Published : 20 Mar 2022 07:15 AM
Last Updated : 20 Mar 2022 07:15 AM

முகம் நூறு | ஊருக்காக உழைப்பதே உயர்வு

அரை நூற்றாண்டுக்கும் மேல் சமூகப் பணி செய்துவருகிறவர்களிடம் உரையாடுவது நாம் கடந்துவந்த பாதையை அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் சிலநேரம் அமையக்கூடும். குழந்தைகள், பெண்கள் நலன் சார்ந்து செயல்பட்டுவரும் கிரிஜா குமார்பாபுவுடன் பேசுவதும் அப்படித்தான். தன் நினைவின் அடுக்குகளில் இருந்து அவர் பகிர்ந்துகொண்டவை எல்லாம் இன்று நம் குழந்தைகள் அடைந்திருக்கும் நிலை எளிதில் கிடைத்ததல்ல என்பதை உணர்த்துகின்றன. கிரிஜாவின் பொதுநலப் பணியை அங்கீகரிக்கும்விதமாக அண்மையில் தமிழக அரசு அவருக்கு ‘அவ்வையார்’ விருது வழங்கிக் கவுரவித்தது.

ஆறு அண்ணன்கள், மூன்று அக்காக்கள் கொண்ட குடும்பத்தின் கடைக்குட்டி இவர். அப்பா ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பதால் படிப்புக்குத் தடையில்லை. கல்லூரியில் பொருளாதாரப் படிப்பை நிறைவு செய்தவர், சமூகப் பணி சார்ந்த மேற்படிப்பைத் (MSW) தேர்ந்தெடுத்தார். பி.எட்., படிக்கலாமே என்று அண்ணனும், கல்ச்சுரல் அகாடமியில் சேரச்சொல்லி மற்றவர்களும் பரிந்துரைக்க, கிரிஜா தன் முடிவில் உறுதியாக இருந்தார். பொருளாதாரம் படித்தபோது தான் சந்தித்த பேராரிசியர்கள் இருவர்தான் சமூகப் பணி மீதான ஆர்வத்தைத் தன்னுள் விதைத்ததாக கிரிஜா சொல்கிறார்.

இடைவிடாத பயணம்

படிப்பு முடிந்ததும் சென்னை மருத்துவக் கல்லூரியின் ‘செயற்கைக் கால் பொருத்தும் திட்ட’த்தின்கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நீரிழிவு, விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு கை, கால் நீக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனையும் மறுவாழ்வுப் பயிற்சியும் அளிக்க வேண்டும். எழுபதுகளில் கல்லூரிப் படிப்பை முடித்த உடனே கிடைத்த அந்த வாய்ப்பு மிக சவாலானது என்கிறபோதும், கிரிஜா அதில் விருப்பத்தோடு ஈடுபட்டார். திருமணத்துக்குப் பிந்தைய மூன்றரை ஆண்டுகள் மட்டுமே அவர் தன் பொதுப் பணியிலிருந்து விலகியிருந்தார். அதன் பிறகு தொடங்கிய ஓட்டம் இன்றுவரை ஓயவில்லை.

இந்தியக் குழந்தைகள் நலச் சங்கத்தில் இணைந்து ஓய்வுபெறும்வரை கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் அங்கே பணியாற்றியவர் இப்போதும் ஆலோசகராகத் தொடர்கிறார். பெண்கள் - குழந்தைகள் கடத்தல், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் குழு எனப் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியபோதும் குழந்தைகள் உரிமை, நலனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். இவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர், அதிகாரிகள், பொதுநலத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்குப் பயிற்சி அளித்துள்ளார். சிறார்/குழந்தைகள் நலக் குழுவில் இணைந்து செயல்பட்டார். இளைஞர் நீதிக் குழுமத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சமூகவியல் உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஆட்டைவிட மலிவானதா?

ஒரு காலத்தில் தமிழகத்தை உலுக்கிய பெண் சிசுக்கொலை சம்பவங்களின்போது அது சார்ந்தும் இவர் பணியாற்றியுள்ளார்.

