, இடைவெளி ஏதுமின்றி இணைந்து நீந்தி ஒரு பந்து போல உருமாறின. சுறாக்கள் இந்தப் பந்துக்குள் உள்ள மீன்களைப் பிடிக்க முடியாமல் தடுமாறின. அடுத்த சில நிமிடங்களுக்கு எந்த வேட்டையாடிகளாலும் மத்திகளைப் பிடிக்க முடியவில்லை.
“என்ன நடக்குது?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள் ரோசி.
“இதை நாங்க Bait ballஎன்று சொல்வோம். 20 மீட்டர் விட்டம் கொண்ட மீன்களாலான ஒரு கோளம்தான் இந்த பெய்ட் பால். சிறிய, கூட்டமாக வாழும் பண்புள்ள மீன்கள் வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்கப் பயன்படுத்தும் உத்தி இது. வேட்டையாடிகள் வரும்போது ஒரு பந்து போன்ற இறுக்கமான வடிவமைப்பில் இவை நீந்தும், இதை வேட்டையாடிகள் முறியடிக்கும்வரை உள்ளே இருக்கும் மீன்கள் பாதுகாப்பாக இருக்கும்... அதோ பாருங்க” என்று அருணா பரபரப்பானார்.
ஒரு சூரை மீன் திறமையாக நீந்தி மத்திகளின் கோளத்தை முறியடித்து, அவற்றைக் கலைத்துவிட்டது. மத்திகள் அங்குமிங்கும் சிதறின. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எல்லா வேட்டையாடிகளும் தங்கள் உத்திகளைப் பயன்படுத்தத் தொடங்கின.
சிதறி ஓடிக்கொண்டிருந்த மத்திக்கூட்டம் ஒருபுறமாக ஒதுங்கி நீந்தத் தொடங்கும்போது, திடீரென்று வாயைப் பிளந்தபடி எங்கிருந்தோ வந்த ஒரு திமிங்கிலம் ஒரே விழுங்கில் ஆயிரக்கணக்கான மத்திகளை உண்டுவிட்டது.
“அட” என்று மூன்று குழந்தைகளும் ஒருசேரக் குரல் கொடுத்தனர்.
“இது என்ன திமிங்கிலம்? மத்திமீன்கள் வரும்போது இந்த ஓங்கில், சூரை, கடற்பறவை எதுவும் இல்லையே, இதுங்க எங்கிருந்து திடீர்னு வந்தது?” என்று அடுத்தடுத்து கேட்டான் செந்தில்.
“போதும் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ... இது ப்ரைட் திமிங்கிலம். இந்தக் கடற்பறவை கேப் கேனட். இந்த வேட்டையாடிகள், வருடாவருடம் மத்திக்கூட்டத்தின் வருகைக்காகக் காத்திருக்கும். சரியான நேரத்தில் இங்கு வந்து மத்திகளை வேட்டை யாடும். கேனட்டுகள் மணிக்குத் தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடிய திறமையான வேட்டையாடிகள். ஒரு பருவத்தில் மட்டும் இவை 9000 (டன் - 1000 கிலோ) மத்திகளைச் சாப்பிடும்! சின்னஞ்சிறிய பறவைகளுக்கே இவ்வளவு இரை கிடைக்குதுனா மற்ற வேட்டை விலங்குகளுக்கு எவ்வளவு இரை கிடைக்கும்? அதனால்தான் இவை மத்திக் கூட்டத்துக்காகக் காத்துக் கிடக்கின்றன” என்று அருணா விளக்கம் தந்தார்.
“ஒவ்வொரு வருஷமும் இது இங்க நடக்குமா?” என்று ரக் ஷா ஆர்வமாகக் கேட்க, “மத்திக்கூட்டங்களுக்கு 21 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் வெப்பநிலை இருப்பது அவசியம். தவிர, காற்றும் நீர் சுழற்சிகளும் சரியா அமையணும். இவை இருந்தா அந்த ஆண்டு கண்டிப்பா மத்திகள் வலசை வரும்” என்றார் அருணா.
“கடல்நீர் வெப்பம் அதிமாக இருப்பதாகச் செய்திகள்ல சொன்னாங்களே, அப்போ மத்திகளின் வலசை பாதிக்கப்படுமா?” என்றான் செந்தில்.
“சரியான கேள்வி செந்தில். கடல்நீர் வெப்பநிலை மாறுவதாலும் சுழற்சிகள் சரியாக இல்லாததாலும் மத்திகளின் வலசை பாதிக்கப் படுதுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. மத்திக்கூட்டங்களால் வரும் மீன்பிடி வாழ்வாதாரம், சுற்றுலா வருமானம்னு மனிதர்களுக்கும் இந்த வலசைக்கும் ஒரு பிணைப்பும் உருவாகியிருக்கு. ஆக, இவை எல்லாம் சரியா நடக்கணும்னா காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தணும்” என்று அருணா விளக்கினார்.
பேசி முடிப்பதற்குள் வேட்டையாடிகளிடம் மாட்டியதுபோக மீதமிருந்த மத்திக்கூட்டம் தன் வலசையைத் தொடர்ந்திருந்தது.
“பயணம் சிறக்க வாழ்த்துகள்” என்று அவற்றைப் பார்த்துக் கையசைத்து வழியனுப்பிய ரக் ஷா, “அடுத்தது எங்கே போறோம்?” என்று அருணாவிடம் கேட்டாள்.
(அதிசயங்களைக் காண்போம்)
கட்டுரையாளர், கடல்சார் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: nans.mythila@gmail.com