Last Updated : 29 Mar, 2022 10:30 AM

 

Published : 29 Mar 2022 10:30 AM
Last Updated : 29 Mar 2022 10:30 AM

இளமைக் களம் | தலைநகரின் தெருப் பாடகர்கள்!

சென்னையில் பாண்டி பஜார், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் அந்த இசைக் குழுவைப் பார்த்திருக்கலாம். வார விடுமுறை மாலை வேளையிலோ, முக்கியமான நாட்களிலோ பொதுமக்கள் கூடும்போது அந்த இசைக் குழுவைச் சேர்ந்த இளம் பெண்களும் இளைஞர்களும் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. ‘ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை’ என்கிற இசைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

மேற்கத்திய நாடுகளில் மக்கள் கூடும் வீதிகளில் ஓரமாக நின்று இசைக் குழுவினர் பாடல்களைப் பாடும் நிகழ்வுகள் நடப்பது சர்வ சாதாரணம். ஆனால், மக்கள் திரளாகக் கூடும் சென்னை போன்ற பெருநகரில் பொது இடங்களில் பாடல்களைப் பாடி பார்வையாளர்களைக் கவர்வது எளிதல்ல. ஆனால், சென்னையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொது இடங்களில் பாடிப் பார்வையாளர்களைக் கவர்ந்துவருகிறது இந்த இசைக் குழு. சென்னையில் கடந்த 2017ஆம் ஆண்டில் பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஒரு காபி ஷாப்பில் ஐந்து பேர் சேர்ந்து தொடங்கியதுதான் இந்த இசைக் குழு.

தொடங்கியது பயணம்

சென்னையில் இதுபோன்ற தெருவோர இசைக் குழுவை உருவாக்கும் சிந்தனை எப்படி வந்தது? ‘ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை’ குழுவின் நிறுவனர் செந்தில் ராஜ் நம்மிடம் பேசினார். “பெங்களூருவில் பணியில் இருந்தபோது நண்பர்களோடு சென்று ஊட்டி ரிசார்ட்டில் தங்கியிருந்தோம். அப்போது பாட்டுப் பாடி பொழுதைக் கழித்தோம். சென்னையிலிருந்து வந்திருந்த குழுவினரும் எங்களோடு சேர்ந்து பாடினார்கள். அங்கிருந்து புறப்பட்டபோது சென்னையில் சந்தித்துப் பேசிக்கொள்வோம் என்று செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டோம். அதன்படி சென்னை பெசன்ட் நகரில் உள்ள காபி ஷாப்பில் நாங்கள் சந்தித்தோம். ஐந்து நண்பர்களுடன் சேர்ந்துதான் பாடல்களைப் பாடத் தொடங்கினோம். இங்கிருந்துதான் ‘ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை’யின் பயணம் தொடங்கியது. எங்களுடைய பாடலைக் கேட்ட காபி ஷாப் வாடிக்கையாளர்கள், ‘பாடல்களைக் கேட்டால் மனம் லேசாகிறது, சந்தோஷமாக உணர்கிறோம்’ என்று பாராட்டினார்கள். இரண்டு ஆண்டுகள் அங்கேதான் பாடல்களை பாடிக்கொண்டிருந்தோம். பிறகுதான் சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் பாடல்களைப் பாடுவது என்று முடிவெடுத்தோம்” என்கிறார் செந்தில் ராஜ்.

செந்தில் ராஜ்

ஐந்திலிருந்து 815 வரை

தொடக்கத்தில் ஐந்து பேருடன் தொடங்கிய இந்த இசைக் குழுவின் பாடல்களைப் பொதுவெளியில் கேட்ட இசை ஆர்வலர்கள் இவர்களோடு இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அப்படி விரும்பி வந்தவர்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு இந்த இசைக் குழுவின் பயணம் தொடர்கிறது. இதுவரை இந்த இசைக் குழுவில் 815 பேர் இணைந்திருக்கிறார்கள். இவர்களில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள்தான் அதிகம். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப பொறியாளர்கள் எனப் பலரும் இந்த இசைக் குழுவில் அடக்கம். பொதுவாக மாலை வேளையில் இரண்டு மணி நேரம் வரை இசை நிகழ்ச்சியை நடத்துவது இவர்களுடைய வழக்கம். ஆனால், கடந்த மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினத்தையொட்டி 10 - 11 மணி நேரம் வரை தொடர்ந்து இசை நிகழ்ச்சியை பாண்டி பஜாரில் நடத்தியிருக்கிறார்கள். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை மட்டுமல்லாமல், அங்கு கூடியிருப்போர் கேட்ட பாடல்களையும் இவர்கள் சலிக்காமல் பாடினார்கள்.

இலவச இசை மழை

இசைக் குழுவுக்கு ஆகும் செலவை எப்படிச் சமாளிக்கிறார்கள்? “இது முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி. இசைக் குழு சார்பாக மைக் செட்டுகளை மட்டும்தான் வைத்திருக்கிறோம். இந்த இசைக் குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களுடைய சொந்த இசைக் கருவிகளைக் கொண்டு வந்துதான் வாசிக்கிறார்கள். வீட்டிலிருந்து வருவதற்கான செலவைக்கூட அவர்களேதான் பார்த்துக்கொள்கிறார்கள். இசை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பார்வையாளர்கள் அன்பளிப்பையோ பரிசையோ வழங்கினால்கூடப் பெற்றுக்கொள்வதில்லை. அதை முன்கூட்டியே நாங்கள் அறிவித்துவிடுவோம். இதைத் தாண்டி இல்ல நிகழ்ச்சிகளுக்காக எங்களைப் பாட அழைப்பதுண்டு. அதேபோல ஹோட்டல்களுக்கும் அழைப்பதுண்டு. அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் கட்டணத்தை பெற்றுக்கொள்வோம். அதை இசைக் குழுவின் செலவுக்கு வைத்துக்கொள்வோம்” என்கிறார் செந்தில் ராஜ். இவற்றைத் தவிர்த்து இக்குழு சொந்தமாகத் தயாரித்து எட்டுப் பாடல்கள் அடங்கிய தொகுப்பையும் வெளியிட்டுள்ளது. கரோனா காலத்தில் இசை நிகழ்ச்சியையே விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அரசு நிர்வாகத்துடன் சேர்ந்தும் நடத்தியிருக்கிறார்கள்.

சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டுவரும் இந்த இசைக் குழுவுக்கு கோவை, மதுரை போன்ற நகரங்களில் இருந்தும் அழைப்பு வருவதாகச் சொல்கிறார்கள். மேலும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குச் சென்று பொது இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்த ‘ஆன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் சென்னை’ குழு முடிவு செய்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x