Last Updated : 26 Apr, 2016 12:38 PM

 

Published : 26 Apr 2016 12:38 PM
Last Updated : 26 Apr 2016 12:38 PM

ஆங்கிலம் அறிவோமே - 107: இப்படி அபசகுனமாகப் பேசலாமா?

“ஒரு வாசகர், Active voice, Passive voice என்று இரண்டு வகைகள் விதம் எதற்கு? Active voice மட்டுமே போதாதோ?’’ என்று மனம் நொந்து, வெதும்பி, இன்னலுற்று எழுதியிருக்கிறார். அவர் ஒரு பள்ளி மாணவர் என்பதை அறியும்போது கேள்வியின் பின்னணி விளங்குகிறது.

(Rama killed Ravana என்பது active voice என்பதும், Ravana was killed by Rama என்பது Passive voice என்றும் நம் மனதில் பதிந்திருக்குமே!).

ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக passive voice தேவைப்படும் என்று எனக்குப் படுகிறது. ஒன்றைச் செய்தது யார் என்று தெரியாதபோதும் அதைத் தெரிவிக்க விரும்பாதபோதும் passive voice லட்டு மாதிரிக் கைகொடுக்கும். இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்.

Mistakes were made.

The jar was broken.

*****

“இந்த முறை தமிழகத்தில் Anti-incumbency கிடையாது” என்று தொலைக்காட்சியில் ஒரு அரசியல் பிரமுகர் கூறினார். Incumbency என்றால் என்ன? Incumbent என்றால் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒருவர். Anti-incumbency என்றால் தற்போதைய ஆட்சிக்கு ஏதிரான மனப்போக்கு. (இப்போது அனைவருக்குமே தெரிந்திருக்கும் தொலைக்காட்சியில் அப்படிக் கூறியவரின் கட்சி எது என்று).

தேர்தல் சீஸன் என்பதால் வேறு சில வினாக்களும் தேர்தல் தொடர்பாகவே அமைந்துள்ளன.

வட இந்தியத் தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தில் ஒரு தலைவர் “Ours will be a Titanic invasion” என்று கூறியிருக்கிறார். இப்படி அபசகுனமாகப் பேசலாமா?

நண்பரே, Titanic திரைப்படத்தை மனதில் கொண்டு இப்படி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. Titanic என்றால் மிக அதிகமான பலம் கொண்டது என்று அர்த்தம். இந்த அர்த்தத்தின் காரணமாகத்தான் அந்தக் கப்பலுக்கு Titanic என்று பெயர் வைக்கப்பட்டது.

She met bevy of leaders என்கிறது ஒரு செய்தித் தலைப்பு. Bevy என்றால்?

நிறையப் பேர் என்ற அர்த்தம். He was surrounded by a bevy of beautiful girls. (தப்பிச் சென்றவரின் நினைவு வருகிறதா?)

Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறுகிறார்களே. Sedition என்பது தேசத் துரோகமா?

Sedition என்றால் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்யும்படி மக்களைத் தூண்டுவது. இப்படித் தூண்டுவதை பேச்சின் மூலமாகவும் செய்யலாம், செயல்பாடுகளின் மூலமும் நடத்தலாம். Sedition என்பதற்கு இணையான சொற்களாக incitement, provocation போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அப்படியானால் தேசத் துரோகம் என்பதற்கான ஆங்கில வார்த்தை எது? Treason.

ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தால் it will be bedlam என்று ஒரு தலைவர் கூறுகிறார். அவர் எதை உணர்த்துகிறார்?

மிகவும் குழப்பமான (பைத்தியக்காரத்தனமான என்றும் கூறலாம்). ஒரு நிலையைத்தான் bedlam என்பார்கள்.

“Success has gone over his head’’ என்று ஓர் ஆட்சியாளரைப் பற்றி எதிரணியைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டதாக ஆங்கில நாளிதழில் படித்தேன். ஆட்சியாளருக்கு வெற்றியால் தலைக்கனம் ஏறிவிட்டது என்பதைத்தானே குறிப்பிடுகிறார்?

அந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்த நினைத்திருந்தால் இப்படிக் கூறியிருக்கக் கூடாது. ‘Went over his head’ என்றால் அது புரிந்து கொள்ளாத நிலையை உணர்த்துகிறது. The maths lesson went over his head.

