Last Updated : 11 Jun, 2014 12:00 AM

 

Published : 11 Jun 2014 12:00 AM
Last Updated : 11 Jun 2014 12:00 AM

வெந்நீரின் சுவை குறைவது ஏன்?

நிலா டீச்சர் ஊரில் ஒரு வாரமாகக் கடுமையான மழை. ஊரெல்லாம் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரையே குடிக்குமாறு சுகாதாரத் துறை பிரச்சாரம் செய்தது. நிலா டீச்சர் வீட்டிலும் கொதிக்க வைத்த குடிநீர்தான். ஆனால், கவினுக்கு அதைக் குடிக்கவே பிடிக்கவில்லை.

“அம்மா! கொதிக்க வைத்த தண்ணி சப்புன்னு இருக்கு. தண்ணி குடிச்ச மாதிரியே இல்ல. நான் கொதிக்க வைக்காத தண்ணியே குடிக்கிறேன், கொதிக்க வைச்ச தண்ணி வேணாம்” என்று அடம்பிடித்தான்.

“டேய்! ரோடெல்லாம் மழை தண்ணி தேங்கிக் கெடக்கு. இந்த நேரத்துல தண்ணி மூலமாதான் நோய்கள் பரவும். அதனால கொதிக்க வைச்ச தண்ணிய குடிக்கிறதுதான் உடம்புக்கு நல்லது. இல்லேன்னா உனக்குத்தான் உடம்பு கெட்டுப்போகும், பார்த்துக்கோ” என எச்சரித்தாள் ரஞ்சனி.

“சுவையே இல்லாத இந்தத் தண்ணிய எப்படித்தான் குடிக்கிறீங்களோ! என்னால முடியாதுப்பா” என்று மீண்டும் அடம் பிடித்த கவின், சாதாரண தண்ணீரை எடுத்துக் குடிக்க முயன்றான்.

“சரி சரி! உனக்குப் பிடிச்ச தண்ணியையே நீ குடி. அதுக்கு முன்னாடி சுத்தமான தண்ணி வேணுமா, இல்லேன்னா சுவையான தண்ணி வேணுமான்னு முடிவு பண்ணிக்கோ” என்றார் நிலா டீச்சர்.

“எனக்கு சுத்தமான தண்ணியும் வேணும், அது சுவையாவும் இருக்கணும்” என்றான் கவின்.

“சுத்தமாக இருந்தால், சுவை இருக்காது. சுவை இருந்தால் சுத்தமாக இருக்காது. இப்போ உனக்கு என்ன வேணும்னு சொல்லு” எனக் கூறி கவினைக் குழப்பினார் நிலா டீச்சர். கவின் முழிப்பதைப் பார்த்து சிரித்த ரஞ்சனி, அவனை கேலி செய்தாள்.

“அம்மா நீங்க சொல்றது எதுவுமே எனக்குப் புரியலை” என்றான் கவின்.

“சுத்தமான நீருக்கு சுவையோ, நிறமோ, மணமோ இருக்காது” என்றார் நிலா டீச்சர்.

“குடிநீர் குழாய்ல வர்ற தண்ணி, சுவையாதானே இருக்கு? அப்போ அது சுத்தமானது இல்லையா? சுவையா இருக்கற தண்ணி, கொதிக்க வைச்சதுமே எப்படி குவை குறையுது?” என்று கேள்விகளை அடுக்கினான் கவின்.

“பொதுவா சாதாரண தண்ணில பலவகையான தாதுப் பொருட்கள் கரைஞ்சிருக்கும். அந்தத் தண்ணிய குடிக்கும்போது, அதுல கரைஞ்சிருக்கும் தாதுப் பொருட்களால் நீருக்குச் சுவை கிடைக்கும். அதே தண்ணியை நல்லா கொதிக்க வைச்சா, தாதுப் பொருட்கள் நீரிலிருந்து பிரிஞ்சு அடியில் படிஞ்சிடும். அந்த தண்ணிய ஆற வைச்சு வடிகட்டி குடிக்கும்போது, தாதுப் பொருட்கள் இல்லாத நீரின் சுவையும் குறைஞ்சிடும்.

அதோட, தண்ணிய கொதிக்க வைக்கும்போது, அதுல கலந்திருக்கிற பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அழிக்கப்படுறதால, அந்தத் தண்ணி முன்னைவிட கூடுதல் சுத்தமா மாறுது” என்றார் நிலா டீச்சர்.

அம்மா சொன்ன விளக்கத்தால் திருப்தியடைந்த கவின், “எனக்கு சுவையில்லாத, சுத்தமான தண்ணியையே கொடுங்க” என்றான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x