Published : 25 Mar 2022 07:20 AM
Last Updated : 25 Mar 2022 07:20 AM

திரைப் பார்வை: தி காஷ்மீர் ஃபைல்ஸ் - மறைக்கப்பட்ட துயரம்!

சுதந்திர இந்திய வரலாற்றின் பெருந் துயரங்களில் ஒன்று காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றம். 1990-களின் தொடக்கத்தில், தீவிரவாதிகள், பிரிவினை வாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் காரணமாக, அங்கே சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த காஷ்மீரி பண்டிட்கள் எனப்படும் இந்துக்கள், கூட்டம்கூட்டமாகத் தாய் மண்ணைவிட்டு வெளியேறினர்.

அச்சமயத்தில் கேள்விகளின்றி நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதும் நடந்தன. குடும்பங்கள் வீடு புகுந்து சூறையாடப்பட்டதுடன், குழந்தைகள் முதல் முதியோர்வரை ஒருவரையும் விட்டு வைக்காத பிரிவினைவாத வன்முறையை முன்வைத்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்னும் தலைப்பில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீளும் சினிமாவாக்கியிருக்கிறார் விவேக் அக்னிஹோத்ரி.

பதைபதைக்க வைக்கும் வன்முறை

காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் உள்ளிட்டோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் கூறியிருக்கும் இந்தப் படம், பண்டிட்களின் துயரத்தைப் பொதுச் சமூகத்துக்குக் கடத்தும் நோக்கத்தை நிறைவு செய்திருக்கிறது.

பிரிவினைவாத வன்முறையில் தன் மகனைப் பறிகொடுத்து, தாய் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகும் தன் சமூகத்துக்கான நியாயத்துக்காக ஒற்றை ஆளாகப் போராடும் புஷ்கர் நாத் பண்டிட் ஆக அனுபம் கேர், அவருடைய மருமகளாக பாஷா சும்ப்லி, காஷ்மீரில் பண்டிட்களைப் பாதுகாக்க முயன்று, அரசுகளின் ஒத்துழையாமையால் கையறு நிலையில் விடப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் அபாரமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். வன்முறையைப் பதிவு செய்வதில் சமரசம் செய்துகொள்ளாத படமாக்கம், அழுத்தமான வசனங்கள் ஆகியவற்றின் துணைகொண்டு விவேக் அக்னிஹோத்ரி இதைச் சாதித்திருக்கிறார். பண்டிட்கள் வெளியேற்றத்துக்கு வித்திட்ட வன்முறை, பாதுகாப்பு முகாம்களில் அவர்கள் சந்தித்த இன்னல்கள், அரசின் பாராமுகம். அந்த முகாம்களிலும் இந்திய ராணுவ வேடம் தரித்துவந்த தீவிரவாதிகளின் கொடும் தாக்குதலுக்கு அப்பாவி பண்டிட்கள் பலியானது என அனைத்து கொடுமைகளும் பதைபதைக்க வைக்கும் காட்சிகளாகப் படமாக்கப்பட்டுள்ளன.

விமர்சனங்களும் மௌனங்களும்

ஆனால் இந்த வன்முறைக்குக் காரணமாகவும் அதன் பின்னணியாகவும் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் காஷ்மீரில் பெரும்பான்மையினராகவும் இந்தியாவின் பிற பகுதிகளில் சிறுபான்மை யினராகவும் வாழும் இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக படம் ஒற்றைச் சார்புடன் இருக்கிறது. காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்கள் மீதான வெறுப்பை சுமக்கிறவர்களாக, அவர்கள் மீதான வன்முறைக்குத் துணைபோகிறவர்களாக, இஸ்லாமைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளின் ஆதரவாளர்களாக காண்பிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியச் சிறுவர்கள்கூட மதவெறியர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சண்டையில் பலியாகும் அப்பாவி இஸ்லாமியர்கள் என்னும் ஒரு தரப்பு நீண்டகாலமாக இருந்து வந்திருப்பதை இந்தப் படம் தொட்டுக் காட்டவில்லை. அதேபோல், நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்று சித்தரிக்கப்படும் ஒரு பல்கலைக்கழகம் பிரிவினைவாதிகளின் கூடாரமாகக் காண்பிக்கப்பட்டுள்ளதைத் தவிர்த்திருக்கலாம்.