“அப்போது உசிலம்பட்டியில் ஒரு சிறப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டோம். பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்காகப் பெண்களுக்குப் பயிற்சியளித்தோம். ஏராளமான குடும்பங்களைச் சந்தித்து ஆலோசனை வழங்கினோம். குறிப்பாக, மாமியார்களுக்கு. ஒரு வீட்டில் ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்து மூன்றாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதை அதிக ஆபத்து கொண்டதாக அறிவித்துத் தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும்படி தன்னார்வலர்களை நியமித்தோம்” என்று சொல்லும் கிரிஜா, இன்று பெண் சிசுக்கொலை குறைந்திருந்தாலும், தொழில்நுட்ப உதவியோடு அது கருக்கொலையாக மாறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “நம் சமூகத்தில் பெண் வெறுப்பு அவ்வளவு எளிதாக மறையாது போல. உசிலம்பட்டியில் இருந்தபோது பெண் குழந்தை பெற்றுக்கொள்கிறவர்களுக்கு ஆடு தருவதாக ஒரு திட்டத்தை அறிவித்தோம். அது பல பெண் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், வாழ்க்கையில் பெரிய படிப்பினையாகவும் அது அமைந்தது. ஒரு ஆட்டின் உயிரைவிடப் பெண் குழந்தையின் உயிர் இங்கே மலிவாக இருக்கிறது” என்று கசந்த புன்னகையை உதிர்த்தார் கிரிஜா.

குழந்தைத் தொழிலாளர் மீட்பு

அரசுடனும் பொது நல அமைப்புகளோடும் இணைந்து குழந்தைத் தொழிலாளர் மீட்புப் பணிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். “வில்லிப் புத்தூர், வேலூர் மாவட்டங்களில் பட்டாசுத் தொழில், தீப்பெட்டி ஒட்டுதல், பீடி சுற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுப் பள்ளியில் சேர்த்தோம். சென்னையில் தெருவோரக் குழந்தைகளுக்குத் தொழிற்கல்வி பயிற்றுவித்தோம், அவர்களைக் குடும்பங்களோடு இணைத்தோம். அந்தக் காலகட்டத்தில்தான் தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டமும் உருவாக்கப்பட்டது. எங்களுடைய மாலை நேர வகுப்புகளில் படித்த சிறுவர், சிறுமியர் இன்று பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவருகின்றனர்” என்று பெருமிதத்துடன் சொல்லும் கிரிஜா, குழந்தைகள் மீதான வன்முறை குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் இன்னும் தெளிவு தேவை என்கிறார்.

“ஆதாரம் இல்லை என்பதால் அந்தக் காலத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறைவுன்னு சொல்ல முடியாது. எல்லாக் காலத்திலும் குழந்தைகளுக்கு எல்லாவிதமான நெருக்கடிகளும் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்துப் பேசுவதையே கலாச்சாரத்துக்கு எதிரான செயலாகத்தானே பலரும் புரிந்துகொள்கிறார்கள். குடும்ப கௌரவம், நான்கு பேர் என்று நம் வாயைக் கட்டிப்போட எவ்வளவோ இருக்கிறதே. குடும்பம், கல்வி நிலையம், சமூகம் ஆகிய மூன்று இடங்களிலுமே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைத்தான் அன்றாடம் வெளியாகும் செய்திகள் உணர்த்துகின்றன. ஆனால், அதையெல்லாம் மீறி குழந்தைகளைப் பாதுகாத்தால்தான் வலுவான இந்தியா உருவாகும். தற்போது மிகச் சிறப்பான பணியைச் செய்துவரும் 1098 திட்டத்தின் முன்னோடியாக சென்னையில் ‘கிரைசிஸ் இண்டர்வென்ஷன் சென்டர்’ என்கிற அமைப்பை இந்தியக் குழந்தைகள் நலச் சங்கம் சார்பில் உருவாக்கி, ஏராளமான குழந்தைகளைக் கொடுமைகளில் இருந்து மீட்டோம். தற்போது சென்னையிலும் கடலூரிலும் ‘சைல்டு லைன்’ திட்டம் செயல்பாட்டில் உள்ளது” என்கிறார் கிரிஜா.

ஏன் பாரபட்சம்?

