Published : 05 Apr 2022 10:45 AM
Last Updated : 05 Apr 2022 10:45 AM

குருப்-4 தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும்?

தொகுப்பு: கோபால்

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய அரசுப் பணிகளுக்கான குருப் 4 தேர்வுகள் 2022 ஜூலை 24 அன்று நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 24. அக்டோபரில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு தேர்வில் போட்டி மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் குரூப் 4 தேர்வுகளுக்குத் தயாராவதற்கு ஆலோசனைகளை வழங்குகிறார் அனுபவமிக்க போட்டித் தேர்வு பயிற்சியாளரும் குளோபல் விக்கிமாஸ்டருமான ஜி.கோபாலகிருஷ்ணன்:

“பொதுவாகவே அரசுப் பணியில் சேர தற்போது பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் தேர்வுகளை எதிர்கொள்ள சற்று பயப்படுகின்றனர். பயப்படத் தேவையில்லை. தேர்வுகள் எப்படிப்பட்ட தன்மையில் நடத்தப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் தயாரிப்புகளை மேற்கொண்டாலே பாதி கடலைக் கடந்துவிடலாம்.

குறளுக்கு முதன்மை

குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ்ப் பகுதிக்கான வினாக்களை மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதலில் இலக்கணப் பகுதிக்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகத்தில் நாம் படித்த இலக்கணைப் பகுதிகளைத் திருப்பிப் படித்தாலே போதுமானது. இலக்கியப் பகுதியைப் பொறுத்தவரை திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக 25 அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த 25 அதிகாரங்களில் உள்ள அனைத்துக் குறள்களுக்குமான பொருள், இலக்கணம், அணிகளை எல்லாம் நன்கு அறிந்திருந்தாலே இந்தப் பகுதியில் 25 சதவீத வினாக்களுக்குச் சரியாக விடை அளித்துவிட முடியும். இது தவிர ஐம்பெரும்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள் இருக்கும். மூன்றாவது பகுதி தற்கால நூல்களையும் நூலாசிரியர்களையும் பற்றியது. நாடகம், திரைப்படக் கலைகளைப் பற்றியும் அவற்றின் வரலாறு, பரிணாமம், தற்கால சூழல் ஆகிய வற்றைக் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழில் 60 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது என்று நினைக்கக் கூடாது. போட்டி நிறைந்த சூழலில் அரை மதிப்பெண், ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் வாய்ப்புகளை இழக்க நேரலாம். எனவே, மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகப் பெற வேண்டும். அதற்குத் தமிழில் முழு மதிப்பெண்களைப் பெற்றுவிடுவது மிகவும் பயனுள்ளது. ஒப்பீட்டளவில் எளிமையானதும்கூட.

தமிழ்நாடு முக்கியம்

பொது அறிவு பகுதியில் பல பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான அறிவியல், சமூக அறிவியல், கணிதப் பாடப் புத்தகங்களை நன்கு படிக்க வேண்டும். அறிவியல் பாடப் பகுதியில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வரலாறைப் பொறுத்தவரை சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து சரியாகப் படித்துவர வேண்டும். அதன் பிறகு மெளரியப் பேரரசு, குப்த பேரரசு ஆகியவற்றைப் பற்றிப் படித்துவர வேண்டும். இடைக்கால இந்தியா என்று சொல்லக்கூடிய கி.பி.1000 முதல் 1600 வரையிலான காலகட்டத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். கிழக்கிந்திய கம்பெனியின் வருகை உள்ளிட்ட நவீன இந்திய வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

வரலாற்றைப் பொறுத்தவரை ஆண்டுகளைச் சரியாக நினைவில் வைத்திருக்க வேண்டும். எந்த ஆண்டைக் குறிப்பிட்டாலும் அந்த ஆண்டில் என்னென்ன முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றன என்பது தெரிந்திருக்க வேண்டும். எந்த நிகழ்ச்சியைக் கேட்டாலும் அது நிகழ்ந்த ஆண்டைச் சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு வரலாறு குறித்து அதிகம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் ஆகியோரின் ஆட்சிக் காலம், அவர்கள் காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், அதன் தொடர்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அதிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படும். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை இந்தியத் தலைவர்கள் மட்டுமல்லாமல் பாரதியார், வ.உ.சி. சுப்பிரமணிய சிவா, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து நிறைய தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