பண்டிட்கள் பலரைக் கொன்ற ஃபரூக் மாலிக் பிட்டா, அப்போதைய காஷ்மீர் முதல்வர் ஃபாருக் அப்துல்லாவை அவருடைய வீட்டிலேயே சென்று சந்திப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. சமாதான விரும்பிகளாக அறியப்படும் ஜவாஹர்லால் நேரு, அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்கள் மீது மறைமுகமான தாக்குதல்கள் உள்ளன.

காஷ்மீருக்கான சுய அதிகாரத்தை குறைத்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழே கொண்டுவர வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பதற்கு, இந்தப் படத்தின் மூலம் வெளிச்சம்பெறும் கொடிய காட்சிகளும் ஒருவகையில் நியாயம் கற்பிக்கின்றன. பண்டிட்களின் மிகக் கொடூரமான படுகொலைகள் குறித்து, அந்த நேரத்தில் அங்கே ஆட்சியிலிருந்தவர்களும் வாய்திறக்கவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விவரிக்கும் இப்படம் குறித்தும் நேர்மறையாகவோ, எதிராகவோ எந்தக் கருத்தையும் இப்போதும் தெரிவிக்கவில்லை என்பதை, இந்தப் படம் உருவாக்கியிருக்கும் அதிர்வலைகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.

தங்களுக்கு எதிரானவர்களை விமர்சித்துக் கலைப் படைப்புகள் வரும்போதெல்லாம், அவற்றைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள், தங்களுக்கு எதிரான, அசௌகரியமான உண்மைகளைப் பேசும் படைப்புகளைக் கண்டுகொள்ளாமல் கள்ள மௌனத்துடன் கடந்துபோவது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.

தெளிவைத் தராத முடிவு

விவரம் தெரியாத வயதில் பண்டிட்கள் மீதான வன்முறைக்கு தன் பெற்றோரையும் சகோதரனையும் இழந்த இன்றைய இளைஞனாக வருகிறான் கிருஷ்ணா. இவன், பண்டிட்கள் வெளியேற்றம் குறித்து இரண்டு தரப்புகளின் கதையாடல்களைக் கேட்கிறான். இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாமல் இருவேறு தரப்புகளின் வாதங்களால் குழம்பிய நிலையில் உள்ள இன்றைய இந்திய இளைஞர்களின் பிரதிநிதியாக இந்தக் கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதே நேரம் வாட்ஸப்பில் வருவதையெல்லாம் அப்படியே நம்பிவிடும் இளைஞர்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறான். இந்தக் கதாபாத்திரம் உண்மையைத் தெரிந்துகொண்டு தெளிவடையும் பயணம், பார்வை யாளர்களுக்கும் அந்தத் தெளிவை வழங்குவதாக திரைக்கதை அமைந்திருக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தாண்டி பெரிதும் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் துயரத்துக்கு, பரவலான கவனத்தை பெற்றுத் தந்துவிடுவதில் படம் வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் தங்களுடைய தாய்மண்ணுக்கு திரும்ப முடியாத சூழலில் இருக்கும் காஷ்மீர் பண்டிட்களுக்கும் அவர்களின் வம்சாவளியினருக்கும் இந்தத் திரைப்படம் தந்துள்ள உணர்வுபூர்வமான ஆறுதலைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பொதுவாகவே, வரலாற்றின் ரத்தக்கறை படிந்த உண்மைச் சம்பவங்களையும் இழைக்கப்பட்ட அநீதிகளையும் அடிபடையாகக் கொண்டு கலைப் படைப்புகள் வெளியாகும்போது, அது குறித்த ஆரோக்கியமான விமர்சனங்கள் இரு தரப்பிலும் எழ வேண்டியது முக்கியம். ஆனால், ஒரு தரப்பு அதை முழுமையாக ஆதரிப்பதும் ஒரு தரப்பு முழுமையாக எதிர்ப்பதுமான நிலை நம் நடுவே நிலவுவது, அக்கலைப் படைப்புகளின் உண்மையான தன்மையை மக்கள் புரிந்துகொள்ளவிடாமல் செய்துவிடுகிறது.

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x