எங்களுக்குக் கோபம் வந்தா...

எங்களுக்குக் கோபம் வந்தா...
Updated on
1 min read

இருவர் தொடர்புகொள்ளப் பேச்சு சிறந்த வழி. ஆனால் பேசிக்கொள்ளும் இருவருக்கும் ஒரே மொழி தெரிந்திருக்க வேண்டுமே! சரி, பேச வேண்டாம் சைகை, உடல் அசைவு, முக பாவனை ஆகியவை மூலமாகத் தொடர்புகொள்ளலாம் என்றால், அதுவும் கலாச்சாரத்துக்குக் கலாச்சாரம் வேறுபடுமே! “நீங்கள் செய்வீர்களா…செய்வீர்களா?” எனத் தமிழரிடம் கேட்டால் தலையாட்டி பொம்மைபோலத் தலையை ஆட்டுவதன் மூலமாகவே ஒப்புதலைத் தெரிவிப்பார்.

இதே கேள்வியை அமெரிக்கரிடம் கேட்டால், மேலும் கீழும் தலையாட்டிச் சரி என்பார். இப்படிப் பல்வேறு மக்கள் தங்கள் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை மட்டும் உலகளவில் பெரும்பாலான மக்கள் ஒரே மாதிரி முக பாவனையில் தெரிவிக்கிறார்களாம்.

கோபம், வெறுப்பு, அவமானம் ஆகிய மூன்றும் கலந்த கலவையான உணர்ச்சியை வெளிப்படுத்தும்போது பலவிதமான மக்கள் ஒரே மாதிரி முகபாவனையில் வெளிப்படுத்துகிறார்களாம். இப்படிச் சொல்வது, அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக்கழகப் எலெக்டிரிக்கல் மற்றும் கணினிப் பொறியியல் துறைப் பேராசிரியரான அலெக்ஸ் மார்டினெஸ்.

ஒஹியோ பல்கலைக்கழக மாணவர்கள் 158 பேரை நான்கு குழுக்களாகப் பிரித்து இயல்பாக உரையாடவைத்தார் அலெக்ஸ். நான்கு குழுவிலும் ஆங்கிலம், ஸ்பானிஷ், மாண்டரின், அமெரிக்க சைகை மொழியில் பேசுபவர்களை கலந்து பேசவைத்தார். அவர்களுடைய அங்க அசைவுகள், முக பாவனைகளை வீடியோவாகவும் ஒளிப்படங்களாகவும் டிஜிட்டல் கேமராவில் பதிவு செய்தார். முகத் தசைகளின் அசைவுகளைத் துல்லியமாக ஃபிரேம் பை ஃபிரேம் பதிவு செய்தார். கணினி அல்காரிதம் கொண்டு ஆயிரக்கணக்கான ஃபிரேம்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு அவற்றுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கண்டறிந்தார்.

இதன் அடிப்படையில், கோபத்தில் உயர்ந்து சுளித்த புருவங்கள், வெறுப்பில் திரண்ட கன்னங்கள், அவமதிப்பில் இறுக்கமாக வைத்திருக்கும் உதடுகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்துவதை ‘நாட் ஃபேஸ்’ என அழைக்கிறார்கள். இதுவே சர்வதேச முக பாவம் என ‘காக்னிஷன்’ பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார் அலெக்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in