ஜி. கோபால கிருஷ்ணன்

நடப்பு நிகழ்வுகளில் கவனம்

நடப்பு நிகழ்வுகள் பகுதியில் நல்ல மதிப்பெண்களைப் பெற நாளிதழ்களைத் தினமும் விரிவாகப் படிக்க வேண்டும். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில நாளிதழ்களையும் படிக்க வேண்டும். படித்தவற்றைப் பற்றிக் குறிப்பெடுக்க வேண்டும்.

மத்திய அரசு, மாநில அரசுத் திட்டங்கள் குறித்து ஐந்து கேள்விகளாவது இடம்பெறும். இந்திய மாநிலங்கள் உருவான ஆண்டுகள், மாநிலங்களின் சிறப்புகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு நகரங்களின் முக்கியத்துவம் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். உதாரணமாக கான்பூர் தோல் பொருட்கள், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை என்பது போன்ற இடங்களின் சிறப்புகள். தமிழ்நாட்டில் எங்கெங்கு என்னென்ன தொழிற்சாலைகள் உள்ளன, என்னென்ன சிறப்பிடங்கள் உள்ளன என்பன போன்றவற்றையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஓர் ஊர் பெயரைச் சொன்னால் அந்த ஊரில் உள்ள ஆலையைச் சொல்லத் தெரிய வேண்டும். பொது அறிவு பகுதியில் தமிழ்நாடு தொடர்பாக மட்டும் 40 சதவீதம் கேள்விகளை எதிர்பார்க்கலாம்.

பொது அறிவு பகுதியில் 25 வினாக்கள் கணிதம்-நுண்ணறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும். கணிதத்தில் சுருக்க வழிமுறைகள், எளிய முறைகளைப் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றிருந்தால் கூடுதல் மதிப்பெண்களைப் பெற முடியும். கணிதத்தில் எளிய முறையைப் பயன்படுத்துவது எப்படி என்று ‘இந்து தமிழ் திசை’ இயர்புக் 2021-இல் நான் எழுதிய ‘வங்கித் தேர்வு: வெற்றிபெற சில உத்திகள்’ என்னும் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பாடவாரியான குறிப்புகள்

தேர்வுக்குப் படிக்கும்போது குறிப்பு எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம். வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் வைத்துக்கொண்டு படிப்பது சரியான தயாரிப்பு முறை அல்ல. ஒவ்வொரு பாடத்தையும் சரியாகப் படித்துக் குறிப்பெடுத்துக்கொண்ட பிறகு வினாக்களை உருவாக்கிக்கொண்டு விடையளித்துப் பயிற்சி பெறும் முறையே சரியானது. ஒவ்வொரு பாடத்துக்கும் அவற்றின் உட்பிரிவுக்கும் தனித் தனியாகப் பிரித்து குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரிவுகளில் நடப்பு நிகழ்வுகளையும் சமீபத்திய முன்னேற்றங்களையும் பற்றிக் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும்.”

கைகொடுக்கும் இந்து தமிழ் இயர்புக்

குரூப் 4 தேர்வில் வெற்றி அடைவதற்குத் தேவையான பல்வேறு பகுதிகள் ‘இந்து தமிழ் திசை’ 2022 இயர்புக்கில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக கா.செல்வகுமார் எழுதிய ‘போட்டித் தேர்வுக்குத் தமிழ்’ என்னும் பகுதி திருக்குறள் தொடங்கி அனைத்துப் பண்டைய தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் அவற்றின் ஆசிரியர்கள் குறித்த விரிவான குறிப்புகளைத் தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x