

காலத்தில் முன்நின்ற கணித மேதையென்று வர்ணிக்கப்படும் தமிழர் சீனிவாச ராமானுஜன். அவரது வாழ்க்கை மற்றும் அவரது கணிதவியல் பங்களிப்புகள் மீது உலகம் முழுக்க கல்வியாளர்களிடம் மிகுந்த மதிப்புண்டு. 1991-ல் ராபர்ட் கனிகல் எழுதிய ‘தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி’ என்ற நூல் மூலம் ஆங்கில வாசகர்கள் மத்தியில் சீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை மீது புதிய ஆர்வம் ஏற்பட்டது. அந்த நூலை ஆதாரமாகக்கொண்டு உலகத் திரைப்படப் பார்வையாளர்களுக்கு சீனிவாச ராமானுஜனின் வாழ்வையும், அவரது கணிதவியல் பங்களிப்புகளையும் சுவாரசியமாகச் சொல்லப் போகும் திரைப்படம்தான் ‘தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி’. உலகக் கணித விழிப்புணர்வு மாதமாகக் கொண்டாடப்படும் ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக இன்டர்மீடியட் தேர்வில் ஆங்கிலத்திலும் சமஸ்கிருதத்திலும் தோல்வியடைந்த மாணவரான ராமானுஜன் எப்படி லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார்? இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் கற்பனை சாத்தியங்களைக் கொண்ட கணிதவியல் தேற்றங்களை எப்படி உருவாக்கினார்? போதிய அங்கீகாரமும் ஆதரவும் இன்றி, உடல்நலம் குன்றி 32 வயதில் காலமான ராமானுஜனின் வாழ்க்கை பற்றியும், ராமானுஜனுக்கும் கேம்பிரிட்ஜ் கணிதவியல் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டியுடனான அற்புதமான நட்பைப் பற்றியும் இந்தத் திரைப்படம் பேசுகிறது. தர்க்க ரீதியான காரணங்களில் தொங்கிக்கொண்டிருக்காமல் ராமானுஜனின் கற்பனை மற்றும் உள்ளுணர்வுத்திறன்கள் மீது இப்படம் கவனம் குவித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ராமானுஜனாக ‘ஸ்லம்டாக் மில்லினர்’ நாயகன் தேவ் பட்டேல் நடித்துள்ளார். ராமானுஜனின் வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் நம்பிக்கையாகவும் இருந்த அவரது மனைவி ஜானகியாக பரத நாட்டியக் கலைஞரும், ஜாஸ் பாடகியுமான மன்ஹாட்டனைச் சேர்ந்த தேவிகா பிஸ் நடித்துள்ளார். கணிதவியல் தெரிந்தவர்கள் மட்டுமே பார்க்கும்படியில்லாமல் உணர்ச்சிகரமான நல்ல ஹாலிவுட் திரைப்படத்தின் சுவாரசியங்களைக் கொண்டதாக ‘தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிரைலர் அதற்குக் கட்டியம் கூறுகிறது.