*****

சில இதழ்களுக்கு முன் piece of cake, bar of soap என்றெல்லாம் பட்டியலிட்டிருந்தோம். உணர்ச்சிகளுக்கும்கூட இப்படி அளவீடு உண்டு. சந்தேகக் கீற்று என்கிறோம். மகிழ்ச்சி அலை என்கிறோம். ஆங்கிலத்திலும் உண்டு.

*****

கடிதங்களில் apropos என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது காலாவதியான பழக்கமாகிவிட்டது. ஆனால் இந்தக் காலத்திலும் சிலர் அதைப் பயன்படுத்துவதுடன் “இதற்குக்கூட அர்த்தம் தெரியாதா?” என்று கர்வம் பொங்க உங்களை நோக்கி ஏளனப் பார்வையை வீச வாய்ப்பு உண்டு.

கடித இலக்கியத்தில் நமக்கு இரண்டாவதாக மிகவும் பரிச்சயமான with reference to என்பதற்கு பதிலாகத்தான் apropos என்பது பயன்படுத்தப்படுகிறது (நமக்குப் பழகிப் போன கடிதப் பயன்பாடுகளில் முதலிடம் பெறுவது As I am suffering from என்பது சொல்லாமலேயே விளங்கியிருக்குமே).

*****

“தாராளமாக என்றால் generously, அப்படியானால் ‘தாராளமா எடுத்துக்கோ’ என்றால் ‘Take generously’ என்பது சரிதானே?” என்று கேட்கிறார் ஒரு வாசகர்.

பேனாவை எடுத்துக்கட்டுமா? உன் ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டுப் போகட்டுமா? என்பதுபோன்ற

கேள்விகளுக்கு பதிலாகத்தான் “தாராளமாக எடுத்துக்கோ” என்கிறோம். ஆனால், இந்த வாக்கியத்தில் உள்ள ‘தாராளமாக’ என்பதற்கு ‘generously’ என்பது அர்த்தம் அல்ல. ‘நீங்கள் எடுத்துக்கொள்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லை’ என்றே அர்த்தம். ‘அவர் ஏழைகளுக்குத் தாராளமாகப் பண உதவி செய்வார்’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘தாராளமாக’ என்பதற்குத்தான் ‘generously’ என்று அர்த்தம். ‘தாராளமாக’ என்ற பயன்பாட்டுக்கு உள்ள இரண்டுவித அர்த்தத்தால் ஏற்பட்ட புரிதல் குழப்பம்தான் வாசகரின் கேள்விக்குக் காரணம்.

தாராளம் என்பது கொடுப்பவரின் மனநிலை. எடுத்துக்கொள்பவரின் மனநிலை அல்ல.

GENEROUS என்றால் எதிர்பார்ப்பைவிட அல்லது தேவையைவிட அதிக அளவில் அளிக்கத்தயாரான மனநிலை. பணம் தொடர்பாகத்தான் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

‘குறைந்தது நான்கு எழுத்துகள் கொண்ட, vowels இல்லாத ஆங்கில வார்த்தை எதுவும் எனக்கு நினைவுக்கு வரவில்லை’ என்று இரு வாரங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தேன். “அதனாலென்ன எங்களுக்கு நினைவுக்கு வருகிறேதே” என்பதுபோல் hymn, nymph, gypsy, myth, lynch என்று அடுக்கியிருக்கிறார்கள் பல வாசகர்கள். சபாஷ்.

சிப்ஸ்

l Won’t என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. Wont என்று ஒரு வார்த்தை உண்டா?

வழக்கமான ஒரு நடத்தையை (Customary behaviour) அப்படிக் குறிப்பிடுவார்கள்.

l Browbeat என்றால் என்ன?

சுற்றி வளைத்து. Do not browbeat என்றால் “நேரே விஷயத்துக்கு வா”.

l Preferable என்பதன் ஒப்பீட்டு வார்த்தை more preferable-ஆ?

இல்லை. Preferable, round, impossible, entire, empty, perfect, eternal, parallel, circular போன்ற வார்த்தைகளை comparative அல்லது superlative ஆக நாம் விவரிப்பதில்லை.

ஓவியம்: வெங்கி

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x