Last Updated : 31 Mar, 2022 07:29 AM

 

Published : 31 Mar 2022 07:29 AM
Last Updated : 31 Mar 2022 07:29 AM

நல்லியல்புகளை நிலைநிறுத்தும் ரமலான் நோன்பு

ஏப்ரல் 3ஆம் தேதி புனித ரமலான் மாதம் தொடங்கவிருக்கிறது. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயத்தில் தொடங்கி சூரியன் மறைவில் தினமும் முடியும் ரமலான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று.

இறை நம்பிக்கை (கலிமா), இறை வழிபாடு (தொழுகை), தான தர்மங்கள் செய்தல் (ஜாகத்), புனிதப் பயணம் (ஹஜ்), ரமலான் நோன்பு ஆகிய ஐந்து கடமைகளில், இந்த நோன்பு முக்கியமானது மட்டுமல்ல; கடினமானதும்கூட. மனதளவில் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பருவம் அடையாத குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் (அவர்களால் முடியாதபட்சத்தில் மட்டும்) போன்றவர்களுக்கு மட்டும் நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

எத்தனையோ மாதங்கள் இருக்கின்றபோதும், நோன்புக்கு என்று ரமலான் மாதத்தை இறைவன் தேர்ந்தெடுத்து அறிவித்து இருப்பதிலிருந்தே இந்த நோன்பின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ளலாம். ஏனென்றால், ரமலான் மாதத்தில்தான் அருள் மறை திருக்குர்ஆன் முகமது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப் பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் இந்த மாதத்தில்தான் இறைவன் திருவேதங்களை அருளியுள்ளான்.

ரமலான் பிறை 13இல் நபி மூஸா அவர்களுக்கு தவ்ராத் வேதமும், ரமலான் பிறை 25இல் நபி ஈஸா அவர்களுக்கு இன்ஜில் வேதமும் அருளப்பட்டன. நபி இப்ராஹிம் அவர்களுக்கு ரமலான் மாதத்தின் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டன. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆம், ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகக் கருதப்படும் ‘லைலத்துல் கத்ர்’ எனும் இரவு இந்த மாதத்தில்தான் வருகிறது.

“ரமலான் மாதத்தில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப் பட்டுவிடும்; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டுவிடும்; மனித இனப் பகைவனா கத் திரியும் சைத்தானின் கால்களுக்குச் சங்கிலி களால் விலங்கிடப்பட்டுவிடும்”' என்று ரமலான் மாதத்தின் சிறப்பினைப் பற்றி நபிகள் கூறுகிறார்.

எது நோன்பு?

வெறுமனே பசித்திருப்பது மட்டும் இறைவன் விரும்பும் நோன்பு அல்ல. அது உடலை மட்டு மல்லாமல்; உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் ஓர் ஆன்மிகப் பயிற்சி. ரமலான் நோன்பு பற்றி அல்லாஹ் திருமறையில் “ஈமான் கொண்டோர் களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்குர்ஆன் 2:183) என்று கூறுகிறான்.

நோன்பு நோற்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் திருக்குர்ஆனுடன் நமது தொடர்பை அதிகமாக்கி, ஆன்மிகத்தில் மூழ்கி, பக்தியைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். ரமலான் மாதம் முழுவதும் முடிந்தவரை ஏழைகளுக்குத் தர்மம் செய்ய வேண்டும்.

ரமலான் மாதத்தில் நாம் செய்யும் நன்மையின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும். நோன்பின்போது சுய ஒழுக்கத்துடன் இருப்பதும், தாராளமாக உதவிசெய்வதும், அதிக நேரம் தொழுகையில் ஈடுபடுவதும், பிரார்த்தனையில் மூழ்குவதும் நம்முடைய நன்மையின் அளவை அதிகரிக்கும்.

எதைத் தவிர்க்க வேண்டும்?

நோன்பாளிகள் கண்டிப்பாக உணவிலிருந்தும், பருகுவதிலிருந்தும், இச்சைகளிருந்தும் விலகி இருக்க வேண்டும். பொய் சொல்வது, கேலி செய் வது, மற்றவர்களை அவமதிப்பது போன்ற வற்றை அறவே தவிர்க்க வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை, நோன்பு அல்லாத காலத்திலும் இவை தண்டனைக்குரிய குற்றங்களே. “யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித் திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்.

நோன்பின்போது வீண் வம்பை நாம் தவிர்க்க வேண்டும். வீண் வம்புக்கு யாரேனும் வந்தால், அதைத் தவிர்த்துச் செல்வது நல்லது. அதையும் மீறி நோன்பின்போது யாரேனும் சண்டைக்கு வந்தாலோ, திட்டினாலோ நான் நோன்பாளி என்று கூறி ஒதுங்கிச் சென்றுவிடுங்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) கூறும் வழி.

காக்கும் அரண்

புறப் பார்வைக்குக் கடுமையான தண்டனையைப் போலத் தோற்றமளிக்கும் இந்த நோன்பு இறைவன் நமக்கு அளித்திருக்கும் கொடை. அது உடலை வலுப்படுத்தும்; உள்ளத்தைச் செழுமைப்படுத்தும். முக்கியமாக, ஏழை, எளிய மனிதரின் பசியையும் துயரையும் நமக்கு உணர்த்தி, அவர்களின் மீது உண்மையான பரிவை ஏற்படுத்தி, மனித நல்லியல்பு களை நம்முள் செழிக்கவைக்கும். நோன்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் பயிற்சியும் அனுபவமும், பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கைகளிலி ருந்தும் உங்களை வாழ்நாள் முழுவதும் தடுக்கும்; பாதுகாக்கும்.

சந்தேகங்களும் விளக்கங்களும்


1. நோன்பின்போது ஊசி போடலாமா?

உடல் நிலையைக் கருத்தில்கொண்டு ஊசி போடுவது அனுமதிக்கப்படுகிறது. ஆனால், உடம்புக்கு உத்வேகம் அளிக்கும் குளுக்கோஸ் போன்றவற்றுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

2. வாந்தியெடுத்தால் நோன்பு முறிந்துவிடுமா?

தானாக வாந்தி வருவது நோன்பை முறிக்காது, ஆனால், வேண்டுமென்றே ஒருவர் வாந்தி எடுத்தால், அது அவர் நோன்பை முறித்துவிடும்.

3. நோன்பின்போது மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

நோன்பாளி மறந்து உண்டுவிட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதற்குப் பின்னரும் நோன்பைத் தொடர்ந்து, நிறைவுசெய்ய வேண்டும்.

4. நோன்பை எதைக் கொண்டு திறப்பது?

பேரீச்சை பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறக்கலாம்.

நோன்பு அட்டவணை
(சென்னை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x