சிறார் பாலியல் குற்றங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் பாரபட்சத்தையும் இவர் கேள்விக்குள்ளாக்குகிறார். “18 வயதுக்குட்பட்ட ஆணும் பெண்ணும் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறுகிற நிகழ்வுகளில் இருவரும் விருப்பத்தின்பேரில்தான் சென்றிருப்பார்கள். ஆனால், பெரும்பாலான வழக்குகளில் பெண் தன் குடும்பத்தினருடன் செல்வதாகச் சொல்ல, அந்தச் சிறுவன் மீது போக்ஸோ சட்டம் பாய்கிறது. இருவரும் உடன்பட்டு நடந்த நிகழ்வில் ஒருவர் பாதிக்கப்பட்டவராகவும் ஒருவர் குற்றவாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். நுண்ணுணர்வோடு அணுக வேண்டியவற்றைச் சட்டரீதியாக அணுகும் போது ஏற்படுகிற சிக்கல் இது. இதைச் சீராக்க ஆதாரப்பூர்வமான ஆய்வுகளும் கள ஆய்வுகளும் அவசியம்” என்று சொல்லும் கிரிஜா, பெருகிவரும் சிறார் குற்றங்களுக்குக் காட்சி ஊடகமும் போதைப்பழக்கமும்கூடக் காரணங்கள் என்கிறார்.

“உலக அளவில் நடைபெறும் குற்றங்களில் பெண்கள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, போதைப் பழக்கத்துக்குக் குழந்தைகள் உள்ளாக்கப்படுதல் இவை மூன்றும் முக்கியமானவை. சிறு குழந்தைகள்கூடப் போதைப்பழக்கத்துக்கு ஆட்படுகிறார்கள். 18 வயதுக்குக் கீழே எந்தவிதமான குற்றச் செயலில் ஈடுபட்டாலும் பெரிய அளவில் தண்டனை இருக்காது என்று திரைப்படங்களில் முன்னணி நாயகர்கள் சொல்வதுபோல் காட்சி அமைக்கிறார்கள். இதைப் பார்க்கும் குழந்தைகள் தாங்களும் அப்படிச் செய்துபார்க்க முயல்வார்கள்தானே. இவையெல்லாம் வன்முறை காட்சிக்குள் வராதா? தணிக்கைக் குழு இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறது?” என்று கேட்கிறார் கிரிஜா.

பார்வையில் வேண்டும் மாற்றம்

தவறிழைத்த குழந்தைகள் குறித்த சமூகத்தின் பார்வையும் மாற வேண்டும் என்று சொல்லும் கிரிஜா, ‘சிறார் குற்றவாளி’ என்கிற பதத்தைப் பயன்படுத்துவதே தவறு என்கிறார். “அரசாங்கமே சில சொற்களைத் தடைசெய்துவிட்ட பிறகும் நாம் மாறவில்லை. முன்பு மைனர் ஜெயில் என்று இருந்ததை இன்று சிறப்பு இல்லங்கள் (Special Home) என்று சட்டப்படி மாற்றியாகிவிட்டது. இப்போதும் நாம் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருந்தால் எப்படி?” என்று கேட்கும் கிரிஜா, குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு குறித்துப் பல்வேறு புத்தகக் கையேடுகளை உருவாக்கியிருக்கிறார் (http://iccwtn.org/uploads/publication_gallery/ChildProtection.pdf). இந்தியக் குழந்தைகள் நலச் சங்கம், மாநில அரசு, யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து இவர் உருவாக்கியிருக்கும் இவற்றை இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். குழந்தைகள் உரிமை குறித்தும் அதற்கான களப்பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு இவை வழிகாட்டியாகத் திகழும். கிரிஜாவுடன் பேசப் பேச குழந்தைளை இந்தச் சமூகமும் குடும்பங்களும் இன்னும் கரிசனத்துடனும் பொறுப்புணர்வோடும் நடத்த வேண்டும் என்று தோன்றுகிறது. குழந்தைகளின் உலகத்தை அற்புதமானதாக மாற்ற கிரிஜா போன்றவர்கள் நமக்குத் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x