Published : 16 Apr 2016 01:22 PM
Last Updated : 16 Apr 2016 01:22 PM

பதின் பருவம் புதிர் பருவமா? - எல்லா பக்கங்களிலும் ஆபத்து

வெளி விளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் கேம்ஸ் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச் சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் கொல்வது, சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

சைபர் புல்லியிங் (Cyber Bullying)

புல்லியிங் (Bullying) என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பலவீனமானவனைக் கொடுமைப்படுத்துதல்’ என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது போன்றவை மட்டும்தான் புல்லியிங் என முன்பு கருதப்பட்டது. இந்த வகையான நடவடிக்கைகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான். ஆனால் சமீபகாலமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மற்றவர்களை மிரட்டுவதற்கு எளிதில் பயன்படுத்தப்படும் கருவியாகிவிட்டன.

தனக்குப் பிடிக்காதவர்களைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவது, ஆபாசப் படங்களை வெளியிடுவது, பிறரைப் புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் ‘சைபர் புல்லியிங்’ என்கிறார்கள். நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40% இளைஞர்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது.

அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சைபர் செக்ஸ்

ரகசியமாகச் செய்ய முடிவது, வெளியில் சொல்ல முடியாத கற்பனைகளைச் ‘சாட் ரூம்’ என்ற பகுதியில் எதிர்பாலருடன் பகிர்ந்துகொள்வது போன்றவை எந்த வித பதற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எங்கும் எப்போது வேண்டுமானாலும் கிடைப்பது ஆகிய தன்மைகளே சைபர் செக்ஸில் வளர்இளம் பருவத்தினர் ஈடுபாடு காட்டுவதற்குக் காரணம். இணைய யுகத்துக்கு முன்பு ஒரு சில பெட்டிக்கடைகள், ஆர்வக்கோளாறு கொண்ட அண்ணன்களிடம் மட்டுமே கிடைத்துவந்த மஞ்சள் புத்தகங்கள், இப்போது வீட்டு அறைக்குள்ளாகவே வந்துவிடுகின்றன.

குறுந்தகவல்கள் மூலமாகப் பாலியல் விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், வெப் கேமராக்கள் மூலமாகத் தொடர்புகொள்ளுதல், ஆபாசக் காட்சிகள் மற்றும் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்தல் உட்படப் பல வகைகளில் சைபர் செக்ஸில் வளர்இளம் பருவத்தினர் ஈடுபடுகின்றனர். சில நேரம் மற்ற வலைதள பயன்பாடுகளைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் இவர்கள், செக்ஸ் சம்பந்தப்பட்ட வலைதளப் பகுதிகளுக்கு அடிமையாகும் அளவுக்கு ஈடுபட வாய்ப்புண்டு. இதனால் அவர்களுடைய படிப்பு, தூக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அதிகக் குற்றஉணர்வுக்கு ஆளாகித் தற்கொலைவரை சென்றுவிடுகின்றனர். சில நேரம் சமூகவிரோதச் செயல்பாடுகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கும்கூட, இது காரணமாக அமைந்துவிடக்கூடும்.

பெற்றோர் கண்காணிப்பது எப்படி?

ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உட்படப் பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்குப் பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும். தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, வாரிசுகள் இணையத்தைக் கவனமாகப் பயன்படுத்துவார்கள்.



இணைய அடிமைத்தனம்

உடல்நலப் பாதிப்புகள்

# தூக்கமின்மை மற்றும் பகல்நேர கிறக்கம்.

# அதிகப்படியான உடல் சோர்வு.

# கண் எரிச்சல், பார்வைத் திறன் குறைபாடு.

# முதுகு மற்றும் கழுத்து வலி.

# உடற்பயிற்சி இல்லாமை, நேரம் தவறிய உணவுப் பழக்கம்.

# வலைதளங்களைப் பார்த்துக்கொண்டே கொறிப்பதால் உடல் எடை பருமன்

# நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து தொற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து

# உடல் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தவறுதல்



மனநலப் பாதிப்புகள்

# எப்போதும் வலைதளப் பதிவுகளைக் குறித்த ‘எண்ணச் சுழற்சி’

# தன்னுடைய பதிவுகள் வரவேற்பைப் பெறுமா என்ற பதற்ற உணர்வு

# பதிவுகள் வரவேற்பைப் பெறாவிட்டால் தன்னம்பிக்கை இழத்தல், வெறுப்புணர்வு, குற்றவுணர்வு கொள்ளுதல்

# மன அழுத்த நோய், தற்கொலை எண்ணம்

# கவனக்குறைவு, மறதி

# ஸ்மார்ட்ஃபோன், இணையம் கிடைக்காத நேரத்தில் எதையோ பறிகொடுத்த உணர்வு, தூக்கமின்மை, எரிச்சல்

# ‘போன் தொலைந்துவிடுமோ, இணையம் கிடைக்காமல் போய்விடுமோ, பேட்டரி திறனை இழந்துவிட்டால் என்ன செய்வது’ என்பது போன்ற பதற்ற உணர்வுக்கு நோமோஃபோபியா (Nomophobia) என்று பெயர்.

(அடுத்த வாரம்: தப்பிக்க வழி உண்டா?)

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x