Last Updated : 13 Apr, 2022 07:00 AM

 

Published : 13 Apr 2022 07:00 AM
Last Updated : 13 Apr 2022 07:00 AM

மாய உலகம்!: நான் ஏன் வரைகிறேன்?

நான் குழந்தையாக இருந்தபோது என் பள்ளி ஆசிரியர் என் அப்பா, அம்மாவை அழைத்து என்னைக் காட்டி இப்படிச் சொன்னாராம். “நான் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தை பிகாசோ எதிர்காலத்தில் ஒரு சிறந்த கணித மேதையாக மாறப்போகிறான்! எந்த எண்ணாக இருந்தாலும் முத்து முத்தாக எழுதுகிறான். கணக்கில்தான் இவனுக்கு எவ்வளவு ஆர்வம்!”

நீண்ட காலத்துக்குப் பின் என்னை அடையாளம் கண்டறிந்து ஆச்சரியப்பட்டார் அந்த ஆசிரியர். “நீ எப்படியப்பா ஓவிய மேதையாக மாறினாய்? கணிதம் அல்லவா உன் துறை என்று நினைத்திருந்தேன்.” நான் புன்னகையோடு அவரிடம் சொன்னேன். “இல்லை, நீங்கள் 1,2,3... என்று பலகையில் எழுதும்போது அவை எண்களாக எனக்குத் தோன்றவில்லை. நான் அவற்றை எழுதவும் இல்லை. சின்னச் சின்னக் கோடுகளையும் சின்னச் சின்ன வளைவுகளையும்தான் நான் வரைந்துகொண்டிருந்தேன்.

1 என்பது நான் தினம், தினம் பள்ளிக்கு நடந்து வரும் சாலை. 1 என்பது ஓங்கி உயர்ந்து நிற்கும் ஒரு தென்னை மரம். 1 என்பது ஒரு துண்டு தண்டவாளம். 2 என்பது எண்ணல்ல. ஒரு சின்னஞ்சிறிய குருவியின் வளைந்த கழுத்து அது. நீ என்னைத்தான் வரைகிறாயா பிகாசோ என்று தன் கழுத்தைத் திருப்பி என்னிடம் அது கேட்கிறது.

உன்னுடைய பூஜ்ஜியம் எப்படி இவ்வளவு அழகாகவும் வட்டமாகவும் இருக்கிறது என்று நீங்கள் கேட்டது நினைவுக்கு வருகிறது. நிலா அழகாகவும் வட்டமாகவும்தானே இருக்கும்? அப்படியானால் அது நானில்லையா? என்னை வரையவில்லையா நீ என்று கடிகாரம் சண்டைக்கு வரும். உன்னை எப்படி மறப்பேன் என்று சொல்லி அதை வரைவேன். இது சரியில்லை பிகாசோ என்று மீன் என்னை முறைக்கும். கோபித்துக்கொள்ளாதே, அடுத்தமுறை உன் விழியை வரைகிறேன் என்று சமாதானம் செய்வேன்.

எண்கள் மட்டுமல்ல. வளைந்தும், சுருண்டும், நீண்டும், மடங்கியும் இருக்கும் ஒவ்வோர் எழுத்தும் பலவிதமான வடிவங்களை, பலவிதமான காட்சிகளை எனக்கு நினைவுபடுத்தும். அவற்றை நினைத்துக்கொண்டே வரைவேன்.

ஒரு குழந்தை முதன் முதலில் பேசத் தொடங்கும்போது அம்மா என்றோ அப்பா என்றோதான் சொல்லும் என்பார்கள். நான் மட்டும் ஸ்பானிஷில் ‘பிஸ்’ என்று சொன்னேனாம். பென்சில் என்பதன் சுருக்கம் அது. அந்த பென்சில் இன்று தூரிகையாக வளர்ந்திருக்கிறது. நான் அன்று வரைந்த வடிவங்களை இன்று ஓவியங்கள் என்று நீங்களெல்லாம் அழைக்கிறீர்கள்.

நான் மாறவில்லை, அப்படியேதான் இருக்கிறேன். மூன்று வயது முதல் இன்றுவரை அதே நிலாவை, அதே மீனை, அதே முகங்களை மீண்டும் மீண்டும் வரைந்துகொண்டிருக்கிறேன். ஓவியம் என்றால் என்னவென்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பே நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்து முடித்துவிட்டேன் நான்.

எதை வரைய வேண்டும் என்பதை எப்படி முடிவெடுக்கிறீர்கள் பிகாசோ என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். நானா முடிவெடுக்கிறேன்? என்ன சிலை வடிக்க வேண்டும் என்பதை ஒரு சிற்பியா முடிவு செய்கிறான்? என்னை வெளியில் கொண்டு வருவாயா என்று பாறாங்கல்லில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. ஓ, நிச்சயம் என்று சிற்பி உளியைக் கையில் எடுத்துக்கொள்கிறான். ஒரு கல் யானையாக மாற விரும்புகிறது. இன்னொரு கல் தேவதையாக மாற விரும்புகிறது.

ஒரு காகிதத்துக்குள் முழு வானமும் மறைந்திருக்கிறது. எல்லாக் கடல்களும் எல்லா மலைகளும் எல்லா நட்சத்திரங்களும் ஒரு காகிதத்துக்குள் தங்கியிருக்கின்றன. எல்லா மனிதர்களையும் ஒரு காகிதம் நினைவில் வைத்திருக்கிறது. எல்லா இன்பங்களையும் எல்லா துன்பங்களையும் காகிதம் சேகரித்து வைத்திருக்கிறது.

எல்லா வடிவங்களையும் வரைய முடிவதுபோல் எல்லா உணர்வுகளையும் வரைய முடியுமா? ஒரு மகிழ்ச்சியை எப்படி வரைவது? ஒரு துன்பத்தை எப்படி வரைவது? ஒரு கனவை, ஓர் எதிர்பார்ப்பை, ஒரு சோகத்தை எப்படி வரைவது? நமக்குள் தோன்றும் ஓர் ஆசையை எப்படி வரைவது? ஒரு நட்பை, ஒரு பகையை வரைய முடியுமா? அச்சத்தை வரைந்து காட்ட முடியுமா? பிரிவை வரைய முடியுமா?

நான் வாழும் உலகம் அழகாக இருக்கும்போது நான் வரைவதும் அழகாக இருக்கிறது. உடைந்து போன மனிதர்களைக் காணும்போது நானும் உடைந்து போன ஓவியங்களையே வரைகிறேன். கடினமான முகங்களைக் கடினமாக மட்டுமே வரைய முடிகிறது என்னால். என் உலகில் போர் நடக்கும்போது அந்தச் சத்தத்தில் குருவிகளும் கிளிகளும் பறந்துபோய்விடுகின்றன. இருள் சூழ்ந்துகொள்கிறது. எனவே, அந்த இருளை நான் வரைகிறேன். என் மனிதன் துயரத்தில் இருக்கும்போது என்னால் ஒருபோதும் புன்னகையை வரைய முடியாது.

நீங்கள் வரைந்து காட்டிய பூஜ்ஜியம் இன்று எனக்கு ஒரு பூமிப்பந்தாகத் தெரிகிறது. சிறிய பந்துதான் என்றாலும் இன்றுவரை என்னால் அதை வரைந்து முடிக்க முடியவில்லை. அதை வரைந்து முடிக்கும்போது நான் மீண்டும் ஒரு குழந்தையாக மாறியிருப்பேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x